SSLV-D1/EOS-02 Mission
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வழக்கமாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை பயன்படுத்திவருகிறது. ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தப்பட்டன.
என்றாலும், தற்போதுள்ள சூழலில் உலகம் முழுவதும் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுவது தேவையான ஒன்றாக உள்ளது. இதனை கருத்தில்கொண்டு குறைந்த எடைகொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பொருட்டு, எஸ்எஸ்எல்வி (சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம்) ராக்கெட் தயாரிப்பில் சமீபகாலமாக ஈடுபட்டு வந்தது இஸ்ரோ. அதிகபட்சமாக 500 கிலோ வரை எடைகொண்ட செயற்கைக்கோள் அனுப்பும்படி இது வடிவமைக்கப்பட்டது.
இதன் முதல் முயற்சியாக SSLV-D1 என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்றும், அதில் இஓஎஸ்-02 (EOS-02) மற்றும் ஆசாதிசாட் (AZAADISAT) என்ற இரு செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என்றும் அறிவித்து அதற்கான கவுண்டனை இன்று அதிகாலை தொடங்கியது இஸ்ரோ. 44 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதேபோல், ஆசாதிசாட் செயற்கைக்கோளுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
முதலாவதாக, ஆசாதிசாட் இந்திய கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டவை. இதன் எடை 8 கிலோ மட்டுமே. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு மூலம் மாணவிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் புதிய முயற்சியான எஸ்எஸ்எல்வி ராக்கெட் தனது முதல் பயணத்தை இன்று காலை 9.18 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து தொடங்கியது. முதல் 12 நிமிடங்களிலேயே, எஸ்எஸ்எல்வி ராக்கெட் முதல் 3 நிலைகளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.