Site icon Athiyaman team

கரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை 722ஆக உயா்வு

கரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை 722ஆக உயா்வு

சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 722ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது. இதன்மூலம் சார்ஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 34,546 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுவரை சுமார் 1,540 பேர் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் 25 நாடுகளில் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சார்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version