டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு

 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு

கடந்த பிப்ரவரி மாதம், ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.55 ஆக இருந்தது.

தற்போது அது ரூ.80-ஐ தொட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டின் டாலர் – ரூபாய் நிலவரத்தையும் தற்போதைய நிலவரத்தையும் ஒப்பிட்டால் தற்போதைய சரிவின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும். 2018 டிசம்பரில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70 ஆக இருந்தது.

2021 டிசம்பரில் அது ரூ.74 ஆக இருந்தது. அதாவது மூன்று ஆண்டுகளில் ரூ.4 தான் சரிந்தது. ஆனால் தற்போது ஐந்தே மாதங்களில் ரூ.5.45 சரிந்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாய் மதிப்பு ரூ.82-க்கு கீழ் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த வீழ்ச்சி? ஏன் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளின் நாணய மதிப்பு அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது? ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் மக்களுக்கு என்ன பாதிப்பு? விரிவாகப் பார்க்கலாம்.

டாலர் சூழ் உலகு

1944.இரண்டாம் உலகம் போர் முடிவுக்கு வந்துகொண்டிருந்த சமயம். உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு தகர்ந்து இருந்தது. பணவீக்கம் உச்சத்தில் இருந்தது. உலக நாடுகளின் நாணய மதிப்பு பெரும் சரிவில் இருந்தது.

அதுவரையில் தங்கத்தின் அடிப்படையில்தான் நாடுகளின் நாணய மதிப்பு கணக்கிடப்பட்டுவந்தது. போர் காரணமாக பொருளாதாரக் கட்டமைப்பு தகர்ந்த நிலையில் புதிய பரிவர்த்தனை மதிப்பை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டிருந்தது.

1944 ஜூலை மாதம் அமெரிக்காவில் பிரெட்டன் வூட்ஸ் பகுதியில் உள்ள மவுண்ட் வாஷிங்டன் விடுதியில் புதிய பரிவர்த்தனை மதிப்பை உருவாக்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மாநாடு நடந்தது. இதில் 44 நாடுகளிலிருந்து 730 அரசியல் மற்றும் பொருளாதார பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அந்த சமயத்தில் உலகின் தங்க இருப்பில் நான்கில் மூன்று பங்கு அமெரிக்காவிடம் இருந்தது. அப்போது ஏனைய நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிட அமெரிக்க டாலர் வலுவான நாணயமாக இருந்தது.

 

இதன் காரணமாக அமெரிக்க டாலர் பொது பரிவர்த்தனை நாணயமாக முன்வைக்கப்பட்டு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலைக்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு 35 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் என்னவென்றால், ஒரு நாடு தனக்குத் தேவையான தங்கத்தை இனி டாலர் அடிப்படையில்தான் வாங்க வேண்டும்.

பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் 25 ஆண்டுகாலம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் டாலரின் புழக்கத்துக்கு ஏற்ற அளவில் அமெரிக்காவில் தங்க இருப்பு இல்லை. தவிர, வியட்நாம் மீதான போரினால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் சரிவுக்கு உள்ளாகி இருந்தது.

இந்தச் சூழலில் 1971-ல் அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்சன், தங்கத்துக்கும் டாலருக்கும் இடையிலான பரிமாற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்தார். அதாவது, இனி டாலரின் மதிப்பு தனித்தது, அதை தங்கத்துடன் ஒப்பிடக் கூடாது என்றார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு உலக நாடுகள் தங்கத்தை இருப்பாக வைத்துக் கொள்வதைவிடவும் அமெரிக்க டாலரை இருப்பாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தத் தொடங்கின. அப்படித்தான் உலக அளவில் அமெரிக்க டாலர் அந்நிய செலாவணி இருப்பாக ஆனது. இன்று உலக வர்த்தகத்தில் 80% டாலரில் நிகழ்கிறது.

தற்போதைய வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

மூன்று காரணங்கள். 1.ரஷ்யா – உக்ரைன் போர் 2. அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித உயர்வு 3. வர்த்தகப் பற்றாக்குறை.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலைத் தொடங்கியது. ஐந்து மாதங்கள் கடந்தும் அந்தப் போர் நீடித்து வருகிறது.

உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா முதன்மை நாடுகளில் ஒன்றாக உள்ளது. கோதுமை, சோளம், சூரியகாந்தி எண்ணெய், உரம், இரும்பு ஏற்றுமதியில் உக்ரைன் முக்கிய இடத்தில் உள்ளது. போரினால் இந்த ஏற்றுமதிகள் தடைபட்டதால் உலக அளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

தவிர, இந்தப் போர் உலக அளவில் விநியோகக் கட்டமைப்பில் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பணவீக்கம் உச்சத்தைத் தொட்டது.

 

அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் அடைந்ததையடுத்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க பெடரல் ரிசர்வ், வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கியது.

ஒரு நாடு வட்டி விகிதத்தை உயர்த்தும்போது அந்நாட்டில் கடன் பத்திரங்களின் மீதான வட்டி வருவாய் அதிகரிக்கும். இதனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்யத் தொடங்குவர்.

அமெரிக்கா அதன் வட்டி விகிதத்தை உயர்த்தியதால் அந்நிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தையில் மேற்கொண்டிருந்த முதலீட்டைத் திரும்பப் பெற்று, அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால், இந்தியாவில் டாலரின் இருப்பு குறையத் தொடங்கியது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு முன்பிருந்தே அந்நிய முதலீட்டாளர்கள், இந்தியவின் பொருளாதார நிலையின்மை காரணமாக இந்திய பங்குச் சந்தையில் உள்ள தங்கள் பங்கு
களை விற்று வெளியேறி வருகின்றனர்.

இவ்வாண்டு தொடக்கம் முதல் இதுவரையில் 30 பில்லியன் டாலருக்கு மேல் பங்குச் சந்தை தொடர்பான அந்நிய முதலீடு இந்தியாவிலிருந்து வெளியேறி இருக்கிறது. விளைவாக, இந்தியா ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு டாலரை 74 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தது.

தற்போது அதே ஒரு டாலரை 80 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளது.
ரஷ்ய – உக்ரைன் போர், பெடரல் ரிசர்வின் வட்டி விகித உயர்வு இவற்றையெல்லாம் தாண்டி, தற்போது இந்திய எதிர்கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மிக அடிப்படையான காரணம், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறைதான்.

மக்களுக்கு என்ன பாதிப்பு

ரூபாய் வீழ்ச்சியின் நேரடி பாதிப்பு என்று சிலவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் கல்விச் செலவு கணிசமாக உயரும்.

உதாரணத்துக்கு, அமெரிக்க கல்வி நிறுவனம் ஒன்றில் ஒரு படிப்புக்கான செமஸ்டர் கட்டணம் 5,000 டாலர் என்று வைத்துக்கொள்வோம். இவ்வாண்டு தொடக்கத்தில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.74.55 என்று இருந்தபோது, ஒரு இந்திய மாணவர் செமஸ்டர் கட்டணம் செலுத்த ரூ.372,500 இந்திய ரூபாய் செலவிட்டிருப்பார்.

தற்போது அதே 5,000 டாலர் கட்டணத்தை செலுத்த அவர் ரூ.4 லட்சம் செலவிட வேண்டும். இவ்வாறு டாலர் – ரூபாய் சார்ந்த அனைத்துப் பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளது.

 

இந்தியா அதன் தேவையைப் பூர்த்தி செய்வதில் இறக்குமதியை பெரிதும் சார்ந்து இருப்பதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்.

தற்போது கச்சா எண்ணெய், எரிவாயு, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட இறக்குமதிக்கு அதிக பணம் வழங்க வேண்டிய சூழலில் இந்தியா உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், சரக்கு லாரிகளின் கட்டணம் உயரும்.

இதனால் காய்கறி உட்பட அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும். மின்னணு மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வால் மொபைல்போன், லேப்டாப் உட்பட மின்னணு சாதனங்கள் மற்றும் வாகனங்களின் விலை உயரும். ஏற்கனவே இந்தியாவில் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், முடிவின்றி வீழும் ரூபாய் மதிப்பு, மக்கள் உழைத்து ஈட்டும் வருமானத்தை அர்த்தமிழக்கச் செய்யும்.

வர்த்தகப் பற்றாக்குறை

இந்திய நாணய மதிப்பு மட்டுமல்ல பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளின் நாணய மதிப்பும் தற்போது பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. ஆனால், அந்நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு ஆறுதல் அடைந்துவிட முடியாது. ஜப்பானின் பொருளாதாரமும், பிரிட்டனின் பொருளாதாரமும் வலுவானவை; பரந்துபட்டவை.

இந்தியாவின் நிலை அப்படி இல்லை. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. சென்ற நிதி ஆண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 420 பில்லியன் டாலரைத் (ரூ.33.60 லட்சம் கோடி) தொட்டது.

இது ஏற்றுமதியில் இந்தியா அடைந்திருக்கும் உச்சம் என்று பெருமையாகக் குறிப்பிடப்பட்டது. ஆனால், இந்தியாவின் இறக்குமதி அதிகரித்தது குறித்து பேசப்படவில்லை. சென்ற நிதி ஆண்டில் இந்தியா 612 பில்லியன் டாலருக்கு (ரூ.48.96 லட்சம் கோடி) இறக்குமதி செய்துள்ளது.

 

இதனால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 192 பில்லியன் டாலராக (ரூ.15.36 லட்சம் கோடி) உயர்ந்தது. இது மிக உச்சமான வர்த்தகப் பற்றாக்குறை ஆகும். ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரித்தால்மட்டும் போதாது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி குறைய வேண்டும்.

ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அந்த இடைவெளி அதிகரித்தபடி செல்கிறது. நடப்பு நிதி ஆண்டு முதல் காலாண்டில் வர்த்தகப் பற்றாக்குறை 70.8 பில்லியன் டாலராக (ரூ.5.6 லட்சம் கோடி) உள்ளது. சென்ற நிதி ஆண்டு முதல் காலாண்டில் அது 31.4 பில்லியன் டாலராக (ரூ.2.5 லட்சம் கோடி) இருந்தது. வர்த்தகப் பற்றாக்குறை இரு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது.

இந்தியா அடிப்படையில் இறக்குமதி சார்புடைய நாடு. இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்துக்கு மேல் இறக்குமதி செய்கிறது. இந்திய வாகனத் தயாரிப்பில் 20 சதவீத உதிரி பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. மின்னணு சாதனத் தயாரிப்பில் 60 சதவீத உதிரி பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

பொதுவாக ஒரு நாடு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும்போது அந்நாட்டுக்குள் டாலர் வரவு அதிகரிக்கும். அதுவே ஒரு நாடு அதிக அளவில் இறக்குமதி செய்யும்போது டாலர் இருப்பு குறையும். அதாவது, இறக்குமதி அதிகரிக்க அதிகரிக்க ஒரு நாட்டின் பண மதிப்பு வீழ்ச்சி அடைந்துகொண்டே செல்லும். அந்தவகையில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை குறையாத வரையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஆர்பிஐ-யின் முயற்சி பலன் தருமா?

தற்போது இந்தியா அதன் சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனையை டாலரில் மேற்கொண்டு வருவதால் அந்நிய செலாவணி இருப்பில் ஏற்றம், இறக்கம் ஏற்படுகிறது. இது தவிர்த்து, அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபடுவதும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி, இந்திய ரூபாயைக் கொண்டே ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கான புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்தப் புதிய முயற்சியின்படி, இந்திய இறக்குமதியாளர்கள், அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை ரூபாயிலே செலுத்தமுடியும். அதேபோல் ஏற்றுமதியாளர்கள் அவர்களுக்குரிய தொகையை ரூபாயாக பெற்றுக்கொள்ள முடியும்.

எப்படி செயல்படும்?

உதாரணத்துக்கு, இந்தியா – ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறது என்றால், முதலில் இந்திய வங்கிகள் ரஷ்யாவில் உள்ள வங்கிகளில் சிறப்புக் கணக்கைக் தொடங்க வேண்டும். அந்தக் கணக்கில் ரஷ்ய நாணயமான ரூபிளில் ஒரு குறிப்பிட்டத் தொகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

அதேபோல் ரஷ்ய வங்கிகள் இந்திய வங்கிகளில் ரூபாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பாகக் கொள்ள வேண்டும்.
இந்திய இறக்குமதியாளர் ரஷ்யாவிடமிருந்து சரக்குகளை இறக்குமதி செய்யும்போது அதற்கான தொகையை அவர் தன்னுடைய இந்திய வங்கியில் ரூபாயில் செலுத்துவார். இந்தத் தகவல் ரஷ்யாவில் உள்ள வங்கிக்கு தெரிவிக்கப்படும்.

உடனே, ரஷ்யாவில் உள்ள வங்கியில் இந்திய வங்கி வரவு வைத்துள்ள ரூபிள் கணக்கிலிருந்து ரஷ்ய ஏற்றுமதியாளருக்கான தொகை வழங்கப்பட்டுவிடும். அதேபோல் இந்திய ஏற்றுமதியாளர் ரஷ்யாவுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்யும்போது அந்தச் சரக்குகளைப் பெறும் ரஷ்யாவில் உள்ள இறக்குமதியாளர் அவற்றுக்கான தொகையை ரஷ்ய வங்கியில் செலுத்திவிடுவார்.

உடனே அந்த ரஷ்ய வங்கி இந்திய வங்கிக்கு அறிவிப்புக் கொடுக்கும். அதையடுத்து இந்திய வங்கியில் ரஷ்ய வங்கிக் கொண்டிருக்கும் ரூபாய் வைப்பிலிருந்துஅந்த ஏற்றுமதிக்கான தொகை உரியவருக்குக் கொடுக்கப்பட்டுவிடும். இந்த முயற்சியால் அந்நிய செலாவணி இருப்பு குறைவது தடுக்கப்படும். ரூபாய் சர்வதேச நாணயமாக உருவாவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/833952-when-to-recover-from-a-fall.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: