இராமலிங்க அடிகளார்-தனிப்பெருங்கருணை நாள்

இராமலிங்க அடிகள் துறவியைப் போல வாழ்ந்தாலும், தன் மீது அன்பு கொண்ட அன்பர்களுக்காகவும், அடியார்களுக்காகவும் மிகவும் மனம் இரங்குவார். அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் கண்டு மனம் வருந்துவார். வடலூர் இராமலிங்க அடிகள் தமிழ், வடமொழி மற்றும் பல மொழிகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். எளியோரை வாழ்விக்க வந்த வள்ளல்.

அக்டோபர் 5 நாளை இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” என்று கொண்டாடுவது, விழாவுக்கான இலச்சினையை (லோகோ)வெளியிடுவது, மாணவர்களுக்கு வள்ளலாரின் கருத்துக்களைக் கூற கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துவது, வடலூரில் பல புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது

பிறப்பு: தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள அமைந்திருக்கும் மருதூர் என்னும் சிறிய கிராமத்தில் ஊரின் கணக்குப்பிள்ளையாகவும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமைய்யா. இவர் மனைவி பெயர் சின்னம்மையார், திருவள்ளூர் மாவட்டத்தில் போன்னேரிக்கு அருகில் உள்ள சின்னக்காவணத்தில் பிறந்து வளர்ந்தவர் .

இராமையாவுக்கு ஆறாவது மனைவியாக வாழ்க்கைப் பட்டவர் சின்னம்மையார் .முன் திருமணம் செய்த ஐந்து மனைவியருக்கும் குழந்தை பேறு இன்றி ஒருவர் பின் ஒருவராக இறக்கவே இராமைய்யா இவரை ஆறாவது மனைவியாக மனம் புரிந்தார்.

இராமையா மனைவி சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5ஆம் தேதி ஞாயிறு மாலை 5.54 மணியளவில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர். இராமலிங்க சுவாமிகள் பிறந்த எட்டு மாதத்திலேயே தந்தை இராமையாப் பிள்ளை சிவலோகம் அடைந்தார்.

சிதம்பர தரிசனம்: பிறந்த குழந்தைகளை முதன் முதலில் கோயிலுக்கு எடுத்துச சென்று வழிபடுவது அக்கால வழக்கம் .அவ்வாறே இராமலிங்கம் அவதரித்த ஐந்தாம் மாதம் இராமையா தன் மனைவி மக்களுடன் சிதம்பரம் சென்று வழிபட்டார்கள் .சிதம்பரத்தில் உள்ள சிற்சபையில் நடராஜ பெருமானை வழிப்பட்ட பின் சிதம்பர சகசியம் என்னும் திரையை தூக்கி தரிசனம் காட்டப் பெற்றது .அனைவரும் தரிசித்தனர். அந்த சமயம், கைக் குழைந்தையாகிய இராமலிங்கமும் தரிசித்தார். அனைவருக்கும் இரகசியமாய் இருந்த சிதம்பர ரகசியத்தை பார்த்த இராமலிங்கம் கல கல வென்று சிரித்தது. அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு போயினர் .சிதம்பரம் கோயில் பூசகராக இருந்த அப்பையா தீஷ்சதர் என்பவர் குழந்தை சிரிப்பு ஒலியைக் கண்டு கேட்டு ஆச்சரியப்பட்டு போயினர் .பல ஆண்டுகளாக இக்கோயிலில் நான் வேலைப் பார்க்கிறேன் பல குடும்பங்கள் குழைந்தைகளுடன் தரிசனம் பார்க்க வந்துள்ளார்கள். இப்படி ஒரு ஞான குழைந்தையை நான் பார்த்ததே இல்லை எனக்கருதி, இராமையாவிடம், இக்குழைந்தையை எடுத்துக் கொண்டு என் வீட்டிற்கு வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொண்டதின் பேரில், குருக்கள் வீட்டிற்கு இராமையா குடும்பத்துடன் சென்றார் .

அப்பையா தீஷ்சதர் குழைந்தையை பெற்று கீழே படுக்க வைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து குழைந்தை இராமலிங்கத்தை வணங்கினார். அதைப் பார்த்த இராமையா குடும்பத்தினர் ஆச்சரியத்தில் அதிசியத்தினர். பின் அவர்களுக்கு தேநீர் கொடுத்து மகிழ்ந்தார் .

இக் குழைந்தை சாதாரணக் குழைந்தை அல்ல கடவுளின் குழைந்தை அருள் ஞானக் குழைந்தை, இக்குழைந்தை என்னுடைய வீட்டிற்கு வருவதற்கு அடியேன் என்ன புண்ணியம் செய்தோனோ என்று மனம் உருகி ஆனந்தக் கண்ணீர் தழும்ப வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார் அப்பைய தீஷ்சதர்.

ஆண்டவர் காட்சி கொடுத்தல்: அனைவருக்கும் இரகசியமாக இருந்த சிதம்பர ரகசியத்தை ஐந்து மாதக் குழைந்தையாக இருந்த இராமலிங்க பெருமகனார்க்கு வெட்ட வெளியாக புலப்பட்டது. இறைவன் ரகசியத்தை வெளிப்படையாகக் காட்டி அருளினார் திரை தூக்கத் தாம் வெளியாகக் கண்ட அனுபவத்தை அவருடைய நாற்பத்தி ஒன்பதாம் ஆண்டில் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் அருள் விளக்க மாலை என்னும் தலைப்பில் அருட்பாடலாக எழுதி வெளிப்படுத்துகிறார் .

சென்னைக்கு குடியேறுதல்: ராமலிங்கம் பிறந்த எட்டாம் மாதத்தில் தந்தை ராமையா காலமானார். சின்னம்மை, தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த ஊரான  போன்னேரிக்குச சென்றார் சிலகாலம் பொன்னேரியில் வாழ்ந்த பின்பு தம் மக்களுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

மூத்த மகன் சபாபதி, காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதியிடம் கல்வி பயின்றார்.பின் புராணச் சொற்பொழிவில் வல்லவரானார். சொற்பொழிவுகளுக்குச் சென்று வருவதன் மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக் குடும்பம் நடத்தி வந்தார்.

ஓதாது உணர்தல்: இராமலிங்கப் பெருமானுக்கு பள்ளிப்பருவம் எய்தியதும் அண்ணன் சபாபதி தாமே கல்விப் பயிற்சியை தொடங்கி வைத்தார் .பின்னர் தான் பயின்ற ஆசிரியராகிய காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார்.

ஆசிரியர் சபாபதி சக மாணவர்களுடன் அமரச் சொன்னார் .இராமலிங்கமோ தனியாக அமர்ந்து கொண்டார் அதை கவனித்த ஆசிரியர் கண்டு கொள்ளாதது போல் பாடம் நடத்த ஆரம்பித்தார் .அன்று இராமலிங்கத்திற்கு முதல் நாள் முதல் பாடமாகும். ஆசிரியர் சொல்ல அனைத்து மாணவர்களும் சொல்ல வேண்டும். ஆசிரியர் சொன்ன பாடல்

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் .

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இனங்கவேண்டாம்

என்ற பாடலை ஆசிரியர் சொல்ல, இராமலிங்கம் தவிர அனைத்து மாணவர்களும் சொன்னார்கள். இராமலிங்கம் சொல்லாததைக் கவனித்த ஆசிரியர் ஏன் நீ சொல்ல வில்லை என்று கொஞ்சம் அதட்டலான குரலில் கேட்க்க, அதற்கு தயங்கி பதில் சொல்லாமல் இருந்தார் இராமலிங்கம். மீண்டும் நான் கேட்கிறேன் பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறாய் வாய் திறந்து பேசுடா என்று மிரட்டுவது போல் கேட்டார் ஆசிரியர் .

