இந்தியாவில் உயர்கல்வி

சுதந்திர இந்தியாவில் உயர்கல்வி எப்படி இருக்கிறது?

சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகளில் உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றோர் சர்வதேசப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். அரசால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் கல்வி நிறுவனங்களும் தர நிர்ணய அமைப்புகளும் இந்த வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளன.

புதிய உயர்கல்வி நிறுவனங்கள்

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் இருந்தன. ஆனால், அவற்றால் அனைவருக்கும் கல்வியைக் கொண்டுசேர்க்க முடியவில்லை.

புதிய துறைகளுக்கான படிப்புகளை உள்ளடக்க வேண்டிய தேவையும் இருந்தது. எனவே, புதிய உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கான திட்டங்களுக்கு இந்திய அரசு முன்னுரிமை அளித்தது. மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

1945இல் அமைக்கப்பட்ட சர்க்கார் கமிட்டி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி மையம்போல் அறிவியல், தொழில்நுட்ப பாடப்பிரிவுகளுக்கான உயர்தரமான கல்வியை வழங்குவதற்கான நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

அதன்படி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) 1951இல் கரக்பூரில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பாம்பே (1958), கான்பூர் (1959), மதராஸ் (1960), டெல்லி (1961) ஆகிய நகரங்களிலும் ஐஐடிகள் தொடங்கப்பட்டன. இன்று இந்தியாவில் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் 23 நகரங்களில் ஐஐடிகள் இயங்கிவருகின்றன.

ஐஐடி போன்ற தரத்துடன் மாநிலக் கல்லூரிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் வகையில் பிராந்திய பொறியியல் கல்லூரிகள் (ஆர்.இ.சி) தொடங்கப்பட்டன. இவை மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்பில் செயல்பட்டுவந்தன. 2007இல் இவை தேசியத் தொழில்நுட்ப கழகங்களாக (என்.ஐ.டி.) மாற்றப்பட்டு மத்திய அரசால் நிர்வகிக்கப்பட்டுவருகின்றன. இன்று இந்தியாவில் 31 என்.ஐ.டிக்கள் இயங்கிவருகின்றன.

திட்ட கமிஷனின் பரிந்துரைப்படி மேலாண்மை, வணிக நிர்வாகம் சார்ந்த கல்வியை வழங்கு வதற்காக 1961இல் கொல்கத்தாவில் இந்திய மேலாண்மைக் கழகம் (ஐஐஎம்) தொடங்கப்பட்டது. இன்று இந்தியாவில் ஐஐஎம்களின் எண்ணிக்கை 20.

கல்வி அமைப்புகள்

1969இல் தொடங்கப்பட ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகம் கலை, சமூகவியல் பாடப்பிரிவுகளுக்கான உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இது தவிர மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்கள் (Central University) தொடங்கப்பட்டுள்ளன.

சுதந்திரத்துக்குப் பிறகு தொடங்கப்பட்ட இந்த மூன்று கல்வி அமைப்புகளும் ஒவ்வோர் ஆண்டும் பல நூறு பட்டதாரிகளை உருவாக்கிவருகின்றன. அவர்களில் பலர் சர்வதேச அளவில் மதிப்புமிக்க பணிகளையும் பதவிகளையும் பெற்றுவருகிறார்கள்.

உயர்கல்வியை அனைவரிடமும் சேர்க்கும் நோக்கத்துடன் 1960-70களில் அரசு பல உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்கியதோடு தனியார் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தது. இதனால் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளும் சுயநிதிக் கல்லூரிகளும் அதிகரித்தன.

தொழில்நுட்பக் கல்வியைக் கண்காணித்துத் தரத்தை உறுதிபடுத்துவதற்கான அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.டி.யு.சி) 1945லேயே உருவாக்கப்பட்டுவிட்டது. அதேபோல் பல்கலைக்கழகங்களைக் கண்காணிக்கவும் தரத்தை உறுதிபடுத்தவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 1953இல் தொடங்கப்பட்டது. உரிய தர அளவுகோல்களை நிறைவேற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுவருகிறது.

அரசுக் கொள்கைகளும் பார்வைகளும்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தொழில்மயமாக்கலுக்கு ஆதரவாக இருந்ததால் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி மையங்கள் அதிகமாகத் தொடங்கப்பட்டன. அவருக்குப் பின் பிரதமரான இந்திரா காந்தி வறுமை ஒழிப்புக்கும் கிராமப்புற பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை அளித்தார். அது கல்வி குறித்த அரசின் நடவடிக்கைகளிலும் எதிரொலித்தது. அவருடைய ஆட்சிக் காலத்தில் 1968இல் வெளியிடப்பட்ட தேசியக் கல்விக் கொள்கை இந்திய உயர்கல்வி அமைப்பை வலுப்படுத்தும் சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்டது.

ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1968 கல்விக் கொள்கையைப் புதுப்பிப்பதற்கான பணிகள் தொடங்கின. அவருடைய ஆட்சியில் வெளியிடப்பட்ட தேசியக் கல்விக்கொள்கை (1986), உயர்கல்வி நிறுவனங்களை அதிகரித்தல், சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தல், தரமான ஆய்வுகளை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆகியவை சார்ந்த பரிந்துரைகளின் மூலம் உயர்கல்வி அமைப்பை மேம்படுத்த முயன்றது.

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் 1992 இல் அமைக்கப்பட்ட ஜனார்த்தன ரெட்டி குழு பரிந்துரைத்த செயல் திட்டம் உயர்கல்வி நிறுவனங்களில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்வைத்தது. ஏழைகள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் பெண்கள், கல்வியில் பின்தங்கியவர்கள் உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர்களைச் சேர்ப்பதற்குமான திட்டங்களையும் முன்வைத்தது.

கல்லூரிக்கு வெளியே

வீட்டிலிருந்தபடியே பட்டம் பெறுவதற்கான தொலைதூரக் கல்வி வாய்ப்புகளும் 1960களிலேயே தொடங்கிவிட்டன. பல்வேறு பல்கலைக்கழகங்கள் பகுதி அளவில் தொலைநிலைக் கல்வித் திட்டங்களை வழங்கிவருகின்றன. 1982இல் தொடங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்விக்காகத் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்.

1985 இல் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (IGNOU) தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் தொலைநிலைக் கல்வி வழங்கும் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டுவருகிறது. பல்வேறு மாநிலப் பல்கலைக்கழகங்களும் தொலைநிலைக் கல்வித் திட்டங்களை அளிக்கின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலைநிலைக் கல்விப் பணியகம் (Distance Education Bureau) இந்தியாவில் தொலைநிலைக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அமைப்பு.

தொடரும் பிரச்சினைகள்

இந்தியாவில் 1950இல் 20 ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2020இல் ஆயிரத்தைக் கடந்துவிட்டது. இந்தப் பல்கலைக்கழகங்களின் கீழ் 50,000க்கு மேற்பட்ட கல்லூரிகளும் முதுகலை ஆய்வு நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்கள்.

இத்தனை உயர்கல்வி அமைப்புகள் தொடங்கப் பட்டுள்ளபோதும் இந்தியாவில் 18-23 வயதுப் பிரிவினரில் 27.4 சதவீதத்தினரே கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் உயர்கல்வி அமைப்பில் இணைந்திருக்கிறார்கள். இந்த விகிதத்தை 50ஆக உயர்த்துவது தேசியக் கல்விக்கொள்கை 2020இன் நோக்கங்களில் ஒன்று. ஆனால், அதற்குப் பல அடிப்படைச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.

அடுத்ததாக, பட்டப்படிப்பை முடிப்போர் அனைவருக்கும் அவர்கள் கல்வித் தகுதிக்கு உரிய வேலை கிடைப்பதில்லை. பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காத நிலை 1990களில் தலைவிரித்தாடியது.

தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய துறைகள் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் அதிகரிப்பால் புத்தாயிரத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் இன்னும் அது தேசத்தின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றாகவே தொடர்கிறது. இதற்குப் பல உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்வி தரமற்றதாக இருப்பதே முதன்மை காரணம்.

இந்தப் பிரச்சினையைச் சரிசெய்வதற்கு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் உரிய தகுதிபெற்ற தரமான ஆசிரியர்களை நியாயமான ஊதியத்துடன் நியமிக்கப்படுவதை உறுதிசெய்வது முதன்மையான தேவை. கல்வி நிறுவனங்களின் தரத்தை உறுதிசெய்வதற்கான அமைப்புகளுக்கு வலுவூட்டுவது, பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடு, ஊழலைக் களைவது, கல்விக் கட்டணங்களைக் கட்டுப்படுத்துவது, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தரமான கல்வி நிறுவனங்கள் இருப்பதை உறுதிசெய்வது உள்ளிட்ட பல்முனைத் தொடர் நடவடிக்கைகள் அவசியத் தேவை.

சுதந்திர இந்தியாவின் நூற்றாண்டு (2047) கொண்டாட்டத்திலாவது அனைவருக்கும் தரமான உயர்கல்வி வழங்கப்பட வேண்டும் என்னும் லட்சியத்தை அடைவதற்கு இன்றிலிருந்தே பணிகளைத் தொடங்க வேண்டும்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: