இந்தியாவின் முதல் ஆங்கிலச் செய்தித்தாள்- இந்திய இதழியல் வரலாறு
ஐரோப்பியர்களின் வருகையால் இந்தியாவில் விளைந்த நன்மைகளுள் ஒன்று இதழ்களின் தோற்றமாகும். இந்தியச் சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரையும் தொடர்பு கொள்ளுவதற்காக அவர்கள் இந்திய மொழிகளைப் பயின்றனர்; தங்களது மத போதனைகளை அம்மொழிகளில் நூல்களாக வெளியிட்டனர்.
1577ஆம் ஆண்டு கோவாவில் போர்த்துகீசியரால் தம்பிரான் வணக்கம் என்ற முதல் தமிழ்நூல் அச்சானது. இதுவே இந்தியாவின் முதல் அச்சு நூலாகும்.
கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய ஆங்கிலேயர்கள்தான் இந்திய இதழ்களின் தொடக்க முயற்சியாளர்கள் ஆவர். 1766ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகிய வில்லியம் போல்டஸ் என்பார் தமது இதழியல் முயற்சியை அறிக்கையாக வெளியிட்டார். வணிக வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டுவதோடு, தனிப்பட்டவர்கள் பற்றிய விவரங்களும் தம்மிடம் உள்ளதாக போல்ட்ஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அதனால் ஆங்கிலேய அரசாங்கம் அவரை இந்தியாவிலிருந்து வெளியேற்றியது. இவ்வாறு இந்தியாவில் முதல் இதழியல் முயற்சி அடக்கு முறைக்கு ஆளானது.
கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகள் கழித்து ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 1780ஆம் ஆண்டு சனவரி 29ஆம் நாள் பெங்கால் கெசட் அல்லது கல்கத்தா அட்வர்டைசர் என்ற செய்தி இதழை வெளியிட்டார்.
12”(inches)x 8”(inches) அளவில் இரண்டு பக்கங்களில் வார இதழாக ஆங்கில மொழியில் பெங்கால் கெசட் வெளியானது. இங்கிலாந்து இதழ்களில் வெளியான செய்திகள், விளம்பரங்கள், கடிதங்கள் முதலியன இவ்விதழில் இடம் பெற்றன. ஆங்கில அரசின் முறையற்ற செயல்களையும், அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கையையும் எள்ளல் நடையில் ஹிக்கி தமது இதழில் வெளியிட்டார். ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ், அவரது மனைவி, உச்ச நீதிமன்ற நீதிபதி எலிஜா இம்பே முதலியோர் பற்றியும் செய்திகளை வெளியிட்டார். அதனால் அரசின் அடக்குமுறைக்கு ஆளானார் ஹிக்கி. இரண்டே ஆண்டுகளில் 1782 மார்ச் மாதம் பெங்கால் கெசட் இதழ் நின்றது. எனினும், ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி, இந்தியச் செய்தித்தாள்களின் தந்தையாகக் கருதப்படுகிறார்.