அப்போது இராமலிங்கம் ஐயா நீங்கள் நடத்திய பாடத்தில் ஒவ்வொரு வரியிலும் அமங்கலமான வார்த்தையில் முடிகிறது ஆதலால் நான் அப்படி சொல்ல விரும்ப வில்லை என்று பதில் அளித்தார் .ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது. என்ன அருமையான கருத்து கலந்த வரிகள் உள்ள பாடலாகும் அதைப்போய் அமங்கலம் என்று சொல்கிறாய். அப்படியானால் நீ பெரிய அறிவாளியா? உங்கள் அண்ணன் சபாபதி என்னிடம் பயின்று இன்று பெரியபுராண சொற்பொழிவாளராகி குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி வருகிறார். அவருடைய தம்பியாகிய நீ இப்படி குதற்கமாக பேசுகிறாயே என்று வினவியதுடன் .அப்படியானால் நீயே ஒரு பாடலை சொல் பார்ப்போம் என்று கிண்டலாக அதட்டி கேட்க்க. (இதற்கு அருட்பாவில் ஆதாரம் இல்லை)

இராமலிங்கம் மிகவும் மிகுந்த மரியாதையுடன் பாடலை பாட ஆரம்பித்தார் .அவர் பாடிய பாடல் வருமாறு…

ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற

உத்தமர் தம் உறவு வேண்டும்

உள் ஒன்று வைத்துப் புறம ஒன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெரு நினது புகழ் பேச வேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெரு நெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியாது இருக்க வேண்டும்

மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை

மறவாது இருக்க வேண்டும்

மதி வேண்டும் நின கருணை நிதி வேண்டும் நோயற்ற

வாழ்வில் நான் வாழ வேண்டும்

வேண்டும் வேண்டும் என்று முடியும் பாடலை பாடிக் காட்டினார் .அதைக் கேட்ட ஆசிரியர் அதிசயித்து போயினர். அனைத்து மாணவர்களும் ஆச்சரியத்தில் அமைதி யாயினார்கள். இராமலிங்கம் உனக்கு பாடம் சொல்லும் தகுதி எனக்கு இல்லை .ஏதோ சிறு பிள்ளை என்று மிரட்டி விட்டேன் என்னை மன்னித்துவிடு என்று குரல் கம்மிடவும் குறு நா உளறவும் படபடத்து பதில் உரைத்தார் .

இராமலிங்கரின் அறிவுத் தரத்தையும், பக்குவ நிலையையும்,கந்தக் கோட்டஞ் சென்று கவி பாடும் திறமையையும் கண்ட மகா வித்துவான், –இராமலிங்கம் கல்லாது உணரவும்,சொல்லாது உணரவும், உணர்த்தவும் வல்லவர் என்று உணர்ந்து கல்விக் கற்பிப்பதை கைவிட்டு விட்டார்

அன்றிலிருந்து பள்ளிக்கு செல்லாமல் சென்னையில் உள்ள கந்தசாமி கோயிலுக்குச் சென்று கந்த கோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி அடைந்தார். இளம் வயதிலேயே இறைவன் மீது பல பாடல்களை இயற்றிப் பாடினார்.

இராமலிங்கப் பெருமான் எந்த பள்ளியிலும் பயின்றதும் இல்லை, எந்த ஆசிரியரிடத்தும் படித்தது இல்லை. கற்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கற்றார் கேட்க வேண்டுவனவற்றை இறைவனிடமே கேட்டார். கல்வியும், கேள்வியும் கருத்தும் இறைவனிடமே பெற்றதே தவிர வேறு யாரிடமும் கற்கவில்லை,வேறு எந்த நூல்களில் இருந்தும் படித்து தெரிந்து கொள்ளவில்லை என்பதை உலக மக்கள் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் இராமளிங்கப் பெருமானாரைப் பள்ளியில் பயிற்றாது தானே கல்வி பயிற்றினார். குமாரப்பருவத்திலே என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியரை இன்றியே என் தரத்திற் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்வியை, என் உள்ளகத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர் என்று உரைநடைப் பகுதியான ”சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெரு விண்ணப்பத்தில் எழுதி வைத்துள்ளார்.

தமிழ் மொழியின் சிறப்புப் பற்றி: இடம்பத்தையும் ஆராவாரத்தையும், பெருமறைப்பையும், போது போக்கையும் உண்டு பண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது, பயிலுதற்கும், அறிதற்கும் மிகவும் லேசுடையதாய், சாகாக் கல்வியை இலேசிலே அறிவிப்பதாய்த் திருஅருள் வலத்தாற் கிடைத்த தென்மொழியாகிய தமிழ் மொழி யினிடத்தே மனதை பற்ற செய்து அத் தென்மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாட்டுவித்து அருளினீர் என்று தமிழ் மொழியின் சிறப்பினையும் தெளிவுப் படுத்துகிறார்

கந்தகோட்ட வழிபாடு: கல்வி கற்க பள்ளிக்கு செல்லாத இராமலிங்கம் வீட்டிலும் தங்காமல் பள்ளிக்கும் செல்லாமல் நாள்தோறும் சென்னையில் உள்ள கந்த கோட்ட முருகப் பெருமானைப் பாடி வழிபடுவதை வழக்கமாக கொண்டார்கள். கந்தசாமிக் கோயில் என்று வழங்கப் பெற்ற அதனைக் கந்தக் கோட்டம் என வழங்கத் தொடங்கியவர் இராமலிங்கப் பெருமானாரே.

ஒரு கட்டத்தில் மீண்டும் சென்னைக்கே வந்த ராமலிங்கம் அடிக்கடி கந்தசாமி கோயிலுக்குச் சென்றார். கந்தகோட்டத்து முருகனை வழிபட்டு மகிழ்ச்சி யடைந்தார். இளம்வயதிலேயே இறைவன்மீது பாடல்கள் இயற்றிப் பாடினார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் கோயில்களில் சுற்றிவந்த ராமலிங்கத்தை அண்ணன் சபாபதி கண்டித்தார். ஆனால், ராமலிங்கம் அவருக்குக் கட்டுப்படவில்லை. எனவே, அண்ணன் தன் மனைவி பாப்பாத்தி அம்மாளிடம் ராமலிங்கத்துக்குச் சாப்பாடு போடுவதை நிறுத்துமாறு கடுமையாக உத்தரவிட்டார். பாசமான அண்ணியின் வேண்டுகோளுக்கு இணங்கிய ராமலிங்கம், வீட்டில் தங்கிப் படிப்பதாக உறுதியளித்தார்.

உணவு: இராமலிங்கம் உணவைப்பற்றி எப்போதும் நினைத்ததில்லை, பசி எனபது என்னவென்று தெரியாமல் இறைவன் மீது பற்றுக் கொண்டு தோத்திரம் செய்வதும், பாடல் இயற்றுவதுமே அவர் பெரும்பணியாகக் கொண்டார். வீட்டில் உணவு இல்லாவிட்டாலும், அவர் பசியை அறிந்து இறைவனே உணவு வழங்கி பசியைப் போக்கியுள்ளார் .

இறைவனால் வருவிக்க உற்றவர் ஆயிற்றே இராமலிங்கம், அவர்ப் பசியைப் போக்குவது இறைவன் கடமை அல்லவா! ஆதலால் இறைவனே எக்காலத்தும் அவர் பசியைப் போக்கியுள்ளார் இருந்தாலும் தன்னுடைய அண்ணியார் அன்பில் கட்டுப்பட்டு வீட்டிற்கு வருகிறேன் என்று ஒப்புதல் அளித்தார்.

ராமலிங்கத்துக்கு வீட்டில் மாடியறை ஒதுக்கப்பட்டது. புத்தகங்களோடு அவர் மாடியறைக்குச் சென்றார். சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அறையிலேயே தங்கி முருக வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். ஒரு நாள் சுவரிலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தணிகை முருகன் தனக்குக் காட்சி யளித்ததாகப் பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

சொற்பொழிவு: சென்னையில் மிகவும் பிரபலமானவர் சோமு என்பவராகும் ,தங்கம் வைரம் வியாபாரம் செய்யும் தொழில் உடையவர்,அவர் ஒவ்வொரு வருடமும் ஆன்மீக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து பெரிய பெரிய வித்துவான்களை வரவழைத்து சொற்பொழிவு நிகழ்த்துவது வழக்கம்.

அந்த வருடம் இராமலிங்கம் அண்ணார் சபாபதியை புராணச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.சபாபதி சொற்பொழிவு என்றால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்

புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, அன்று உடல்நலம் குன்றியதால் ஒப்புக் கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.

அன்றைய தினம் சபாபதியின் சொற்ப் பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அண்ணன் சொன்ன படியே, அண்ணாருடைய நிலைமையை சோமு ஐயா அவர்களிடம் எடுத்துரைத்தார், வேண்டா வெறுப்பாக சம்மதித்து ஒப்புக் கொண்டார். சபாபதி அவர்கள் வரவில்லை என்பதை அறிந்த மக்கள் மகிழ்ச்சியை இழந்தனர், கூட்டத்தில் சலசலப்பு காணப்பட்டது .

இராமலிங்கம் விழா மேடைக்கு வந்தார். எல்லோரும் அதிசியமும் ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டு இருந்தார்கள் .

இராமலிங்கம் சேக்கிழார் பாடிய ”உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அறியவன், நிலவுளாவிய நீர் மலிமேனியன் ,அலகில் சோதியன் அம்பலத்து ஆடுபவன் .அவன் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்” என்ற பாடலை மனமுருகப் பாடி அதற்கு விளக்கம் சொன்னார். அவற்றைக் கேட்ட மக்கள் உணர்வின்றி மெய்சிலிர்த்துப் போனார்கள். அதுதான் இராமலிங்கத்தின் கன்னி சொற்பொழிவாகும். அதன்பின் அவரிடம், சோமு ஐயா அவர்களும் மற்றும் உள்ள பெரியவர்களும் மறுநாளும் நீங்களே வந்து ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் என்றும், மற்றும் அங்கு கூடியிருந்தோர் அனைவரும் வெகுநேரம் வற்புறுத்தினர். ராமலிங்கமும் அதற்கு அண்ணாரைக் கேட்டு ஒப்புதல் அளிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.

மறுநாள் காலையில் சோமு ஐயா அவர்கள் ,தன்னுடைய சவாரி வண்டியில் சபாபதி வீட்டிற்குச் சென்றார். சாபாபதியைப் பார்த்து இன்று உன்னுடைய தம்பி இராமலிங்கத்தை சொற்பொழிவு செய்ய அனுப்பவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார் .சபாபதிக்கு ஒன்றும் புரியவில்லை. சரிங்க ஐயா அப்படியே அனுப்பி வைக்கிறேன் என்று ஒப்புதல் அளித்து அனுப்பி வைத்தார் .

தன்னுடைய மனைவி பாப்பாத்தியை அழைத்து, இது என்ன அதிசயம் என்று ஒருவருக்கொருவர் பேசி அதிசயித்துப் போனார்கள் இராமலிங்கமா! என் தம்பி இராமலிங்கமா! எனக்கு ஒன்றும் புரியவில்லை உனக்கு ஏதாவது புரிகிறதா தெரிகிறதா என்று தன மனைவியிடம் கேட்டார். எனக்கு இராமலிங்கத்தைப் பற்றித் தெரியும் ஆனால் இப்படி இந்த அளவிற்கு தெரியாதுங்க என்று கண்களில் நீர் பெருக உணர்ச்சி வசப்பட்டவராக பதில் அளித்தார் .

ராமலிங்கம் தன் பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்து வந்த ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபடுவது வழக்கமாகக் கொண்டார்.

வழிபடும் காலங்களில் கருத்தாழமுள்ள பக்திப் பாடல்கள் ஆயிரக் கணக்கில் பாடியும் எழுதியும் வைத்துள்ளார் .கருத்து வேறுபாடு இல்லாமல் அனைத்து தெய்வங்கள் பற்றியும் பாமாலை இயற்றி உள்ளார்,அவை அனைத்தும் மக்களுக்காக பாடியதாகும். தான் பாடிய பாடல்கள் அனைத்தும் பக்தி பாடல்களாக இருந்தாலும், உண்மையான தெய்வத்தை தேடிக்கொண்டே இருந்தேன், இந்த சிலைகள் எல்லாம் உண்மையான தெய்வங்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் என்கிறார். மாயை என்னும் இந்த உடம்பில் வாழ்ந்ததால் தத்துவ உருவங்களைப் பற்றி பாடல்பாட நேர்ந்தது. ஆன்மாவின் விழிப்பால் உண்மையான தெய்வத்தை தேடிக் கொண்டு உள்ளேன். உலகில் அனைத்தையும் உன்னுடைய சாயையால்தான் பார்க்கிறேன் என்றார்.

திருமணம்: பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார்.

தன்னுடைய அக்காள் மகள் தனக்கோட்டி, “தன்னுடைய தாய் மாமன் வள்ளலாரைத் திருமணம் செய்து கொள்வதில் மிகுந்த ஆசையும் ஆர்வமும் உள்ளார் என்பதை அறிந்து கொள்கிறார் வள்ளலார். தனக்கோட்டியின் குணம் இராமலிங்கத்திற்கு தெரியும். இராமலிங்கத்தின் குணம் தனக்கோட்டிக்குத் தெரியும். ஆதலால் இருவரும் சமத்திக்கின்றனர், உலக வழக்கபடி திருமணம் நடைபெறுகிறது.

முதல் இரவு இருவரும் உள்ளே சென்று அமைதியுடன் உட்கார்ந்து இருக்கிறார்கள். பருவத்தின் தலைவாசலில் கால் வைத்திருக்கும் கன்னிப் பெண் தனக்கோடி எத்தனை ஆயிரம் ஆசைகளை செஞ்சிலே தேக்கிக் வைத்துக் கொண்டு இங்கே வந்து அமர்ந்திருப்பாள் என நினைக்கத் தோன்றும். அவள் அமைதியாக அமர்ந்து இருக்கிறாள் .

இராமலிங்கம் ”தனக்கோடி” யைப் பார்த்து பேச தொடங்குகிறார். திருமணம் ஆன பெண்ணும், ஆணும் உள்ளம் கலந்து, உயிர்கலந்து, பின் உடல்கலந்து மகிழ வேண்டும் என்பதற்கே இந்த முதல் என்ற ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் நமக்காக உருவாக்கி உள்ள இந்த ”முதல் இரவு ”நீயும் நானும் தனிமையில் சந்தித்துப் பேசும் ”கடைசி இரவு ”என்பதை நீ அறிவாயா? என்று கேட்கிறார். அதற்கு எல்லாம் எனக்குத் தெரியும் என்கிறார் தனக்கோடி.

”நீங்கள் ஆசைகளை வென்றவர்! நான்… ஆசைகளைக் கொன்றவள்! என ஆசைகள் செத்து விட்டன..!  உங்களை நான் கடவுளாகக் கருதினேன்! இது யாருக்கும் தெரியாது! எனக்கு மட்டும்தான் தெரியும் ! எப்படியும் உங்களை கணவனாக அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மாவிடமும் பாட்டியிடமும் சொல்லி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன்! அதன்படி நம்முடைய திருமணம் நடந்தது!.

இராமலிங்கம் பிரமை பிடித்தவராக, தனக்கோடி சொல்வதை மேலும் கேட்டுக் கொண்டு உள்ளார்!

”உங்களை முழுவதுமாக உரிமை கொண்டாட வேண்டும் எனற பேராசைதான் உங்கள் மேல் காதலாக மலர்ந்தது. இப்போதுதான் என உள்ளம் குளிர்ந்த்து. உங்களை என்னைத் தவிர வேறு யாரும் தொட்டுவிடக் கூடாது,

”தனக்கோடி நீ…நீயா …பேசுகிறாய் “‘ ”ஆமாம் தனக்கோடி தான் பேசுகிறேன்….முன்னைவிட இப்போது எனக்கு உயர்வாகத்  தோன்றுகிறீர்கள்! எல்லா ஆண்கள் போல் இந்த முதல் இரவில் நீங்கள் என்னைத் தொட்டுத் …தழுவி …உறவு கொண்டிருந்தால் நீங்கள் சராசரி மனிதனாகப் போயிருப்பீர்கள், உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.

”சிற்றின்ப ஆசையை வேறு அறுத்து, ஆண்டவனின் பேரின்ப வீடு நோக்கி பெரும் பயணம் போகும் உங்களுக்கு நான் தடையாக நிற்கமாட்டேன். என்னை ஆட்கொண்ட தெய்வம் நீங்கள். இனி உங்கள் வழியே என்வழி! என்னை வாழ்த்தி வரம் அருளுங்கள்! என்று இராமலிங்கம் காலில் விழுந்து வழிபடுகிறாள் தனக்கோடி அம்மையார்!

இராமலிங்கம் கண்களுக்கு தனக்கோடி வடியுடை நாயகியாக, சரஸ்வதியாக, பார்வதியாக, மகாலஷ்மியாக, அருள் தெய்வமாக காட்சித் தருகிறார். ”தாயே” என்று கண்ணீரோடு கரம் குவிக்கிறார் .

தன்னை இராமலிங்கம் வணங்குவதை விரும்பாத தனக்கோடி ….

“‘சுவாமீ !” என்று இராமலிங்கம் கூம்பிய கரங்களைத் தொடுகிறார் !

உடனே….. அவர் ஸ்பரிசம் பட்டவுடனே அருள் வந்தவள் போல் ஆகிறாள். இருவருடைய கண்களிலும் ஒளி பிரகாசம் தோன்றுகிறது .

இராமலிங்கத்தின் உடலில் ஏறப்பட்ட ஒளி தனக்கோடியின் கைவழியாக அவள் மேனியிலும் பரவுகிறது..இருவரும் ஒன்றும் புரியாமல் திகைத்து போயினர் .இதுவே முதல் இரவில் நடந்த செயலாகும்.

தனக்கோடி அம்மையார், இராமலிங்கத்தின் அருள் பயணத்திற்கு எந்த தடையும் வராமல், மன மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்கிறார் .தனக்கோடி இராமலிங்கத்தின் கரம் பட்டவுடனே பிறவிப் பயனை அடைந்து விடுகிறார்.

ஒரு பெண்ணைத் தொட்டுள்ளேன் கலப்புக் கொள்ளவில்லை என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ராமலிங்கம் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன என்று அறிய விரும்பியவர். எனவே, 1858 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை அடைந்தார்.

அங்கே அவரைக் கருங்குழி கிராமத்து மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் சந்தித்துத் தன் ஊரில், தன் இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப் பட்ட ராமலிங்கம் மணியக்காரரின் இல்லத்தில் ஒன்பது வருடங்கள் தங்கியிருந்தார்.

ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண் கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக் கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பி வைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப் படுத்தி எண்ணெய் நிரப்பி வைக்க மறந்துபோனார்.

அன்றிரவு ராமலிங்கம் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந்தார். விளக்கில் ஒளி மங்கும் போதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!

வள்ளலாரின் கொள்கைகள்:

மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள். அவை:

01.கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.

02.கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட வேண்டும்.

03.சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.

04.புலால் உணவு உண்ணக்கூடாது.

05.சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.

06.இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.

07.எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

08.பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்பும் மாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

09.ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

10.எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

வள்ளலார்  மானிடருக்கு கூறும் அறிவுரைகள்

01. நல்லோர் மனதை நடுங்க வைப்பது.

02. ஏழைகள் வயிறை எரியச் செய்வது.

03.வலிய தலையிட்டு மானம்  கெடுப்பது.

04. தானம் கொடுப்போரைத் தடுப்பது.

05. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைப்பது.

06. பசித்தோர் முகத்தைப்  பாராதிருப்பது.

07. குருவை வணங்கக் கூசி நடப்பது.

08. கோள் சொல்லி குடும்பம்  கலைப்பது.

09. தந்தை தாய் பேச்சைத் தட்டி  நடப்பது.

10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசுவது.

மக்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வை அடைய எல்லோரும் தகுதி உடையவர்களே! அதற்கான முயற்சியை அனைவரும் மேற் கொள்ள வேண்டும், அதற்காக சமரச சன்மார்க்கத்தில் சேர வேண்டும் என்று வலியுறுத்தியவர் வள்ளலார்.

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு:

எல்லா உயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்.

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் வேண்டாம்.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம்.

எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

வேதம் ஆகமம், புராணம், இதிகாசம், சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம். அதில் உண்மையை சொல்ல வில்லை.

பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங்களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த ராமலிங்க அடிகள், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.

சமரச வேத தருமச்சாலை: கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867–ஆம் ஆண்டு, மே மாதம் 23-வைகாசி மாதம் பதினொன்றாம் தேதி ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை எனப் பெயர் மாற்றம் செய்தார்.

இந்தத் தருமச்சாலையில் மக்கள் வழங்கும் பொருள் உதவியைக் கொண்டு சாதி, மத, மொழி, இன, நிறம் நாடு,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்கிறது.

வள்ளலாரின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரைச் சுற்றிக் கூட்டம் பெருகியது. தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிலிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்களாக உபயோகப் படாமல் இருந்துவந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். தாம் தங்கிய அந்த இடத்துக்கு சித்தி வளாகத் திருமாளிகை என்றுபெயர் சூட்டினார்.

அங்கேஅவர் அடிக்கடி பிரமதண்டிகா யோகம் செய்து வந்தார். இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து தியானத்தில் இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் தேகத்தை அக்னிதேகமாக்கி வந்தார்.

இறைவனை ஒளி வடிவாகப் போற்றிய வள்ளலார், சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஓர் ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் வருடம் அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை’என்று பெயர் சூட்டினார்.

அன்று முதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல், அருவமாக நிறைந்து, அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

25.1.1872, தை மாதம் 13ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று வள்ளலார் இங்கு ஜோதி தரிசனத்தை துவக்கினார். அன்றிலிருந்து தற்போது வரையில் இவ்விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய நிலையில், ஜோதி தரிசனம் காண முடியும். அன்று காலை 6.30 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என ஆறு நேரங்களில் ஏழு திரைகளும் நீக்கப்படும். மாத பூசம் நட்சத்திர நாட்களில் இரவு 8 மணிக்கு, ஆறுதிரைகளை மட்டும் விலக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டுவர்.

142 வருடங்களாகஅணையாத அடுப்பு: வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது.

இந்த அடுப்பை அணைக்கவே கூடாது என்பதற்காக, இங்கு தீப்பெட்டியே வாங்குவதில்லை. இரவு வேளையில் சமையல் செய்யாத வேளையிலும் கூட, நெருப்புஅணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார்.  அன்னதானம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 142 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்படுகிறது. உணவுதயாரிக்க அரிசி, உப்பு பக்தர்கள் மூலமாகவந்துவிடுகிறது. தினமும் காலை 6 மற்றும் 8 மணி, பகல் 12, மாலை 5 மற்றும் இரவு 8 மணி என ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம்நடக்கும்.

திருக்காப்பிட்ட அறை: வள்ளலார் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில், 1873 அக்டோபரில் சன்மார்க்க கொடியேற்றி, அடியார்களுக்கு பேருபதேசம் செய்தார். சில நாட்களுக்குப்பின் சித்தி வளாகத்தில் ஒரு தீபம் வைத்து, அந்த ஜோதியை இறைவனாக வழிபடும்படி அறிவுறுத்தினார். 1874, தை 19ல், சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்றவர், அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். இந்த அறை, “திருக்காப்பிட்ட அறை’ எனப்படுகிறது. தைப்பூசம் முடிந்த இரண்டாம் நாளன்று இந்த அறை திறக்கப்படும். அன்று சத்திய ஞானசபையில் இருந்து, வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவை ஒரு பல்லக்கில் எடுத்துக்கொண்டு, திருக்காப்பிட்ட அறைக்கு கொண்டு செல்வர். மதியம் 12 மணிக்கு அறை திறக்கப்படும். மாலை 6 மணி வரையில் பக்தர்கள் ஜன்னல் வழியாக, வள்ளலார் சித்தியடைந்த அறையைத் தரிசிக்கலாம்.

வள்ளலாரின் கையெழுத்து: சத்திய தருமச்சாலையிலுள்ள வள்ளலார் சன்னதியில், அவரது விக்ரகம் இருக்கிறது. கடுக்காய் மையில் அவர் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் புத்தகம், அவர் ஏற்றிய ஜோதி மற்றும் ஞான சிம்மாசனம் ஆகியவை இங்கு உள்ளன.

வள்ளலார், கருங்குழியில் திருவேங்கடம் என்பவரின் வீட்டில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். இங்குதான் திருஅருட்பாவின் முதல் நான்கு திருமுறைகளை வெளியிட்டார். வள்ளலார், வெளிச்சத்திற்கு ஒரு விளக்கு வைத்துக்கொண்டு, இரவு நெடுநேரம் எழுதுவார். ஒருசமயம் திருவேங்கடத்தின் மனைவி, நீர் ஊற்றிய எண்ணெய் கலயத்தை வள்ளலார் அருகில் வைத்துச் சென்று விட்டார். வள்ளலார் அத்தண்ணீரை விளக்கில் ஊற்ற அது அணையாமல் எரிந்தது.

நித்ய அன்னதானம்: கருங்குழியிலிருந்து மேட்டுக்குப்பம் செல்லும் வழியில் தீஞ்சுவை நீரோடை இருக்கிறது. தண்ணீர் பஞ்சம் இல்லாதிருக்க வள்ளலார் உருவாக்கிய ஓடை இது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்கிறார்கள். இதற்கு அருகில், “வள்ளலார் தீஞ்சுவை நீரோடை தருமச்சாலை’ இருக்கிறது. இங்கு எந்த நேரத்திலும், எவ்வளவு நபர்கள் வந்தாலும் தொடர்ச்சியாக அன்னம்பரிமாறப்படுகிறது.

பசியாறும் பறவைகள்: மருதூரில் ராமலிங்க அடிகளார் பிறந்த வீட்டில், அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை ஓவியங்களாக வைத்துள்ளனர். இம்மண்டபத்தில் நெற்கதிர்கள்,தானியங்களை கட்டி தொங்க விட்டிருக்கின்றனர். இங்கு வரும் பறவைகளும்கூட, பசியாற வேண்டுமென்பதற்காகவே இந்த ஏற்பாடு. சத்திய தருமச்சாலையில் சமைக்கப்படும் உணவு, முதலில் காகங்களுக்குவைக்கப்பட்ட பிறகே பக்தர்களுக்கு பரிமாறப்படும்.

ஆதரவு மையம்:  தருமச்சாலை அருகில், வள்ளலாரின்சீடர் கல்பட்டு ஐயா ஜீவசமாதி இருக்கிறது. அந்திமக்காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இங்கு ஆதரவு மையம்செயல்படுகிறது. இவர்களை தாய்மைஉள்ளத்துடன் பராமரிக்கிறார்கள். வள்ளலார் கூறிய மந்திரமான, “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ எனச்சொல்லி இங்கு வழிபடுவது விசேஷம்.

வள்ளலாரின் மாணவர் தொழூர் வேலாயுதம், ஒளியான அருளைத் தரும் வள்ளல் என்ற பொருளில், “திருஅருள்பிரகாச வள்ளலார்’ எனக் குறிப்பிட்டார். இதன் பிறகே இவருக்கு, “வள்ளலார்’ என்ற பெயர் ஏற்பட்டது. மனிதன் தினமும் 21 ஆயிரத்து 600 முறை சுவாசிப்பதன் அடிப்படையில் சத்திய ஞான சபையைச் சுற்றிலும் இதே எண்ணிக்கையில், கண்ணிகள் தொடுக்கப்பட்ட சங்கிலி கட்டப்பட்டுள்ளது. அனைத்து தீபங்களுக்கும், தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வள்ளலாரின் உண்மையான படம் எடுக்கப்பட்டதில்லை. ஜோதி தேகமான அவர் வெண்மையானவஸ்திரம் அணிந்திருந்ததை கருத்தில் கொண்டு,தற்போதிருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.

தாயின் குணம்: கடலூர் மாவட்டம், மருதூரில் வாழ்ந்த ராமைய்யா, சின்னம்மை தம்பதியின் மகனாக 1823ம் ஆண்டு பிறந்தவர் ராமலிங்கம். தினமும் ஒரு அடியாருக்கு அன்னமிட்ட பிறகு சாப்பிடுவது சின்னம்மையின் வழக்கம். தாயின் இந்த குணம், பிள்ளைக்கும் ஏற்பட்டது. இதுவே பிற்காலத்தில் அவர் ஏழைகளுக்கு அன்னமிடும் சேவை செய்ய தருமச்சாலை அமைப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.

எண்கோண வடிவ சபை: இறைவன் ஒளி வடிவில் அருளுகிறார் என்பதை உணர்த்த வடலூரில் வள்ளலார் சத்திய ஞான சபையை உருவாக்கி னார். எண்கோண வடிவில் தாமரை மலர் போன்று அமைந்த இச்சபையின் முன்பகுதியில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. தினமும் காலை 11.30 மணி மற்றும் இரவு 7.30க்கு நடக்கும் பூஜையின் போது இந்த தீபத்துக்கும், இதன் பின்புறமுள்ள திரைகளுக்கும் பூஜை நடக்கும். பின்பு, முன் மண்டபத்திலிருக்கும் சிற்சபை, பொற்சபையில் தீபாராதனை செய்யப்படும்.

ஞானசபையின் நுழைவு வாயிலில், “புலை கொலை தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்’ (மாமிசம் உண்ணாதவர்கள்)  என்று எழுதப் பட்டிருக்கிறது. அசைவத்தை நிறுத்த விரும்புவோர் இதனுள் சென்று வருகின்றனர். இச்சபையில் வள்ளலார் இயற்றிய “அருட்பெருஞ்ஜோதி அகவல்” பொறிக்கப்பட்டுள்ளது.

அதிசயத்தின் அடிப்படையில்: வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

மக்களிடம் தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொல்லிவிட்டு, ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்கு கிறபடியால், தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் கண்டு ஆராதியுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று செய்தி அளித்தார்.

1874-ஆம் வருடம் தை மாதம் 19 ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்களான தொழுவூர் வேலாயுதமும், மற்ற தொண்டகர்களும் மூடப்பட்ட அறையின் வெளிப்புற கதவைப் பூட்டினார்கள்.

அன்று முதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல், அருவமாக நிறைந்து, அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

சத்திய ஞானசபை: மக்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வை அடைய எல்லோரும் தகுதி உடையவர்களே! அதற்கான முயற்சியை அனைவரும் மேற் கொள்ள வேண்டும், அதற்காக சமரச சன்மார்க்கத்தில் சேர வேண்டும் என்று வலியுறுத்தியவர் வள்ளலார்.

உலகில் வேறெங்கிலும் இல்லாத தனிப்பெரும் அமைப்பு இது. ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் வந்து பிரார்த்தனை செய்யத் தகுந்த இடம் இது. எண்கோண வடிவிலான இந்தக் கட்டடத்தை வள்ளலாரே வடிவமைத்தார்.

மையத்தில் நான்கு தூண்களைக் கொண்ட மண்டபமும் அதன்மீது பன்னிருகால் மண்டபமும், ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. நாற்கால் மண்டபத்தின் மையத்தில் தான் ஆண்டவர் ஜோதி வடிவில் இருக்கிறார்.

பன்னிருகால் மண்டபத்தில் ஒரு சுற்றுப் பிராகாரமும் பக்தர்கள் உட்கார்ந்து ஆண்டவனைத் தியானிக்க வழிபாட்டுக் கூடமும் இருக்கின்றன. ஜோதி தரிசனம் ஆனதும் பக்தர்களுக்குத் கற்கண்டும் தரப்படுகின்றன.

சித்திவளாகம்:  வடலூருக்கு அருகே மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது சித்திவளாகம். வள்ளலார் ஏற்றிவைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. வள்ளலார் சித்தபெற்ற அறையின் கதவு  பூட்டப்பட்டு இருக்கும் கதவுக்கு வெளியே அமர்ந்து தியானம் செய்யலாம்.

தினமும் இங்கே திருவருட்பா பாடல்களை அன்பர்கள் பாடிப் பிரார்த்தனை செய்கின்றனர். மாதா மாதம் பூச நாட்களில் அன்னதானம், சிறப்பு வழிபாடும் நடைபெறு கின்றன.

தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையை ஜன்னல் வழியாகப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.

ஜீவகாருண்ய ஒழுக்கம்:  வள்ளலார் அறிவுறுத்திய ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் முக்கியக் குறிக்கோள், பிற உயிர்களின் பசியை ஆற்றுவது.

சத்திய தருமச்சாலை: “ஜீவகாருண்ய ஒழுக்கமானது, மனிதருக்கு முக்தியை அருளும்” என்றார் அவர். ஜீவகாருண்ய வழியைக் கடைப்பிடிப்பது மிக எளிது.

“பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது? பசியின் காரணமாக, மனிதர்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவார்கள்? பசியினால் ஓர் உயிருக்கு உண்டாகும் வேதனைகள் என்னென்ன?” என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்த, பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி ஆராய்ந்திருக்கிறார். பசியைப் பற்றிய அவரது கருத்துகள் இங்கே:

பசி என்ற ஒன்று இருப்பதேன்?

பசி இல்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி யில்லாத போது, ஒருவருக் கொருவர் உதவ மாட்டார்கள். அப்படி உதவ வில்லை என்றால், மனிதநேயம் இல்லாமல் போய்விடும்.

பசி நோயினால் ஏற்படும் கொடுமைகள்:

பசி நோய் என்பது மிகவும் பயங்கரமானது. அந்நோயைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்.!

பெற்றவர்கள், பிள்ளைகளை விற்பார்கள்.!

இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.!

இதன் விளைவாக, வயதானவர்கள் பிற தேசங்களில், பிற வீடுகளில் கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து, கூனிக் குறுக நேரிடும்.

வீடு, மாடு, நிலம், மற்ற உடைமைகள் அனைத்தையும் விற்று, மக்கள் பசிப்பிணியை அகற்றப் பார்ப்பார்கள்.

முனிவர்களையும் யோகிகளையும் சித்தர் களையும் கூடப் பசி தாக்கும். அச்சமயங்களில் அவர்கள் பிச்சை கேட்டு ஊருக்குள் நுழைவார்கள். பிச்சை கிடைக்காவிடில் சித்தம் கலங்குவார்கள்.

எந்நேரமும் காமத்தை விரும்பும் காமுகர்கள் கூடப் பசிப்பிணி தாக்கும்போது, காமம் மறந்து கலங்குவார்கள்.

பசிப்பிணி தாக்கினால் என்னாகும்?

அறிவு மயங்கும். கடவுளைப் பற்றிய நினைப்பு அடியோடு ஒழிந்து போகும். சித்தம் கலங்கும்.

நம்பிக்கை குலையும்.

கண் பஞ்சடைந்து குழிந்துபோகும்.

காதில் இரைச்சல் ஏற்படும்.

நாக்கு உலர்ந்து போகும்.

கை, கால் சோர்ந்து துவளும்.

வார்த்தை குழறும்.

வயிறு திகு திகுவென எரியும்.

தாபமும் கோபமும் பெருகும்.

உயிர் விலகுவதற்கான அத்தனை அறிகுறிகளும் மேலும் மேலும் தோன்றும்.

நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய வேதனைகளும் ஒன்று திரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை.

பசி அகன்றால் அடையும் ஆனந்தம்: உணவு கிடைத்து, உண்டு பசியாறியவுடன், பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும் அகலும். தத்துவங்கள் மறுபடி தழைக்கும். உள்ளம் குளிரும்.

சித்தம் தெளியும். உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர்க்கும

தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும் மகிழ்ச்சியைவிட, பசியால் வேதனைப்படுபவர்கள் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், அதை உட்கொண்டபின் அடையும் ஆனந்தம் எப்படிப் பட்டதாக இருக்கும்? ஆதலால், உணவைக் கடவுளுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்ல முடியும்?

இந்தப் புண்ணியத்தைச் செய்கிற புண்ணியர்களை, எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது?

இவர்களை, எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளின் அம்ச மென்றே சத்தியமாக அறியவேண்டும்.

ஜீவகாருண்ய நன்மை: சூலைநோய், குஷ்டநோய் போன்ற தீராத வியாதிகளால் அவதிப்படும் இல்லறவாசிகள், அந்நோய்களிலிருந்து விடுபடுவார்கள் என்பது சத்தியம்.

பல நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தம் கொண்டவர் களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தனக்கு அற்ப ஆயுள் என்று ஜோதிடம் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ அறிந்து, மரணத்துக்குப் பயந்து கலங்கு கிறவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவற்றில் குறை உள்ளவர்கள், பசித்த ஏழைகளின் பசியாற்றினால் கல்வி, அறிவு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்க வல்ல போகங்கள் அனைத்தும் கிட்டும்.

வள்ளலார் சித்தி அடைந்த வளாகம்: பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகக் கொண்ட மக்களுக்குக் கோடையில் வெயில் வருத்தாது. மண்ணும் சூடு செய்யாது. பெருமழை, பெருநெருப்பு, பெருங்காற்று ஆகியவற்றால் துன்பம் உண்டாகாது.

கள்வர்களாலும் விரோதிகளாலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.

அரசாங்கத்தால் அவமதிக்கப்பட மாட்டார்கள். சிறைவாசம் போன்ற கொடுமைகள் நேரிடாது.

வயல்களில் முயற்சி இன்றியே விளைச்சல் பெருகும்.

வியாபாரத்தில் தடையின்றி லாபம் கிடைக்கும்.

கனவில் சென்று கட்டளையிட்ட பெருமான்: ஒரு சமயம் தருமச்சாலையில், மறுநாள் அன்னதானத் துக்குத் தேவையான அரிசி இல்லை என்ற நிலை. செய்தியைப் பணியாளர்கள், வள்ளலாரிடம் தயக்கத்துடன் கூறினர்.

வள்ளலார் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானம் செய்தார். தியானம் முடிந்தபின், அரிசியும் மற்றவையும் நாளைக்கு வரும் என்று கூறினார்.

மறுநாள் பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் போதே திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில் அரிசியும் பிற உணவுப் பொருட்களும் தருமச்சாலைக்கு வந்து சேர்ந்தன.

அவற்றைக் கொண்டு வந்தவர் வள்ளலாரிடம் அன்பு பூண்ட அன்பர் ஒருவர். முதல் நாளிரவு கனவில், வள்ளலார் வந்து அரிசியையும் மற்றவற்றையும் கொண்டு வந்து தருமாறு கூறியதாகவும், அதை உத்தரவாக எண்ணி உடனே வண்டி கட்டிக்கொண்டு கிளம்பி வந்ததாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.

உடல் வேறு! உயிர் வேறு ! ஆன்மா வேறு!

வள்ளலார் தருமச் சாலையின் வெளியே உச்சிப் பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் வள்ளலாரின் தலைக்கும் சூரியனுக்கும் இடையே ஓர் அக்னிக் கம்பம் இருப்பது போல் தோன்றும்.

இது அனைவருக்கும் பழக்கப்பட்ட காட்சியாக இருந்திருக்கிறது. இதைவிட இன்னொரு காட்சிதான் வள்ளலாரை வெறும் துறவியாக மட்டுமின்றி மாபெரும் சித்தராக உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஒருநாள் உச்சிவேளையில் தருமச்சாலையில் இருந்து வள்ளலார் வெளியே புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், கவலைப்பட்ட சண்முகம் என்னும் அன்பர் வெளியே வந்து தேடினார்.

ஓரிடத்தில் வள்ளலாரின் கை, கால் என்று அனைத்து அங்கங்களும் வெவ்வேறாகிக் கிடப்பதைக் கண்டு பயந்து பதறி மயங்கி விழுந்தார் அவர்.

உடனே வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் ஒன்றாகி, சண்முகத்தை எழுப்பி, “இனி இப்படி என்னைத் தேடி வர வேண்டாம்!” என்று கூறி அவருடன் தருமச்சாலைக்குத் திரும்பினார்.

பெய்யெனப் பெய்த மழை: கோடைகாலத்தில் தருமச்சாலைக்கு வந்தவர்களில் பலர் மழையில்லாத காரணத்தால் பயிர்கள் எல்லாம் வாடுகின்றன என்றும் கால்நடைகளும், மக்களும் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் வள்ளலாரிடம் முறையிட்டனர்.

சாலைக்கு உள்ளே சென்று கதவை தாள் போட்டு தியானத்தில் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார் .

ஒரு செம்பு நீரைத் தனது காலில் ஊற்றும்படி கூறினார் வள்ளலார். அன்பர்களும் அவ்வாறே செய்தனர்.

என்ன ஆச்சரியம்! சற்று நேரத்தில் மேகங்கள் திரண்டு நான்கு அங்குல அளவுக்கு மழை பெய்தது.

அது கேட்டு புதுப்பேட்டை என்னும் ஊரில் உள்ள அன்பர்கள் வடலூருக்கு வந்து தங்கள் ஊரிலும் மழை இல்லாதது சொல்லி வள்ளலாரை அழைத்தார்கள்.

வள்ளலார் அங்கு சென்று ஆறு குடம் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றுமாறு கட்டளையிட்டார். ஊர் மக்களும் அவர் சொல்படி செய்தனர். அவ்வளவுதான்!

புதுப்பேட்டை கிராமத்தில் தண்ணீர் பொங்கியது. ஆறு, கிணறுகளில் நீர் நன்கு ஊறிப் பெருகியது. நீரின் சுவையும் கூடியது. ஊரில் நல்ல மழையும் பொழிந்து செழித்தது.

வள்ளலார் வரவழைத்த தீஞ்சுவை நீரோடை: சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காண வருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது.

அது முதல் அந்த நீரோடை ‘தீஞ்சுவை நீரோடை’என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன.

வள்ளலார் கரம்பட்டதும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஆகிவிட்டது.

கருணையின் இருப்பிடம்: ஒருமுறை வயலில் விளைந்திருந்த நெல் வாடியிருப்பதைக் கண்டு வருந்திப் பாடினார். இதனால் மக்கள் அவரை தங்களை வாழ்விக்க வந்த வள்ளலாகக் கருதி, “வள்ளலார்’ என்ற அடைமொழி தந்தனர். அவர் மக்களுக்கு நற்சிந்தனைகளை போதித்து வந்தார். அவருக்கு 44 வயதாக இருந்தபோது, ஒரு அம்மன் கோயிலில் சொற்பொழிவிற்காக சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, அம்மனுக்கு பலி கொடுப்பதற்காக வைத்திருந்த ஆடு, கோழிகளை பலியிடாமல் இருந்தால் தான் பாடுவதாக சொன்னார் வள்ளலார். அவற்றை பலியிடுவதை நிறுத்தினால் தெய்வ குற்றம் என்று சொல்லி தங்கள் பயத்தை வெளிப்படுத்தினர் மக்கள். அவர்களுக்கு “ஜீவகாருண்ய’ உண்மைகளை உணர்த்தி பேசினார் வள்ளலார். இப்படி கருணையின் இருப்பிடமாகவே திகழ்ந்த வள்ளலார்.

இப்படியே வாழ்க்கையை கடந்த வள்ளலார் தமது வாழ்வின் நிகழ்வுகள் அத்தனையையும் பாடல்களாகப் பாடி இருக்கிறார்

ஒரு கேள்வியும் வள்ளலாரின் பதிலும்:

கேள்வி: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே… அவற்றை இம்சை செய்து ஆகாரமாக உட்கொண்டால், உயிர்க்கொலை செய்து உண்பது போல்தானே ஆகும்?

வள்ளலாரின் பதில்: மரம், புல், நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். ஆனால், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துகள் வெறும் சடங்களே.

அவ்வித்துகளை நாமே விதைத்து, உயிர் விளைவு செய்ய முடியும். அப்படி நாமே விளைவு செய்த அந்த உயிர்களைக் கொல்லாமல், அந்தத் தாவரங்களில் உயிரின்றி, உயிர் தோன்று வதற்குத் தகுதியுள்ள சடங்களான வித்துகளையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்கு ளையும் தழை களையுமே ஆகாரமாகக் கொள்கிறோம். தாவரங்களை வேருடன் பிடுங்கி ஆகாரமாகக் கொள்வதில்லை.

வளர்ந்த தாவரங்களின் விதைகள், காய், கனிகள் முதலானவற்றைப் பறிக்கும்போது, மனிதர்களின் நகம், ரோமம் ஆகியவற்றை அகற்றும்போதும் துன்பம் உண்டாகாதது போல் தாவரங்களுக்கும் துன்பம் உண்டாவதில்லை.

மேலும், தாவர வர்க்கங்களுக்கு மனம் முதலான அந்தக் கரணம் இல்லாததாலும்,அது உயிர்க் கொலையும் அல்ல; துன்பம் உண்டு பண்ணுவதும் அல்ல. எனவே, இது ஜீவகாருண்ய விரோதமாகாது.

சித்த மருத்துவர் வள்ளலார்: பல மூலிகைகளின் குணங்களை அட்டவணையாக எழுதியிருக்கிறார். சஞ்சீவி மூலிகைகள் பலவற்றைப் பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார். சஞ்சீவி மூலிகைகளின் துணைகொண்டு இறந்தவர்களை மறுபடி உயிர்ப்பிப்பது எப்படி என்று எழுதியிருக்கிறார். அங்கங்கள் துண்டுகளாக வெட்டுப் பட்டால், அவற்றை மீண்டும் இணைக்க எந்த மூலிகையை உபயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வலுவான, திடமான சரீரத்துக்கு அவர் கூறும் மருத்துவக் குறிப்பு:

கெட்டி மிளகு அரைகிலோ எடுத்துக்கொண்டு, அதைப் பேயன் வாழையின் கிழங்குச் சாற்றில் மூன்று நாள் ஊறவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் ஊறவைத்துப் பகலில் நிழலில் காயவைக்க வேண்டும்.

இந்த முறையைப் பின்பற்றி, வாழைக் கிழங்கின் சாறில் ஊறவைத்து, நிழலில் காயவைத்த மிளகை, அதன்பின் இளநீரில் மூன்று நாள், கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் மூன்று நாள், பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் மூன்று நாள், பசுங்கோமயத்தில் மூன்று நாள், பசும்பாலில் மூன்று நாள் எனத் தனித்தனியாக இரவில் ஊறவைத்து, பகலில் நிழலில் காயவைத்து, தேய்த்துப் புடைத்து எடுத்து வைத்துக்கொண்டு, தினம் காலையில் ஐந்து மிளகுகளை உட்கொண்டால் வலுவான, திடமான சரீரம் அமையும்.

வள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை:

01. சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.

02. இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கிற அசுத்தங் ளையும் கை, கால் முதலிய உறுப்புகளில் உள்ள அழுக்கு களையும் வெந்நீரால் தேய்த்துச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பின் வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதன்பின் கரிசலாங்கண்ணி கீரைத் தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்தேய்த்து வாய் கழுவ வேண்டும்.

03.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை யிலை 3.அதன்பின் கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை யிலை சேர்ந்த கலவை கால்பங்கு, சீரகம் கால்பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடி யாகத் தயாரித்து வைத்துக் கொண்டு, அந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்துத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கலாம்.

அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரண்டு டம்ளர் திரவம், ஒரு டம்ளராகச் சுண்டியபின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

04. காலை வெயில் உடல்மேல் படாதவண்ணம் மேற்சட்டை அணியவேண்டும்.

05. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவேண்டும். பின், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சற்று நேரம் கடவுளை வணங்க வேண்டும்.

06. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூடாது. மிக நிதானமாகவும் (சோம்பேறித்தனத்துடன்) உண்ணக் கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.

07. கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது. ஆனால், கருணைக் கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றைக் குறைவாகவும் மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பைக் குறைவாகச் சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்ல எண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.

08. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகப் படுத்தலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது பயன்படுத்த வேண்டும்.

09. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரா அன்னங்களை அடிக்கடி சாப்பிடக் கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.

10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

11. பருப்பு வகைகளில் துவரம் பருப்பை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

12. விருந்து உணவு என்றாலும், சற்றுக் குறைவாகவே புசிக்க வேண்டும்.

13. வெந்நீரையே குடிக்கவேண்டும்.

14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று உலாவ வேண்டும். காற்று அதிகமாக இருந்தால் உலாவக் கூடாது. கடும் வெயில், பனி, மழை இவை தேகத்தில் படுமாறு உலவக்கூடாது.

15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் தியானம் செய்யலாம். தோத்திரங்கள் சொல்லிக் கடவுளை வணங்கலாம். புத்தகங்களைப் படிக்கலாம். வீட்டு விவ காரங்களைப் பற்றிப் பேசலாம்.

16. பிறகு இரவு உணவு. பகல் உட்கொண்டதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும்.

17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைச் சேர்க்கக் கூடாது. இரவில் சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.

18. இரவுச் சாப்பாடு முடிந்து இரண்டு மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.

19. பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், உறவு செய்வதற்கு அரைமணி நேரம் முன்னிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன்பின் உறவு கொள்ளவேண்டும். ஒருமுறைக்கு மேல் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது |

20. உடலுறவு முடிந்தபின் உடலைத் தூய்மைப் படுத்திக் கொண்டு கடவுளைத் தியானம் செய்து, பின் உறங்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக் கொள்வது அதமம். எட்டு தினங்களுக்கு ஒருமுறை என்றால் மத்திமம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.

