மெட்ராஸ் -சென்னை 17 ஜூலை 1996
‘சென்னை’ மாநகரம் 17 ஜூலை 1996 வரை ‘மெட்ராஸ்’ என்றே அழைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் வாசல் என்று அழைக்கப்படும் சென்னைக்கு நெடிய வரலாறு உண்டு. கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு முதல் உலகெங்கிலும் இருந்து வர்த்தகர்கள் சென்னையைத் தேடி வந்துள்ளனர்.
17-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால்பதித்த பின்னர், இந்நகருக்கு வேறு விதமான அடையாளங்கள் உருவாகத் தொடங்கின.
1639-ல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் செயின்ட் ஜார்ஜ் கோட்டை இப்போது உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன் நாயக்கர், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கர் நினைவாக, கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னைப் பட்டினம் என்று பெயரிடப்பட்டது. இதற்கு முன்னர் 16-ம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் சென்னைப் பகுதிக்கு வந்தனர். 1522-ல் சாந்தோம் என்ற துறைமுகத்தை நிறுவினர். அப்போது அவர்கள்தான் சென்னையை ‘மெட்றாஸ்’ என அழைத்தனர்.
அதன் பின்னர் 1688-ல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர், மதறாஸ் நகரை முதல் நகரசபையாக அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை மதறாஸ் பெற்றது. ராபர்ட் கிளைவ் தனது ராணுவத் தளமாக மதறாஸைத் தேர்ந்தெடுத்தபோது பிரிட்டிஷ் அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த நான்கு மாகாணங்களில் ஒன்றாக அறிவித்து, ‘மதறாஸ் மாகாணம்’ எனும் பெயர் சூட்டியது. ஆனால், 1746-ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் மதறாஸ் மாகாணத்தையும் பிரெஞ்சு அரசு கைப்பற்றியது. மீண்டும் 1749-ல் மதறாஸை ஆங்கிலேயர் கைப்பற்றினர். அதனை அடுத்து திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் சென்னைப் பட்டினத்துடன் இணைக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. இப்படியாக ஐரோப்பியர்களின் வருகையால் பொருளாதாரத் தலைமைப் பீடமாக வளர்ந்தது மதறாஸ். சுதந்திரத்துக்குப் பின்னர், 1947-ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் தேர்வானது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை மதறாஸ் மாகாணம் என்றழைக்கப்பட்ட மாநிலம் 1969-ல் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றப்பட்டது. மெட்ராஸ், சென்னை என்று இரண்டு பெயர்களில் இந்நகரம் அழைக்கப்பட்டுவந்தது. அந்தக் காலகட்டத்தில் முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுவந்தன. 1991-ல் திருவேந்திரம் நகரின் பெயர் திருவனந்தபுரம் என்று அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது. 1995-ல் மும்பை என்று பெயர் மாற்றம் கண்டது பாம்பே. 1996 ஜூலை 17-ல், மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், ‘மெட்ராஸ்’ அதிகாரபூர்வமாக ‘சென்னை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.