கொன்றைவேந்தன் — ஔவையார் | முழுப் பாடல்களும் பதவுரை, கருத்துரையுடன்

ஔவையார் நீதி நூல்

கொன்றைவேந்தன்

ஈரடி நீதி · 91 அடிகள்

ஈரடி நீதி நூல். ஆத்திசூடிக்கு அடுத்தபடியாகக் கற்கப்படுவது. பதவுரை, கருத்துரையுடன்.

91பாடங்கள்
ப-உபதவுரை
க-உகருத்துரை
தேர்வுக் குறிப்பு: TNPSC வினாக்கள் பெரும்பாலும் “இவ்வரி இடம்பெற்ற நூல் எது?” என வகைப்படுத்தும் வகையிலேயே அமைகின்றன. அடியை நூலோடு இணைத்து நினைவில் கொள்ளுங்கள்.

கொன்றைவேந்தன் — முழுப் பாடங்கள்

1அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
[ப. உ] அன்னையும்-தாயாரும், பிதாவும் – தகப்பனாரும், முன் – முன்னே , அறி – அறியப்படும், தெய்வம் – தெய்வங்களாவார்.
[க.உ] தாயும் தந்தையும் முன்பு காணப்பட்ட தெய்வங்களாவார்.
2ஆலயம் தொழுவது சாலவு நன்று.
[ப. உ] ஆலயம் – கோயிலுக்குச் சென்று, தொழுவது – கடவுளை வணங்குவது, சாலவும் – மிகவும் , நன்று – நன்மையாம்.
[க.உ] கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது மிக்க நல்லது.
3இல்லற மல்லது நல்லற மன்று.
இல்லறம்- (மனைவியோடு கூடிச் செய்யும்) அறமானது, நல்லறம் – சிறந்த அறமாகும்; அல்லது – இல்லறமல்லாததாகிய துறவறமானது, அன்று – சிறந்த அறமாகாது.
[க-உ] மனைவியோடு கூடிச் செய்யும் அறமே சிறப்புடையதாகும்.
4ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
[ப. உ] ஈயார் – கொடுக்காதவருடைய, தேட்டை – சம்பாத்தியத்தை, தீயார் – கொடியவர், கொள்வர் – அபகரித்துக் கொள்வார்.
[க-உ] கொடுக்காத உலோபிகள் செல்வத்தைக் கள்வர் முதலிய கொடியவர்கள் வலிய அபகரித்துக் கொள்வர்.
ஈக்கள் தேன் கூண்டில் சேமித்து வைத்த தேனைக் கையில் தீப்பந்த முடையவர் கவர்ந்து கொள்ளுதல் கண்கூடு என்பதை இப்பாட்டிற்கு உதாரணமாகப் பொருத்தி அமைத்துள்ளது போற்றுதற்குரியது. இது இரட்டுற மொழிதல் என்னும் உத்தியாகும்.
5உண்டி சுருங்குதல் * பண்டிக் கழகு
[ப. உ] உண்டி – உணவு, சுருங்குதல் – குறைதல், பண்டிக்கு – வயிற்றுக்கு, அழகு–அழகாகும்.
[க-உ] மிதமாக உண்பது வயிற்றுக்கு நல்லது.
“உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு ” என்றும் பாடம்.
[*] இது திரு. தி. கனகசுந்தரம் பிள்ளை அவர்களுடைய பதிப்பில் கண்ட பாடமாகும்.
6ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
[ப. உ] ஊருடன் – ஊராருடன், பகைக்கின் – ஒருவன் விரோதம் கொண்டால், வேருடன் கெடும் – (அவன் தன்) வமிசத்துடன் கெடுவான்.
[க-உ] ஒருவன் தன் ஊராருடன் பகை கொண்டால் அவன் வமிசத்தோடு அழிந்து விடுவான்.
7எண்ணு மெழுத்துங் கண்ணெனத் தகும்.
[ப. உ] எண்ணும் – கணக்கும், எழுத்தும் – இலக்கணமும் , கண் எனத்தகும் – (மக்களுக்கு) கண்கள் என்று சொல்லப்படும்.
[க-உ] கணக்கும் இலக்கணமும் மக்களுக்குக் கண்கள் என்று சொல்லத்தகும்.
8ஏவா மக்கண் மூவா மருந்து.
[ப. உ] ஏவா மக்கள் – (பெற்றோர் இதனைச் செய்வாய் என்று) ஏவுதற்கு முன்பே குறிப்பறிந்து செய்யும் மக்கள், மூவா – சாவாத தன்மையை அளிக்கும், மருந்து – தேவாமிர்தம் போல்வார்.
[க-உ] பெற்றோர்கள் குறிப்பறிந்து நடக்கின்ற பிள்ளைகள் மிகச் சிறந்தவராவார்கள்.
9ஐயம் புகினும் செய்வன செய்.
[ப. உ] ஐயம் புகினும் – பிச்சை யெடுத்தாலும், செய்வன – செய்யத் தக்கவைகளை, செய் – நீ செய்வாய்.
[க-உ] பிச்சை யெடுத்துப் பிழைத்தாலும் நீ உன் கடமைகளைச் செய்வாயாக.