21. படுக்கும்போது இடதுகைப் பக்கமாகவே உறங்க வேண்டும். அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்கக்கூடாது.

22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.

23. உரத்துப் பேசுதல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.

24. பதற்றம் மிகுந்தால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, பதற்றம் கூடாது.

25. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறையாவது காய்ச்சிய நல்லெண்ணெயைத் தலையில் தேய்த்துக்கொண்டு முழுக வேண்டும்.

26. புகை, கஞ்சா, கள், சாராயம்,மாமிசம் போன்றவை கூடாது.

27. மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.

வள்ளலார் பிரார்த்தனை: ஒருவன் பிரார்த்தனை செய்யும்போது அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலக மெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் தனி ஒரு மனிதருக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுதான்:

“பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட் ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய். நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே…”

பொன்னான மண்: பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், சென்னையில் ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க முற்பட்டு. அம் முயற்சியில் தமது பெருஞ்செல்வம் அனைத்தையும் இழந்தார்.

ஒரு நாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க அடிகளார். சென்றார். அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச் சென்று, அவர்தம் கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையை யெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறைய தண்ணீர் கொண்டுவருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல் தண்ணீருக்குள் விழுந்தது. தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட மாஜி செல்வந்தர், அந்த வித்தையைத் தனக்குக் கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

வள்ளலார் சொன்னார்: இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான். ஆனால் ஒன்றே ஒன்று, மண்ணாசை, பொன்னாசை,பெண்ணாசை அறவே அற்றவர்களுக்கு மட்டுமே இந்த வித்தை பலிக்கும் என்றார் .

நீங்கள் இதுவரையில் சாப்பிடாத ஒரு உணவு பதார்த்தம் உங்கள் முன் இருக்கிறது. அதன் ருசியை அனுபவிக்க வேண்டும், எப்படியாவது அதை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற ஆசை உங்கள் உள் மனதிற்குள் எழும்புகிறது. இது இயல்பு. அந்த பதார்த்தத்தை நீங்கள் வாயில் போட்டு உண்ணும் வரையில் அதன் ருசி உங்களுக்குத் தெரியாது. அதுவரையில் அதன் மீதிருக்கும் ஆசை கூடிக்கொண்டு போகுமே தவிர சற்றும் குறையாது.

அதேபோல் இறைவன் நமக்கு பிடித்த மானவராகவே இருக்கிறார். அவரை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதால் மட்டும் நாம் அவரை அடைந்துவிட முடியாது. அவரை நாம் இந்திரியங்கள்,கரணங்கள்,ஜீவனைக் கடந்து ஆன்மாவில்,மனதை வைத்து, அனுபவித்து மகிழ்ந்தால் தான் இது சாத்தியமாகும்.ஆன்மாவில் இருக்கும் அருள் அமுதம் சுரந்து ,அதை அனுபவித்தால் தான் இறைவனுடைய சுவை என்ன என்பதை அறிய முடியும். எனவே, இறைவனை அடையவேண்டும் என்ற ஒரு உத்வேகத்துடன் செயல்படுங்கள். அவர் மீது வைத்திருக்கும் ஆசையை மட்டும் விட்டுவிடாதீர்கள்.

இறைவன் உருவமாக இல்லாமல், ஒளி வடிவில்தான் அருள் செய்கிறான். மேல் உலகம், கீழ் உலகம், நடு உலகம்,என அளவிடமுடியாத அண்டங்கள் உள்ள அனைத்து உலகங்களிலும் நிறைந்திருந்து,அருள் விளக்கமாக அவர் அசைந்தாடுகின்ற,அனைத்தையும் ஆட்டுவிக்கின்ற ”அருட்பெரும்ஜோதி கடவுள்” ஒருவரே யாகும். என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.

சத்தியஞான சபை:

வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார்.

அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தமக்கு அறிவித்த வண்ணம், உத்தரஞான் சித்திபுரம் என்றும், உத்தர ஞான சிதம்பர மென்றும் திருவருளால் ஆக்கச் சிறப்புப் பெயர்களும், பார்வதி புரமென்றும்,”வடலூரென்றும்” உலகியலாற் குறிக்கப் பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியின் இடத்தே ,இயற்கை விளக்க நிறைவாகி உள்ள .ஓர் சுத்த சிவானுபவ ஞான வெளியில் ”சத்திய ஞானசபை” அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கட்டளைப்படி நிறுவுகிறார் .

இது ஒரு கோயில் அல்ல! இறைவன் வந்து அமர்ந்து உலக மக்களுக்கு அருளை வழங்கும், ‘ஞான சிங்காதன பீடமாகும்’, இங்கே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒளியாக வீற்று யிருக்கின்றார் என்பதை விளக்கும், ”சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான” சபையாகும்.

ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கும் சிற்சபையாகும், ஆதாவது ஆன்மா இருக்கும் இடமாகும். நமது தலைபாகமாகும். என்பதை வள்ளலார் விளக்கியுள்ளார். ஆன்மாவை அறிந்தவர்கள் இறைவனை அறியலாம், இறைவனுடைய அருளைப் பெற்று மரணத்தை வெல்லலாம் என்பது வள்ளலார் முக்கிய கொள்கையாகும், மரணத்தை வென்றால்தான் இறைவனை அடைய முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்

ஆன்மாவும் ஒளியாக உள்ளது! இறைவனும் ஒளியாக உள்ளார்! ஒளியும் ஒளியும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக… ஒளிக் கடவுளான உண்மைக் கடவுளை ,உலக மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்பதற்க்காக தோற்றுவிக்கப் பட்டதுதான், ”சத்திய ஞானசபை”.

நான் அடைந்த பேரின்பத்தை இவ்வுலகத்தில் உள்ள அனைவரும் பெற வேண்டும் ,என்று இறைவனிடம் உலக உயிர்களுக்காக வேண்டுகிறார் .

வள்ளலாரின் உரைநடை நூல்கள்:

01. மனுமுறைகண்ட வாசகம்.

02. ஜீவகாருண்ய ஒழுக்கம்

படைப்பு: இவர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவருட்பா என்றழைக்கப்படுகிறது. இதில் ஆயிரம் பாடல்கள் உள்ளது. ஆறு திருமறைகளாக பகுப்பட்டுள்ளது. இராமலிங்க அடிகளின் தலைமைச சீடர் தொழூவர் வேயுதம் அவர்கள் முதன் முதலில் இவருடைய பாடல்களை நான்கு திருமுறைகளாக பகுத்து வெளியிட்டார்.

பிறகு ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு முன்னாள் தமிழக அறிநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதிலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். அதற்கு ஊரன் அடிகள் என்பார் காலமுறை பதிப்பு வெளியிட்டார்.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்தேன்

என்கிறார் ஞான சத்குரு வள்ளலார். எல்லாவுயிரையும் தம் உயிராய் எண்ணி வாழ்ந்த மகான் திருவடி போற்றுவோம்.

இப்பகுதியிலிருந்து ஒரு சில கேள்வி பதில்களைப் பார்ப்போம்.

* திருவருட்பாவை எழுதியவர் – இராமலிங்க அடிகளார்

* சிறப்பு பெயர் –  திருவருட்பிரகாச வள்ளலார்

* பிறப்பிடம் – கடலூர் மாவட்டம் மருதூர்

* பெற்றோர் –  இராமையா – சின்னமையார்

* வாழ்ந்த காலம்: 05.10.1823 முதல் 30.01.1874

* திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்பு பெயர் பெற்றவர் – இராமலிங்க அடிகளார்

* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.

* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது – அறச்சாலை

* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது – ஞானசபை

* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் – இராமலிங்க அடிகளார்.

* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் – திருவருட்பா.

* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் – இராமலிங்க அடிகளார்

* வள்ளலார் பாட்டை “மருட்பா” என்று கூறியவர் – ஆறுமுக நாவலர்.

* கடவுளை “கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்”, என்றும் “உயிரில் கலந்தான் கருணை கலந்து” என்றும் பாடியவர் – இராமலிங்க அடிகளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: