சதுப்புநிலங்கள் ஏன் அவசியம்?
இந்தியாவில் புதிதாக 15 சதுப்புநிலங்களுக்கு உலக முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம், 64 ராம்சர் சதுப்புநிலங்களைக் கொண்ட ஒரே தெற்காசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
புதிதாக அறிவிக்கப்பட்ட 15 ராம்சர் சதுப்புநிலங்களில் 9 தமிழ்நாட்டில் அமைந்துள்ளன என்பது சதுப்புநிலங்களைக் காக்க தமிழக அரசு எடுத்துவரும் கொள்கை முடிவுகளுக்கும் முயற்சிகளுக்கும் ஒரு மகுடமாகும்.
தற்போது அறிவிக்கப்பட்ட ஒன்பதுடன், கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தையும் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் பத்து சதுப்புநிலங்கள் பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சதுப்புநிலங்களைப் பாதுகாக்க 1971-ல் ஈரானின் ராம்சர் நகரில் சர்வதேச ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. சரி, இந்த அங்கீகாரத்தைக் கொண்டாடக்கூடிய அளவுக்கு சதுப்புநிலங்கள் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன?
சுற்றுச்சூழல் பலன்கள்
சதுப்புநிலங்கள் என்பது கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர்களுக்கு குறைவான ஆழம் கொண்ட பல்வேறு வகைப்பட்ட சூழல் தன்மைகளைக் கொண்ட நீர் நிலைகளாகும்.
இவை கடல் நீர் மற்றும் நன்னீர் சார்ந்த நிலங்களை உள்ளடக்கியவையாகும். இந்தியாவில் சுமார் 1,52,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 19 வகையான சதுப்புநிலங்கள் உள்ளன. நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 4.63 சதவீதம் சதுப்புநிலங்கள் ஆகும். தமிழ்நாட்டில் 9,025 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சதுப்புநிலங்கள் உள்ளன.
இது தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 6.92 சதவீதம் ஆகும். குறைந்த ஆழம் கொண்டவையே எனினும், இவை பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஆதாரமாக உள்ளன. இவற்றை நல்ல நிலையில் பேணிக்காக்கும் பட்சத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த இன்றியமையாத, மதிப்புமிக்க பலன்கள் மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் கிடைக்கும்.
நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க, நிலத்தடி நீரின் உப்புத்தன்மையை குறைக்க, வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, உயரும் கடல் நீரை உள்வாங்க, மாசு மற்றும் திடக் கழிவுகளைக் கட்டுப்படுத்த, கரியமில வாயு மற்றும் மீத்தேனை உறிஞ்ச, நீர் மகரந்தச் சேர்க்கை நடைபெற, மண் மற்றும் நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை சமன்படுத்த, மண் அரிப்பைத் தடுக்க, மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்க, அரிய பல்லுயிர்ப் பெருக்கத்தைத் திடப்படுத்தி வளப்படுத்த, புயலின் தாக்கத்தை மட்டுப்படுத்த, வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க சதுப்புநிலங்களின் இருப்பு மிக முக்கியமானது.
இத்தகைய சுற்றுச்சூழல் சார்ந்த பலன்களால் பொருளாதாரம் உயர்ந்து மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது. அந்தவகையில் சதுப்பு நிலங்களை நாட்டின் ‘மூலதனம்’ என்று சொல்லலாம்.
பொருளாதார பலன்கள்
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழக அரசின் நிதியுதவியின் கீழ் நடத்தப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் சதுப்புநிலங்களைப் பற்றி இதுவரை அறியப்படாத பொருளாதார மதிப்பீடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது. தமிழக அரசு சதுப்புநிலங்களின் சூழல் முக்கியத்துவத்தை வைத்து, குறிப்பிட்ட 141 சதுப்பு நிலங்களை முன்னுரிமை அடிப்படையில் அடையாளம் கண்டு, அவற்றை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆயத்த பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகிறது. இவற்றில் முதற்கட்டமாக, 80 சதுப்புநிலங்களைத் தேர்வுசெய்து அவற்றை சீரமைப்பு செய்யும்பட்சத்தில் எவ்வளவு சுற்றுச்சூழல் சேவைகளைப் பெற முடியும் என்றும் அவற்றின் பொருளாதார மதிப்பு எவ்வளவு என்றும் கணக்கிடப்பட்டது.
ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட 80 சதுப்புநிலங்களின் தற்போதைய பொருளாதார மதிப்பு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ.4,386 கோடியாக கணக்கிடப்பட்டது. ஆனால், இவற்றை சீரமைப்பு செய்து முறையாகப் பராமரிக்கும்பட்சத்தில் அவற்றின் பொருளாதார மதிப்பு ரூ.17,468 கோடியாக உயரக்கூடும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது குறைந்தபட்ச மதிப்பீடே. ஏனெனில், ஒருசில முக்கிய பலன்களை, குறிப்பாக கரியமில வாயுவை உறிஞ்சுதல், கடல் நீர் மட்டத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற பலன்களை மதிப்பிட சரியான புள்ளி விவரங்கள் இல்லை. தவிர இந்த மதிப்பீடு இரண்டாவது கட்ட பொருளாதார நன்மைகளான வேலைவாய்ப்பு, வருவாய், குடும்ப நலன் போன்ற நாட்டில் ஏற்படும் மறைமுக பயன்களையும் உள்ளடக்கவில்லை.
குறைந்த அளவு மதிப்பீடே எனினும், நம்முடைய ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது என்னவெனில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 80 சதுப்புநிலங்களில் சீரமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது வழக்கத்தைவிட கூடுதலாக, ஆண்டுக்கு ரூ.13,082 கோடி மதிப்பிலான பொருளாதார பலன்களை சமூகம் பெறமுடியும் என்பதே.
அறியாமையின் விளைவு
பிரச்சினை என்னவெனில், மேற்கூறப்பட்ட சுற்றுச்சூழல் பலன்களின் பொருளாதார மதிப்பு சமூகத்திற்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் சரிவர தெரியாதததால் பெருவாரியான சதுப்புநிலங்கள் அளவுக்கு அதிகமாகவும், அவற்றின் தன்மைக்கு மாறாகவும் பயன்படுத்தப்பட்டு, இன்று அவை பயனற்ற நிலங்களாக உருமாற்றப்பட்டுள்ளன.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிடப்படாத நிலப் பயன்பாடு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள், தொழிற்சாலை மற்றும் மருத்துவக் கழிவுகள், நகரத்தில் உருவாகும் தீங்கு விளைவிக்கும் திட மற்றும் திரவக் கழிவுகள், உரம் மற்றும் பூச்சிமருந்துக் கழிவுகள், வேலிக்கருவை, ஆகாயத்தாமரை போன்ற சூழ்நிலைக்கு ஒவ்வாத உயிரினங்களின் பெருக்கம் போன்ற பல்வேறு சிக்கலான காரணங்களால் சதுப்புநிலங்கள் தங்கள் உன்னதத் தன்மையை இழந்து நிற்கின்றன.
1970 முதல் 2015 வரையில் உலக அளவில் சுமார் 35 சததவீத சதுப்புநிலங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் பெருநகரத்தில் உள்ள ஒரே சதுப்புநிலம் என்ற பெருமையைக் கொண்ட சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம், 1960-களில் சுமார் 6000 ஹெக்டர் பரப்பளவில் இருந்தது.
தற்போது அது 700 ஹெக்டருக்கும் குறைவான நிலப்பரப்பையே கொண்டுள்ளது. இதிலும்கூட, குப்பையைக் கொட்டுவது, திரவக் கழிவுகளை கலப்பது போன்ற சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. இவற்றின்மூலம், எவ்வளவு மதிப்புள்ள சுற்றுச்சூழல் பலன்களையும் பொருளாதார பலன்களையும் சமூகம் இழந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்!
SOURCE: hindutamil