10ஒருவனைப் பற்றி யோரகத்திரு.
[ப-உ ] ஒருவனைப் பற்றி – ஒருவனைத் (துணையாகக்) கொண்டு, ஓரகத்திரு – ஓரிடத்தில் நீ வாசம் செய்வாய்.
[க-உ] தகுதியான ஒருவனைத் துணையாகக் கொண்டு நீ ஓரிடத்தில் வாசஞ் செய்வாய்.
11ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்.
[ப. உ] வேதியர்க்கு – பிராமணர்க்கு, ஒழுக்கம் – ஆசாரமானது, ஓதலின் – (வேதம்) ஓதுவதைக் காட்டிலும், நன்றே – நல்லதேயாகும்.
[க-உ] வேதியர்க்கு வேதத்தைக் கற்பதைக் காட்டிலும் ஒழுக்கம் சிறந்ததாகும்.
12ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு.
[ப. உ] ஔவியம் பேசுதல் – பொறாமைச் சொற்களைப் பேசுதல், ஆக்கத்திற்கு – (ஒருவனுடைய) செல்வத்திற்கு, அழிவு – கேட்டைத் தருவதாகும்.
[க-உ] ஒருவன் பொறாமைச் சொற்களைப் பேசுதல் அவன் செல்வத்திற்கு அழிவைத் தருவதாகும்.
13அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
[ப-உ] அஃகமும் – நெல் முதலிய தானியத்தையும், காசும் – திரவியத்தையும், சிக்கெனத் தேடு – உறுதியாகத் தேடு.
[க-உ] தானியத்தையும் திரவியத்தையும் நீ உறுதியாகத் தேடுவாய்.
14கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை.
[ப. உ] கற்பு எனப்படுவது – (பெண்களுக்கு) கற்பென்று சொல்லப்படுவது, சொல் – கணவர் சொல்லுக்கு, திறம்பாமை – மாறுபடாமையாகும்.
[க-உ] பெண்களுக்குக் கற்பென்று சொல்லப்படுவது, கணவர் வார்த்தைக்கு மாறாக நடவாமையாகும்.
15காவல் தானே யாவையர்க் கழகு.
[ப. உ] காவல்தானே – (கற்புக்கு அழிவு வராமல்) காத்துக் பொள்ளுதல், பாவையர்க்கு – பெண்களுக்கு, அழகு – அழகாகும்.
[க-உ] கற்புக்கு அழிவு வராமல் பார்த்துக்கொள்வதே பெண்களுக்கு அழகாகும்.
16கிட்டா தாயின் வெட்டென மற.
[ப-உ] கிட்டாதாயின் – (விரும்பிய ஒரு பொருள்) கிடைக்காதானால், வெட்டென மற – சீக்கிரத்தில் மறந்து விடுவாய்.
[க-உ] விரும்பிய ஒரு பொருள் கிடைக்காவிட்டால், சீக்கிரம் அதனை நீ மறந்து விடுவாய்.
17கீழோ ராயினும் தாழ வுரை.
[ப. உ] கீழோர் ஆயினும் – தாழ்ந்தவராயினும், தாழ உரை – தாழ்மையாகப் பேசு.
[க-உ] தாழ்ந்தவரிதும் நீ வணக்கமுடன் பேசு.
18குற்றம் பார்க்கில் சுற்ற மில்லை.
[ப. உ] குற்றம் பார்க்கில் – குற்றங்களை ஆராய்ந்து பார்த்தால், சுற்றம் – உறவினர், இல்லை – (ஒருவரும்) இல்லை.
[க-உ] குற்றங்களையே நாம் ஆராய்வோமாயின், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான குற்ற முடையவராகவே காணப்படுவர். ஆகையால், குற்ற மில்லாத சுற்றத்தாரை நாம் பார்ப்பது அரிதாகும் என்பதாம்.
19கூரம் பாயினும் வீரியம் பேசேல்.
[ப-உ ] கூர் அம்பு ஆயினும் – (உனது கையிலுள்ளது) கூர்மையான அம்பானாலும், வீரியம் – வீரத்தன்மையை, பேசேல் – நீ பேசாதே.
[க-உ] உனது கையில் உள்ளது கூர்மையான அம்பாயினும் நீ உன் வீரத்தைப் புகழ்ந்து பேசாதே.
20கெடுவது செய்யின் விடுவது கருமம்.
[ப. உ] கெடுவது – தீமையை, செய்யின் – (உன் சிநேகன்) செய்வானாயின், விடுவது – (அவனது சிநேகத்தை) நீ விட்டு விடுவது, கருமம்- நல்ல செயலாம்.
[க-உ] உன்னுடைய சிநேகிதன் உனக்கொரு தீங்கு செய்வானாயின், அவனது சிநேகத்தை நீவிட்டு விடுவது நல்லதாகும்.
21கேட்டி லுறுதி கூட்டு முடைமை.
[ப. உ] கேட்டில் – வறுமை காலத்தில், உறுதி – மனம் தளராதிரு, உடைமை – செல்வத்தை, கூட்டும் – சேர்க்கும்.
[க-உ] வறுமை வந்த போது மனந் தளராமல் இருப்பது ஒருவர்க்குச் செல்வத்தை உண்டாக்கும்.
22கைப்பொரு டன்னின் மெய்ப்பொருள் கல்வி.
[ப. உ] கைப்பொருள் – தன்னின் கையிலிருக்கின்ற செல்வத்தைப் பார்க்கிலும், மெய்ப்பொருள் – உண்மையான செல்வமானது, கல்வி – கல்வியே யாகும்.
[க-உ] திரவியத்தை காட்டிலும் கல்வியே உண்மையான பொருளாகும்.
23கொற்றவ னறித லுற்றிடத் துதவி.
[ப. உ] கொற்றவன் – அரசனை, அறிதல் – (ஒருவன்) அறிந்திருத்தல், உற்றிடத்து – (அவனுக்கு ஆபத்து வந்து) பொருந்திய இடத்தில், உதவி – உதவியாகும்.
[க-உ] ஒருவனுக்கு அரசன் அறிமுகமாய் இருப்பது ஆபத்தில் உதவியாகும்.
உற்ற விடத்து என்பது உற்றிடத்து என விகாரப்பட்டது.
24கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
[ப. உ] கோள் செவி – கோள் கேட்கும் ஒருவனுடைய காதில், குறளை – (ஒருவன் சொல்லும்) கோள், காற்றுடன் – காற்றுடன் சேர்ந்த, நெருப்பு – நெருப்பைப் போல மூளும்.
[க-உ] கோள் கேட்பதற்கு விருப்பமுடையவன் காதில் சொன்ன கோட்சொல் காற்றால் வீசப்பட்ட நெருப்புப் போல அதிகமாக மூளும்.
25கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.
[ப. உ] கௌவை – (பிறர் மேல்) நிந்தை சொற்களை, சொல்லின் – ஒருவன் சொன்னால், எவ்வருக்கும், – எல்லோருக்கும், பகை – (அவன்) பகையாவான்.
[க-உ] பிறர் பழி தூற்றுகின்றவன் எல்லோருக்கும் பகையாவான். எவருக்கும் என்பது எவ்வருக்கும் என விகாரப் பட்டது.
26சந்ததிக் கழகு வந்தி செய்யாமை.
[ப. உ] சந்ததிக்கழகு – தனது வமிசத்திற்கழகு, வந்தி செய்யாமை – (ஒருவன் தன் மனைவியை) மலடியாகச் செய்யாமையாகும்.
[க-உ] வமிசத்திற்கு அழகு மக்கட் பேறு உண்டாகுவது. ஒருவன் தன் மனைவியுடன் கூடி வாழ்தல் வேண்டும்.
27சான்றோர் என்கை யீன்றோர்க் கழகு.
[ப. உ] சான்றோர் என்கை – (தன்னுடைய புத்திரரைக் கல்வியறிவால் நிறைந்தவர் என்று பிறர்) சொல்வது, ஈன்றோர்க்கு – பெற்றவர்களுக்கு, அழகு – அழகாகும்.
[க-உ] தம் புத்திரரை அறிவுடையவர் என்று பிறர் சொல்லக் கேட்பது தாய் தந்தையருக்கு அழகாகும்.
28சிவத்தைப் பேணில் தவத்திற் கழகு.
[ப. உ] சிவத்தை – சிவனை, பேணின் – (ஒருவன்) வழி பட்டால், தவத்திற்கு – (அவன் செய்யும்) தவத்திற்கு அழகு – அழகாகும்.
[க-உ ] ஒருவன் சிவபெருமானை வழிபடுதல், அவன் தவத்திற்கு அழகாகும்.
29சீரைத் தேடின் ஏரைத் தேடு.
[ப. உ] சீரை – பெருமையை, தேடின் – தேடினால், ஏரைத்தேடு – ஏர் என்னும் உழுபடையைத் தேடுவாய்.
[க-உ] ஒருவனுக்கு உழுதுண்டு வாழ்வது சிறப்புடையதாகும்.
30சுற்றத்திற் கழகு சூழ விருத்தல்.
[ப. உ] சுற்றத்திற்கு – உறவினருக்கு, அழகு – அழகாவது, சூழ இருத்தல் – சூழும்படி வந்திருத்தல்.
[க-உ] சுற்றத்தார்க் கழகாவது இன்ப துன்ப காலங்களில் சூழ வந்திருப்பதாகும்.
31சூதும் வாதும் வேதனை செய்யும்.
[ப. உ] சூதும் – சூதாடுதலும், வாதும் – குதர்க்கம் பேசுதலும், வேதனை – துன்பத்தை, செய்யும் – உண்டாக்கும்.
[க-உ] சூதாடுதலும் வீண் தர்க்கம் செய்தலும் துன்பத்தை உண்டாகும்.
32செய்தவ மறந்தால் கைதவ மாளும்.
[ப. உ] செய்தவம் – செய்யும் தவத்தை , மறந்தால் – (ஒருவன்) மறப்பானாயின், கைதவம் – (அவனை) வஞ்சனையாகிய மாயை, ஆளும் – அடிமை கொள்ளும்.
[க-உ] ஒருவன் தவத்தைச் செய்யானாயின் அவனை மாயையானது அடிமை கொள்ளும்.
33சேமம் புகினும் சாமத் துறங்கு.
[ப. உ] சேமம் புகினும் – காவல் செய்யுமிடத்திற்குச் சென்றாலும், சாமத்து – நடு இரவில், உறங்கு – நித்திரை செய்.
[க-உ] நீ காவல் காக்கும் இடத்திலும் நடு இரவில் நித்திரை செய்வாய்.
34சையொத் திருந்தால் ஐய மிட்டுண்.
[ப. உ] சை – கைப்பொருள், ஒத்திருந்தால் – இசைந்திருந்தால், ஐயமிட்டு – பிச்சையிட்டு, உண் – உண்பாய். சை – ஒரெழுத் தொரு மொழி ; பொருள்.
[க-உ ] உன்னிடத்தில் பொருள் இசைந்திருந்தால், நீ பிச்சையிட்டு, உண்பாய்.
35சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
[ப. உ] சொக்கர் என்பவர் – பொன்னுடையவர் என்று சொல்லப் படுபவர், அத்தம்- (அறமும் இன்பமுமாகிய மற்றைப்) புருடார்த்தங்களை, பெறுவர் – அடைவர்.
[க-உ] பொருளுடையவர் , அறமும் இன்பமுமாகிய புருடார்த்தங்களைப் பெறுவர்.
36சோம்பர் என்பவர் தேம்பித்திரிவர்.
[ப. உ] சோம்பர் என்பவர் – சோம்பலுடையவர், தேம்பித் திரிவர் – (வறுமையால் பிறகு) வருந்தித் திரிவர்.
[க-உ] சோம்பேறிகள் பிற்காலத்தில் வறுமையால் வருந்துவர்.
37தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
[ப. உ] தந்தை – தகப்பனாருடைய, சொல் – சொல்லுக்கு, மிக்க- மேன்மையான, மந்திரம்-பலனைத் தரும் மந்திரமானது, இல்லை – வேறொன்று இல்லை.
[க-உ] தகப்பனார் சொல்லுக்கு மேலான மந்திரமில்லை.
38தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை.
[ப. உ] தாயின் – தாயாரைப் பார்க்கிலும், சிறந்த – சிறப்பான, ஒரு கோயிலும் – ஒரு கோயிலும், இல்லை – இல்லையாம்.
[க-உ] கடவுளை வணங்குவதைக் காட்டிலும், தாயை வணங்குவது சிறப்புடையதாகும். சிறந்த என்பது சிறந்து என்று விகாரப்பட்டது . தாய் சொல் துறந்தால் வாசகமில்லை’ என்றும் பாடம்.
39திரைகடலோடியுந் திரவியம் தேடு.
[ப. உ] திரைகடல்- அலை வீசுகின்ற கடல் மார்க்கமாய் , ஓடியும் – (தூர பிரதேசம்) சென்றும், திரவியம்- பொருளை, தேடு – சம்பாதி.
[க-உ] நீ கடல் வழியாகப் பல ஊர்கள் சென்றும் பொருளைத் தேடுவாயாக.
40தீராக் கோபம் போரா முடியும்.
[ப. உ] தீரா – நீங்காத, கோபம் – கோபமானது, போரா- சண்டையாக, முடியும் – முடிந்து விடும்.
[க-உ] தணியாத கோபமானது சண்டையாக முடிந்து விடும்.
41துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு.
[ப. உ] துடியா – (தன் கணவருக்குத் துன்பம் வந்த போது மனம்) பதைக்காத, பெண்டிர் – பெண்கள், மடியில் – (அக்கணவருடைய) மடியில், நெருப்பு – நெருப்புக்கு ஒப்பாவார்.
[க-உ ] தன் கணவனுக்குத் துன்பம் நேர்ந்தபோது பதை பதைக்காத மனைவி, அவனுக்கு அடிவயிற்றில் கட்டிய நெருப்புப் போல் துன்பம் செய்வாள்.
42தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்.
[ப. உ] தூற்றும் – (தம் கணவர் மீது குற்றஞ் சொல்லி) தூற்றுகின்ற, பெண்டிர் – பெண்களை , கூற்று எனத்தகும் – (அக்கணவருக்கு) எமன் என்று சொல்லத் தகும்.
[க-உ ] கணவர் மீது அவதாறு பேசும் மனைவி அவருக்கு எமன் என்று சொல்லத்தகும்.
43தெய்வம் சீரில் கைதவ மாளும்
[ப. உ] தெய்வம் – கடவுள் , சீரின் – (ஒருவனைக்) கோபித்தால், கைதவம் – அவனைத் துன்பமானது, ஆளும் – அடிமை கொள்ளும்.
[க-உ] தெய்வம் கோபிக்குமாயின் துன்ப முண்டாகும்.
44தேடா தழிக்கின் பாடா முடியும்.
[ப. உ] தேடாது – (ஒருவன் வருந்திச்) சம்பாதியாமல், அழிக்கில்- (உள்ள பொருளை) அழிப்பானே யானால், பாடா முடியும் -(அவனுக்குப் பிறகு) துன்பமாக முடியும்.
[க-உ] பொருளைச் சம்பாதியாமல் முன்னோர் தேடி வைத்த பொருளையே செலவழித்துக் கொண்டிருந்தால் பிற்காலத்தில் அது துன்பமாக முடியும்.
45தையும் மாசியும் வையகத் துறங்கு.
[ப-உ] தையும் மாசியும் – தை மாதத்திலும் மாசி மாதத்திலும், வை அகத்து – வைக்கோலால் வேய்ந்த கூரை வீட்டில், உறங்கு – நித்திரை செய்.
[க-உ] தை, மாசி மாதங்களில் குளிர் அதிகமாகையால், வைக்கோல் வேய்ந்த கூரை வீட்டில் நீ உறங்குவாயாக.
46தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது.
[ப. உ] தொழுது – (ஒருவரை) வணங்கி, ஊண் – உண்ணும் உணவினது, சுவையின் – சுவையைப் பார்க்கிலும், உழுது – உழுது பயிர் செய்து, ஊண் – உண்ணும் உணவின் சுவை, இனிது – இன்பம் தருவதாகும்.
[க-உ] சேவகம் செய்து பிழைப்பதைக் காட்டிலும் பயிர் செய்து பிழைப்பதே இன்பமுடையதாகும்.
47தோழனோடு மேழைமை பேசேல்.
[ப. உ] தோழனோடும் – உன்னுடைய நண்பனோடும், ஏழைமை பேசேல் – உனது வறுமையைப் பற்றி பேசாதே.
[க-உ] உனது வறுமையை உன் நண்பனிடத்திலும் நீ சொல்லாதே.
48நல்லிணக்க மல்லது அல்லல் படுத்தும்.
[ப. உ] நல்லிணக்கம் அல்லது – நல்ல சேர்க்கை யல்லாதது, அல்லல்- துன்பத்தை, படுத்தும்- உண்டாக்கும்.
[க-உ] கெட்ட சேர்க்கை ஒருவனுக்குத் துன்பத்தைத் தொடுக்கும்.
49நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை.
[ப. உ] நாடெங்கும் – தேசமெங்கும், வாழ – செழித்து வாழ, கேடொன்றும் -ஒருவித கெடுதியும், இல் — இல்லையாம்.
[க-உ] தேசமெங்கும் செழித்திருந்தால் ஒருவர்க்கும் ஒரு கெடுதியும் இல்லை.
50நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை.
[ப. உ] நிற்க – (கல்வியானது) நிலைக்க, கற்றல் – படித்தல், சொல் – (தான் சொல்லும்) சொல், திறம்பாமை – தவறாமை.
[க-உ] நிலைபெறக் கற்றலாவது பயனின்றிக் கழியும் சொற்களைச் சொல்லாமையாகும்.
51நீரகம் பொருந்திய ஊரகத் திரு.
[ப. உ] நீர் – நீர் வளப்பம், அகம் – தன்னிடத்து, பொருந்திய – அமைந்த, ஊரகத்து – ஊரில், இரு – குடியிருப்பாயாக.
[க-உ] நீர் வளப்பம் பொருந்திய ஊரில் நீ குடியிருப்பாயாக.
52நுண்ணிய கருமமு மெண்ணித் துணி.
[ப-உ] நுண்ணிய – சிறிய, கருமமும் – காரியத்தையும், எண்ணித் துணி – ஆலோசித்து நீ செய்யத் துணிவாய்.
[க-உ] சிறிய காரியத்தையும் நன்கு ஆலோசனை செய்து, பிறகு அதனைச் செய்யத் துணிவாயாக.
53நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு.
[ப-உ] நூல் முறை – நீதி நூலில் சொல்லப்பட்ட முறையை, தெரிந்து – அறிந்து, சீலத்து – நல்லொழுக்க வழியில், ஒழுகு – நட.
[க-உ] நீதி நூலில் சொல்லப்பட்ட விதிகளை அறிந்து ஒழுக்க வழியில் நடப்பாயாக.
54நெஞ்சை யொளித்தொரு வஞ்சகமில்லை.
[ப. உ] நெஞ்சை – மனத்தை, ஒளித்து – மறைத்து, ஒரு வஞ்சகம் – யாதொரு வஞ்சனையும், இல்லை – இல்லையாம்.
[க-உ] மனத்திற்குத் தெரியாத வஞ்சகமொன்றும் இல்லையாம்
55நேரா நோன்பு சீராகாது.
[ப. உ] நேரா – (மனம்) ஒவ்வாத, நோன்பு – தவம், சீர் ஆகாது – சீராக முடியாது.
[க-உ] மனம் பொருந்திச் செய்யாத தவமானது, செம்மையாக முடியாது.
56நைபவ ரெனினும் நொய்ய வுரையேல்.
[ப-உ] நைபவர் எனினும் – துன்பத்தால் வருந்துகின்ற எளியவராயினும், நொய்ய – அற்ப வார்த்தைகளை, உரையேல் – சொல்லாதே.
[க-உ] எளியவராயினும் அற்ப வார்த்தைகளை நீ உரைக்காதே.
57நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவார்.
[ப. உ] நொய்யவ ரென்பவர் – சிறியவர் என்று இகழப்படுபவர் – வெய்யவராவார் – (அவர் தாம் செய்யும் காரியத்தால்) விரும்பப்படுபவராவார். (வெம்மை – விருப்பம்)
[க-உ] சிறியவரென்று இகழப்படுவோரும் விரும்பும் தன்மைய ராவார்.
58நோன்பென் பதுவே கொன்று தின்னாமை.
[ப. உ] நோன்பென்பது – விரதம் என்று சொல்லப் படுவது, கொன்று – ஒருயிரைக் கொலை செய்து, தின்னாமை – (அதன் உடம்பை) உண்ணாமையாகும்.
[க-உ] விரதமானது ஒரு உயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னாமையாம்.
59பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
[ப. உ] பண்ணிய – ஒருவன் செய்த, பயிரில் -பயிரின் விளைவினாலும், விளைவு இல்லாமையினாலும், புண்ணியம் – அவனிடத்தில் புண்ணியம் உள்ளமையும், இல்லாமையும், தெரியும் – விளங்கும்.
[க-உ] ஒருவன் செய்த பயிர் விளைவிலிருந்து அவனுடைய புண்ணியத்தை அறியப்படும்.
60பாலோ டாயினும் காலமறிந் துண்.
[ப-உ] பாலோடு ஆயினும் – பாலுடன் கலந்த அன்னத்தை உண்ணுவதானாலும், காலமறிந்து – உண்ணும் காலத்தை அறிந்து, உண் – நீ புசிப்பாய்.
[க-உ] பாலன்ன மாயினும் உண்ணும் காலமறிந்து உண்ணல் வேண்டும.
61பிறன்மனை புகாமை அறமெனத் தகும்.
[ப. உ] பிறன்மனை – பிறருடைய மனைவியை (விரும்பி), புகாமை – செல்லாமை, அறம் எனத் தகும் – தருமம் என்று சொல்லத் தகும்.
[க-உ] பிறன் மனைவியை விரும்பாமை சிறந்த தருமமாகும்.
62பீரம் பேணி பாரந் தாங்கும்.
[ப. உ] பீரம் பேணி- தாய்ப்பால் உண்டு வளர்ந்தவன், பாரம் – பாரமான சுமையை, தாங்கும்- சுமப்பான்.
[க-உ] தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்தவன் தேக வன்மை யுடையவனாவான். பீர்- தாய்ப்பால், அம் – சாரியை.
63புலையும் கொலையும் களவும் தவிர்.
[ப. உ] புலையும் – மாமிசம் உண்ணுதலையும், கொலை – ஓர் உயிரைக் கொல்லுதலையும், களவும் – பிறர் பொருளைத் திருடுதலையும், தவிர் – ஒழித்து விடுவாய்.
[க-உ] நீ புலால் உண்ணுதலையும், கொலை செய்தலையும், திருடுதலையும் செய்யாதே.
64பூரியோர்க் கில்லை சீரிய ஒழுக்கம்.
[ப. உ] பூரியோர்க்கு- கீழ்மக்களுக்கு, சீரிய-சிறந்த, ஒழுக்கம் – ஆசாரமானது, இல்லை – இல்லையாம்.
[க-உ] கீழ் மக்களிடத்தில் சிறந்த ஆசாரமானது கிடையாது.
65பெற்றோர்க் கில்லை சுற்றமும் சினமும்.
[ப-உ] பெற்றோர்க்கு – (மெய்ஞ்ஞானத்தைப்) பெற்றவர்க்கு, சுற்றமும் – உறவினர்மேல் ஆசையும், சினமும் – மற்றவர்மேல் வெறுப்பும், இல்லை – இல்லையாம்.
[க-உ] மெய்ஞ்ஞானம் பெற்றவர்க்கு சுற்றமும் கோபமும் இல்லை.
66பேதமை யென்பது மாதர்க் கணிகலம்.
[ப-உ ] பேதமை என்பது – அறியாமை என்று சொல்லப் படுவது, மாதர்க்கு – பெண்களுக்கு, அணிகலம் – ஆபரணமாகும்.
[க-உ] அறிந்திருந்தும் அறியாதவர் போல் நடிக்கும் குணம் பெண்களுக்கு ஆபரணமாகும். ஆபரணம் பெண்களுக்கு அழகு செய்வது போல் இக்குணமும் அவர்களுக்கு அழகு செய்வதாகும். ஆபரணம் வேண்டிய போது அணிந்து கொள்ளப்படுவது போல இக்குணமும் அவர்கள் வேண்டிய போது அணியப் படுவதாகும் என்பது அறியத் தக்கது.
67பையச் சென்றால் வையந் தாங்கும்.
[ப. உ] பைய – மெல்ல, சென்றால் – (ஒருவன் தக்க வழியிலே) நடந்தால், வையம் – பூமியிலுள்ளோர், தாங்கும் – (அவனை) மேலாகக் கொள்வர்.
[க-உ] ஒருவன் தகுதியான வழியில் அமைதியாக நடந்தால் உலகத்தார் அவனை மேலாகக் கொள்வர்.
68பொல்லாங் கென்பவை யெல்லாம் தவிர்.
[ப-உ] பொல்லாங்கு என்பவை – தீங்குகள் என்று சொல்லப் பட்டவை, எல்லாம்- யாவற்றையும், தவிர்- நீ நீக்கி விடுவாய்.
[க-உ ] தீங்குகள் என்று சொல்லப்பட்டவை யாவற்றையும் நீ செய்யாதே.
69போனகம் என்பது தானுழந் துண்டல்.
[ப-உ] போனகம் என்பது – உணவென்று சொல்லப் படுவது, தானுழந்து – தான் வருந்தி, உண்டல்-உண்ணுவதாகும்.
[க-உ] உணவென்று சிறப்பாகச் சொல்லப்படுவது, ஒருவன் வருந்திச் சம்பாதித்ததை உண்பதாம்.
70மருந்தே யாயினும் விருந்தோ டுண்.
[ப-உ] மருந்தேயாயானும் – (உண்ணப்படுவது) கிடைத்தற்கரிய தேவாமிர்தமே யானாலும், விருந்தோடு – விருந்தாளிகளுடன், உண் – நீ புசிப்பாய்.
[க-உ] கிடைத்தற்கரிய தேவாமிர்த மானாலும் விருந்தினருடனே உண்பாயாக.
71மாரி யல்லது காரிய மில்லை.
[ப. உ] மாரி யல்லது – மழையினால் அல்லாமல், காரியம் இல்லை – யாதொரு காரியமும் இல்லை.
[க-உ] மழை இல்லாவிட்டால் உலகில் எக்காரியமும் நடை பெறாது.
72மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
[ப-உ] மின்னுக்கெல்லாம் – மின்னலுக்கெல்லாம், பின்னுக்கு மழை -பின்னால் மழை பெய்யும்.
[க-உ] மின்னுவதைப் பார்த்துப் பின்னுக்கு நல்ல மழை இருக்கின்றது என்பதை நீ அறிந்து கொள்க.
73மீகாமனில்லா மரக்கல மோடாது.
[ப. உ] மீகாமன் – மாலுமி, இல்லா – இல்லாத, மரக்கலம் – கப்பல், ஓடாது – கடலில் செவ்வையாக ஓடாது.
[க-உ] மாலுமி யில்லாத கப்பல் ஓடாதது போலத் தலைவனில்லாத குடும்பமும் வேந்தனில்லாத நாடும் செம்மையாக நடவா.
74முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
[ப. உ] முற்பகல்- ஒரு பகலின் முன் பங்கில், செய்யின் – பிறனுக்குத் தீங்கு ஒருவன் செய்தால், பிற்பகல் – அதன் பின் பங்கிலே, விளையும் (செய்தவனுக்கு) அத்தீங்கு தானே உண்டாகும்.
[க-உ] ஒரு பகலின் முற்பாகத்தில் பிறருக்குத் தீங்கு செய்தால், அத்தீங்கு அப்பகலின் பிற்பாகத்தில் தனக்குண்டாகும். முற்பகல் பிற்பகல் என்றது விரைவு பற்றி யென்க. இது நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாக சொன்னதாகும்.
75மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம்.
[ப. உ] மூத்தோர் – (கல்வியறிவினால்)பெரியோர், சொன்ன – சொல்லிய, வார்த்தை – சிறந்த வார்த்தையானது, அமிர்தம் – தேவாமிர்தத்தைப் போன்றதாகும்.
[க-உ ] பெரியோர் வார்த்தை தேவாமிர்தம் போன்று மிக்க நன்மையைச் செய்யுமாகையால், அது மிகவும் சிறந்ததாகும்.
76மெத்தையில் படுத்தல் நித்திரைக் கழகு.
[ப-உ] மெத்தையில் – பஞ்சணையில், படுத்தல் – படுத்தலானது நித்திரைக்கு – (ஒருவன் செய்கின்ற) நித்திரைக்கு, அழகு – அழகாகும்.
[க-உ] மென்மையான பஞ்சணையில் படுத்தல் நித்திரைக்கு அழகாகும்.
77மேழிச் செல்வம் கோழை படாது.
[ப-உ] மேழி – கலப்பை கொண்டு உழுது பயிர் செய்வதால் உண்டாகின்ற, செல்வம் – செல்வமானது, கோழை படாது – குறையாது
[க–] உழுது பயிர் செய்வதால் உண்டாகும் செல்வம் குறைபடாது.
78மைவிழி யார்த்தம் மனையகன் றொழுகு.
[ப. உ] மைவிழியார்த்தம்- மை பூசிய கண்களுடைய வேசிகளின், மனை – வீட்டினை, அகன்று ஒழுகு – விலகி நடப்பாய்.
[க-உ ] வேசிகளின் வீட்டிற்குச் செல்லாதே.
79மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
[ப-உ] மொழிவது – (பெரியோர்) சொல்வதை, மறுக்கின் – கேளாமல் செய்தால், கருமம் – (ஒருவன் செய்யும்) தொழில், அழிவது – கெடுவதாகும்.
[க-உ ] ஒருவன் பெரியோர் சொல்லை மீறி நடந்தால், அவன் செய்யும் தொழில் பயன்படாது அழியும்.
80மோன மென்பது ஞான வரம்பு.
[ப-உ ] மோனம் என்பது – மௌன நிலை என்று சொல்லப் படுவது, ஞான வரம்பு – மெய்ஞ்ஞானத்துக்கு எல்லையாகும்.
[க-உ] மௌனம் என்பது ஞானத்தின் எல்லையாகும்.
81வளவ னாயினு மளவறிந் தழித்துண்.
[ப-உ ] வளவன் ஆயினும் – (செல்வத்தில் நீ) சோழனுக்குச் சமானமானவன் ஆனாலும், அளவு – (வருவாயின்) அளவினை, அறிந்து – தெரிந்து, அழித்து – செலவழித்து, உண் – சாப்பிடுவாய்.
[க-உ] நீ எவ்வளவு பெரிய செல்வந்தனாயினும் வரவுக்குத் தக்கபடி செலவு செய்து வாழ்வாயாக.
82வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
[ப-உ] வானம் – மழையானது, சுருங்கின் – குறையுமாயின், தானம் – தருமமானது, சுருங்கும் – குறையும்.
[க-உ] மழையில்லாவிட்டால் உலகில் எவரும் தானம் செய்யார்.
83விருந்திலோர்க் கில்லை பொருந்திய ஒழுக்கம்.
[ப-உ] விருந்து இலோர்க்கு – விருந்திடாதவர்க்கு, பொருந்திய – தகுதியான, ஒழுக்கம் – இல்லற ஒழுக்கம், இல்லை – இல்லையாம்.
[க-உ ] விருந்திடாதவர்க்கு இல்லறம் இல்லையாகும்.
84வீரன் கேண்மை கூரம் பாகும்.
[ப. உ] வீரன் – வீரனுடைய, கேண்மை – சிநேகம், கூர் – கூர்மையான, அம்பாகும் – அம்பை ஒக்கும்.
[க-உ] வீரனுடைய நட்பு ஒருவனுக்குப் பகையை வெல்ல உதவும் கூர்மையான அம்பு போல்வதாகும்.
85உரவோ ரென்கை இரவா திருத்தல்.
[ப-உ] உரவோர் என் கை – வல்லவரென்று சொல்லப்படுதல், இரவாது – யாசியாமல், இருத்தல் – இருக்கையாகும்.
[க-உ] வன்மையுடையவர் என்று சொல்லப்படுவது, யாதொன்றையும் பிறரிடம் யாசியாம லிருத்தலாம்.
86ஊக்க முடைமை ஆக்கத்திற் கழகு.
[ப. உ] ஊக்க முடைமை – (ஒரு காரியம் செய்வதில்) மன எழுச்சி உடைத்தாதல், ஆக்கத்திற்கு – செல்வத்திற்கு, அழகு – அழகாகும்.
[க-உ] மனவெழுச்சி யுடையவனாய் இருத்தல் ஒருவன் தன் ஆக்கத்திற் கழகாகும்.
87வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை.
[ப-உ] வெள்ளைக்கு – குற்ற மில்லாத பரிசுத்த குணமுடையவனிடத்து, கள்ளச் சிந்தை – வஞ்சனை பொருந்திய நினைப்பு , இல்லை – இல்லையாம்.
[க-உ] குற்றமற்ற மனமுடையவனிடத்தில் வஞ்சகமான எண்ணம் இல்லையாகும்.
88வேந்தன் சீறின் ஆந்துணை யில்லை.
[ப-உ] வேந்தன் – அரசன், சீறின் – ஒருவனைக் கோபிப்பானே யானால், ஆம் – (அப்போது அவனுக்கு) உதவுகின்ற, துணை- சகாயம், இல்லை – இல்லையாம்.
[க-உ ] அரசன் ஒருவனைக் கோபித்தால், அவனுக்கு வேறு துணையில்லை .
89வையந் தோறும் தெய்வந் தொழு.
[ப. உ] வையம் தோறும் – உலகிலுள்ள தலங்கள் தோறும், தெய்வம் – கடவுளை, தொழு – வணங்குவாய்.
[க-உ] உலகிலுள்ள தலங்கள் தோறும் சென்று நீ கடவுளை வணங்கு.
90ஒத்த விடத்து நித்திரை கொள்.
[ப-உ ] ஒத்த இடத்து – மனம் சம்மதித்த இடத்தில், நித்திரைகொள் – நித்திரை பண்ணு.
[க-உ] மனம் விரும்பிய இடத்தில் நீ நித்திரை செய்.
91ஓதாதார்க் கில்லை உணர்வொடு ஒழுக்கம்.
[ப. உ] ஓதாதார்க்கு – நூல்களை கல்லாதவர்க்கு, உணர்வொடு – அறிவுடனே, ஒழுக்கம் – நல்ல நடக்கையும், இல்லை – இல்லையாம்.
[க-உ] நல்ல நூல்களைக் கல்லாதவர்க்கு அறிவும் ஒழுக்கமும் இல்லையாகும்.
error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop