ஓரினச் சேர்க்கை குற்றமில்லை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை குற்றமாக அறிவிக்கும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377ஆவது பிரிவின் ஒரு பகுதியை செல்லாது எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்திய தண்டனையியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) 377ஆவது பிரிவில், இயற்கைக்கு முரணான உறவை குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இயற்கைக்கு முரணாக ஆண், பெண் அல்லது விலங்குகளுடன் யார் உறவு வைத்தாலும், அது ஆயுள் சிறைத் தண்டனைக்குரிய குற்றம் அல்லது 10 ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனை விதிக்கத்தக்க குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனையியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) 377ஆவது பிரிவில், ஓரினச் சேர்க்கை குற்றம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது, பகுத்தறிவில்லாத, ஏற்க இயலாத மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு எதிரானதாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், நாட்டு மக்கள் அனைவரும் சமமாக வாழ்வதற்கான உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை மீறும் வகையில் 377ஆவது சட்டப் பிரிவு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தில் காலமாறுதலுக்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட வேண்டும். ஆதலால், அனைவரும் சமமாக வாழ்வது, கண்ணியத்துடன் வாழ்வது தொடர்பான உரிமைகளுக்கு எதிராக 377ஆவது சட்டப் பிரிவில் இருக்கும் சில பகுதிகளை செல்லாது என்று அறிவிக்கிறோம். சுரேஷ் கௌசால் வழக்கில் ஓரினச் சேர்க்கையை குற்றம் என்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பையும் ரத்து செய்கிறோம்.
அதேநேரத்தில், 377ஆவது சட்டப் பிரிவில் மிருகங்கள், குழந்தைகளுடன் உறவு கொள்வது தொடர்பாக இருக்கும் பகுதி தொடர்ந்து செல்லும் என்று தெரிவிக்கிறோம். மிருகங்களுடன் எத்தகைய உறவு வைத்தாலும், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377ஆவது பிரிவின்கீழ் தொடர்ந்து குற்றமாகவே கருதப்படும்.
இதுவரை இந்த சட்டப் பிரிவானது, ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் போன்றோரை கொடுமைப்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால், ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்பட்டு வந்தது. ஓரினச் சேர்க்கையாளர்களும் மனித இனத்தினர்தான். பிற குடிமக்களுக்கு அளிக்கப்படுவதுபோல், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
5 நீதிபதிகள் கருத்துக்கள்
1. இந்து மல்ஹோத்ரா : ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய இவ்வளவு கால தாமதம் எடுத்துக் கொண்டது உச்சநீதிமன்றம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்று குறிப்பிட்டார்.
2. நீதிபதி நாரிமன் : பாராளுமன்றத்திலும் கூட ஓரினச் சேர்க்கை ஒரு நோயல்ல . அதை விளக்கும் மன நலமருத்துவச் சட்டத்தை அனைவரும் படித்தால் விளங்கும் என்று தெரிவித்தார்.
3. ஏ.எம்.கான்வில்கார் : தன்பாலின ஈர்ப்பு புரிதல் உடையவர்கள் இந்த சமூகத்தில் மிகவும் மரியாதையுடன் வாழும் தகுதி உடையவர்களே என்று விளக்கினார்.
4. சந்திராசவுத் :ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும் அவரவர் உணர்வு மறுக்கப்படுவது இறப்புக்கு சமமானது என்று கூறினார்.
5. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா: மற்ற 4 நீதிபதிகள் கருத்துக்களுடன் சேர்ந்து, தனது தரப்பு கருத்தையும் பதிவு செய்து இறுதியில் “ ஓரினச் சேர்க்கை குற்றமில்லை” என்று தீபல் மிஸ்ரா இறுதி தீர்ப்பை வாசித்தார்.