நிபா’ வைரஸ் எப்படிப் பரவுகிறது?
‘நிபா’ எப்படிப் பரவுகிறது?
ஆரம்பத்தில் பன்றிகள் வழியாகப் பன்றிப் பண்ணை ஆட்களுக்குத்தான் நிபா வைரஸ் பாதித்தது. பிறகு நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை போன்ற வீட்டு விலங்குகளிடமும், பழந்தின்னி வௌவால்களிடமும் இது காணப்பட்டது. மேற்சொன்ன விலங்குகளின் கழிவுகள் மூலம் மக்களுக்கு இது பரவத் தொடங்கியது. மேலும், பழந்தின்னி வௌவால்கள் பாதி கடித்துவிட்டுத் தூக்கி எறியும் பழங்களை மற்றவர்கள் சாப்பிடும்போதும், அவை ருசி பார்த்த பனைமரக் கள்ளை மற்றவர்கள் அருந்தும்போதும் இந்த வைரஸ் பரவியது. அடுத்ததாக, இந்த வைரஸ் தாக்கிய மனிதரிடமிருந்து அவருடன் நெருங்கிப் பழகும் மற்றவர்களுக்கும் பரவத் தொடங்கியது. கேரளத்தில் இந்த வைரஸ் பரவியதற்குப் பழந்தின்னி வௌவால்கள்தான் காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிய வருகிறது.
அறிகுறிகள் என்ன?
திடீரென்று கடுமையான காய்ச்சல் ஏற்படும். தலைவலி கடுமையாகும். மூட்டுவலி, தசைவலி, தொண்டைவலி, கழுத்துவலி, வாந்தி போன்றவை அதிக அளவில் தொல்லை கொடுக்கும். இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத்திணறல் போன்றவையும் சேர்ந்துகொள்ளும். மூளை மற்றும் நரம்பு தொடர்பான தொல்லைகள் அதிகரிக்கும். மனக்குழப்பம் ஏற்படும். கிறுகிறுப்பு வரும். சுயநினைவு தவறும். கோமா மற்றும் வலிப்பு வந்து மரணம் நெருங்கும். இவ்வளவும் நோய் வந்த இரண்டு நாட்களுக்குள் ஏற்பட்டுவிடும் என்பது தான் பெருந்துயரம்.
பரிசோதனை உண்டா?
இதன் ஆரம்ப அறிகுறிகள் சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களைப் போன்று இருப்பதால், இதைத் தொடக்கத்திலேயே கண்டுபிடிப்பது படுசிரமம். என்றாலும், எலிசா, பிசிஆர், வைரஸ் கல்ச்சர் ஆகிய ரத்தப் பரிசோதனைகள் மற்றும் தொண்டைச் சளி பரிசோதனைகள் மூலம் இந்த நோயை உறுதிப்படுத்தலாம். இந்தப் பரிசோதனைகளுக்கெல்லாம் நகர்ப்புறங்களில் உள்ள சிறப்பு மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம். செலவும் அதிகம். இந்தியாவில் புணேயில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வகத்தில்தான் இந்த நோயை 100% உறுதிசெய்ய முடியும். இதற்குச் சில நாட்கள் ஆகும். அதற்குள் நோய் முதிர்ச்சி அடைந்து நோயாளியின் உயிருக்கு ஆபத்து நெருங்கலாம்.
தப்பிப்பது எப்படி?
டெங்கு காய்ச்சலைப் போலவே ‘நிபா’ காய்ச்சலுக்கும் சிகிச்சை இல்லை. தடுப்பூசியும் இல்லை. நோய்த்தடுப்பு ஒன்றுதான் ஒரே வழி. நோய் பரவும் ஊர்களுக்கு யாரும் போக வேண்டாம். அந்தப் பகுதிகளிலிருந்து வரும் காய்கறி மற்றும் பழங்களை சிறிது காலத்துக்கு வாங்கிப் பயன்படுத்த வேண்டாம். கொஞ்ச காலத்துக்கு அந்நியமானவர்களோடு கை குலுக்காதீர்கள். வெளியூர்களிலிருந்து வந்தவர்களோடு நெருக்கம் வேண்டாம்.
கைகளை சோப்பினால் அடிக்கடி சுத்தமாகக் கழுவிக்கொள்ளுங்கள். இருமும்போதும் தும்மும்போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ளுங்கள். கண்ட இடங்களில் எச்சிலைத் துப்புவதும் சளியைச் சிந்துவதும் கூடாது. பொது இடங்களுக் குச் சென்று திரும்பினால், வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கொப்பளித்து, தொண்டையைச் சுத்தம் செய்யுங்கள். முகத்தையும் கண்களையும் சோப்புப் போட்டுக் கழுவி சுத்தம் பேணுங்கள். காய்ச்சலுக்கு சுய மருத்துவம் வேண்டாம். உடனே மருத்துவரிடம் சென்றுவிடுங்கள்.
கால்நடைப் பண்ணைகளையும், பன்றிப் பண்ணை களையும் சுத்தமாகப் பராமரித்துத் தொடர்ந்து கண் காணிக்க வேண்டும். நோய் பரவும்போது பன்றிகள் வாழும் இடங்களில் வசிக்க வேண்டாம். வௌவால், பிற விலங்குகள் தின்ற பழங்களை யும் காய்களையும் சாப்பிடாதீர்கள். பொதுவாகவே, பழங்களையும் காய்கறிகளையும் தோல் நீக்கி, நன்றாகத் தண்ணீரில் கழுவிய பின்பு சாப்பிடுவதுதான் நல்லது. பனை மரத்தில் இறக்கப்படும் கள்ளைச் சாப்பிடவே வேண்டாம்.
இந்த நோய்க்குச் சிகிச்சை தரும் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் சாதாரண உடையில் சிகிச்சை தரக் கூடாது. இவர்கள் கையுறைகள், முகக் கவசம், உடலை மூடும் உடைகள், சுத்திகரிப்புத் திரவம் போன்றவற்றைப் பயன்படுத்துவது மிக அவசியம். இவர்கள், இந்த வைரஸ் தாக்கிய நோயாளிகளைப் பரிசோதித்துவிட்டு வெளியே வந்தவுடன், அனைத்தையும் கழற்றி சுத்தம் செய்வதற்கு அனுப்பிவிட வேண்டும். அதே மருத்துவமனையிலிருக்கும் மற்றவர்கள் தற்காப்புக்காக மூன்று அடுக்குள்ள முகமூடியை (Triple layered surgical mask) அணிந்துகொள்ளலாம். அப்போதுதான் இந்த வைரஸ் இவர்களுக்கும் பரவாது; இவர்கள் மூலம் மற்றவர் களுக்கும் நோய் பரவாது.
இயற்கையை அழித்தால்?
வௌவால்களின் இயற்கை வாழ்விடங்களை மனிதன் அழித்துவருகிற காரணத்தால், அவை செயற்கை வாழ் விடங்களைத் தேடி மனிதனை நோக்கியே வருகின்றன. அங்கு கிடைக்கும் செயற்கை உணவுகளால் அவற்றின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோகிறது. அப்போது அவற்றின் உடலில் ஏற்கெனவே குறைந்த அளவில் அடங்கிக் கிடக்கும் வைரஸ்கள் வீரியம் பெற்று அடுத்தவர்களுக்கும் பரவி நோய் உற்பத்திக்கு உதவுகின்றன. இப்படி மக்களை அச்சுறுத்தும் நோய்கள் புதிது புதிதாகத் தோன்றுவதற்கு இயற்கையை அழிப்பது ஒரு முக்கியக் காரணம். நமது அணுகுமுறையில் மாற்றம் தேவை!
Source- Hindu Tamil