நல்வழி — ஔவையார் | 40 பாடல்களும் முழு உரையுடன்

ஔவையார் நீதி நூல்

நல்வழி

வெண்பா · 40 பாடல்கள்

நாற்பது வெண்பாக்கள். வாழ்வியல் நெறியை உவமையோடு கூறுவது. இ-ள், இ-ம் உரையுடன்.

40பாடங்கள்
ப-உபதவுரை
க-உகருத்துரை
தேர்வுக் குறிப்பு: TNPSC வினாக்கள் பெரும்பாலும் “இவ்வரி இடம்பெற்ற நூல் எது?” என வகைப்படுத்தும் வகையிலேயே அமைகின்றன. அடியை நூலோடு இணைத்து நினைவில் கொள்ளுங்கள்.

நல்வழி — முழுப் பாடங்கள்

பாடல் 1
புண்ணியமாம் பாவம் போம் போனநாட் செய்தவவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள்– எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை யெச்சமயத் தோர்சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
இ-ள்: புண்ணியம் ஆம் – புண்ணியமே செய்யத்தக்கது;– பாவம் போம் – பாவமே ஒழியத்தக்கது. –போன நாள் செய்த அவை – முற்பிறப்பிற்செய்த அந்தப் புண்ணிய பாவங்களே — மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் – பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு (இப்பிறப்பில் இன்பத்துன்பங்களை அநுபவித்தற்குக் காரணமாக) வைத்த பொருளாகும். — எண்ணுங்கால் எச்சமயத்தோர் சொல்லும் ஈது ஒழிய வேறு இல்லை – ஆராயுமிடத்து எந்தச் சமயத்தார் சொல்வதும் இந்தப்பொருளே யல்லாமல் மற்றொன்றுமில்லை, –தீது ஒழிய நன்மை செயல் – (ஆதலினாலே) பாவம் நீங்கப் புண்ணியத்தைச் செய்க . எ – று.
இ-ம்: இன்பத்துக்குக் காரணம் புண்ணியமுகும் துன்பத்துக்குக் காரணம் பாவமுமாதலிற் பாவத்தை ஒழித்துப் புண்ணியத்தைச் செய்க. எ-ம்.
பாடல் 2
சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் — மேதினியில்
இட்டார் பெரியோ ரிடாதா ரிழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள படி.
இ – ள்: சாற்றுங்கால் மேதினியில் சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை — சொல்லுமிடத்துச் பூமியிலே (உயர்வாகிய சாதி யென்றும் இழிவாகிய சாதியென்றும்) சாதி இரண்டேயல்லாமல் வேறில்லை. – (அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின்) — நீதி வழுவா நெறி முறையின் இட்டார் பெரியோர் – நீதி தவறாத நல்வழியிலே நின்று கொண்டு முறைமையோடு (சற்பாத்திரங்களாய் உள்ளவருக்குக்) கொடுத்தவரே உயர்வாகிய சாதியார் ; — இடாதார் இழிகுலத்தோர் – கொடாதவரே இழிவாகிய சாதி யார். – பட்டாங்கில் உள்ளபடி – உண்மை நூலின் உள்ள கிரமம் (இதுவேயாம்.) எ – று.
இ – ம்: சற்பாத்திரத்துக்குக் கொடுத்தவரே உயர்வாகிய சாதியார், கொடாதவரே இழிவாகிய சாதியார். எ-ம்.
பாடல் 3
இடும்பைக் கிடும்பை யியலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென் நிராதே – இடுங்கடுக
உண்டாயி னுண்டாகு மூழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு
இ – ள்: இயல் உடம்பு இது- திரிகின்ற இந்த உடம்பானது — இடும்பைக்கு இடும்பை அன்றே — பல துன்பங்காளாகிய சரக்குகளுக்கு நிறைத்து வைக்கும் பையன்றோ — இடும் பொய்யை மெய் என்று இராதே — (போசனத்தை) இடுகின்ற நிலையில்லாததாகிய இந்த உடம்பை நிலையுடையதென்று நம்பி இராமல், –கடுக இடும் – சீக்கிரம் (சற்பாத்திரங்களாய் உள்ளவர்களுக்கு) கொடுங்கள் — உண்டாயின் – (இத்தருமம் உங்களிடத்து உண்டாயின், — பெரு வலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு – பெரிய வலிமையையுடைய மலநோய் நீங்கியவரை மெச்சிக்கொள்கின்ற முத்தியானது ஊழின் உண்டாகும் முறையினாலே (உங்களுக்குக்) கிடைக்கும். எ – று . ஏ அசை.
இ-ம் : நிலையில்லாத உடம்பு உள்ள பொழுதே சற்பாத்திரத்திலே தானஞ்செய்தவருக்கு, அந்தத் தருமத்தினாலே சற்குருவினது திருவருளும், அந்தத் திருவருளினாலே ஞானமும், அந்த ஞானத்தினாலே முத்தியும் சித்திக்கும். எ-ம்.
பாடல் 4
எண்ணி யொருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.
இ-ள்: யார்க்கும் – யாவருக்காயினும், — புண்ணியம் வந்து எய்தும் போது அல்லால் – (முன் செய்த) புண்ணியம் வந்து கூடிய போதல்லாமல், — எண்ணி ஒரு கருமம் செய்யொண்ணாது – (மற்றைக்காலத்திலே) நினைத்து ஒரு தொழிலைச் செய்ய முடியாது. — கண் இல்லான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்கும் – (புண்ணியம் வந்து கூடாத அக்காலத்திற செய்யும் அத்தொழிலானது) கண்ணில்லாதவன் மாங்காய் விழுதற்கு எறிந்த மாத்திரைக் கோலைப் போலும், — ஆம் காலம் அவர்க்கு ஆகும் – (புண்ணியம் வந்து ) கூடியபோது அவருக்கு (அத்தொழில் தானே) முடியும். எ – று . ஏ அசை.
இ-ம்: புண்ணியமில்லாதவன் எண்ணிய தொழிலும் முடியப்பெறாது கைப்பொருளும் இழப்பான். எ-ம்.
பாடல் 5
வருந்தி யழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா – இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரா் தாநினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்,
இ-ள்: வாராத வருந்தி அழைத்தாலும் வாரா – (தமக்கு) வாராதவைகள், வருந்தி அழைத்தாலும் வாராவாம். — பொருந்துவன போமின் என்றால் போகா – (தமக்கு) வருபவைகள், –போமின் என்று வெறுத்தாலும் போகாவாம்.– இருந்து ஏங்கி – (இவ்வுண்மையை அறியாமல்) இருந்துகொண்டு ஏக்க முற்று – நெஞ்சம் புண் ஆகத் தாம் நெடும் தூரம் நினைந்து துஞ்சுவதே – மனம் புண்ணாகும்படி (அவைகளைத்) தாங்கள் நெடுந்தூரம் நினைந்து மாண்டுபோவதே– மாந்தர் தொழில் – மனிதருடைய தொழிலாகும். எ – று.
இ-ம்: இருவினைகளைச் செய்தவர் அவற்றின் பயன்களாகிய இன்பத்துன்பங்களை அநுபவிப்பது தப்பாததாலின், அவற்றின் பொருட்டுக் கவலையுற்று வாழ்நாளை வீணாட்போக்குதல் அறியாமை. எ-ம்.
பாடல் 6
உள்ளதொழிய வொருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில் – வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழு முயிர்க்கு.
இ – ள் . ஒருவர்க்கு உள்ளது ஒழிய – ஒருவருக்கு (ஊழினால்) உள்ளதல்லாமல், — ஒருவர் சுகம் கொள்ளக் கிடையா – மற்றொருவருடைய சுகங்களை அநுபவிக்க விரும்பினால் அவை கிடையாவாம் : — (ஆதலினால் ) — குவலயத்தில் – இப்பூமியிலே – –உடலோடு வாழும் உயிர்க்கு – உடம்புகளோடு கூடிவாழும் உயிர்களுக்கு , — வெள்ளக்கடல் ஓடி மீண்டு கரை ஏறினால் என – வெள்ள நீரையுடைய சமுத்திரத்திலே (கப்பலின் மேற்) சென்று (சம்பாதித்துக்கொண்டு) திரும்பவந்து கரையேறினாலும் அதனாற் பயன் யாது . எ – று.
இ-ம்: பெருமுயற்சி செய்து பெரும்பொருள் சம்பாதித்தாலும், ஊழினளவன்றி அதிகமாக அநுபவித்தல் கூடாது. எ-ம்.
பாடல் 7
எல்லாப் படியாலு மெண்ணினா லிவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை – நல்லார்
அறிந்திருப்பா ராதலினா லாங்கமல நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.
இ – ள்: எல்லாப் படியாலும் எண்ணினால் – சகலவிதங்களினாலும் ஆராயுமிடத்து, — இவ்வுடம்பு பொல்லாப் புழுமலி நோய்ப் புல் குரம்பை – இந்தச் சரீரம் பொல்லாத புழுக்களுக்கும் நிறைந்த வியாதிகளுக்கும் புல்லிய ஒரு சிறுவீடாக இருக்கின்றது. — நல்லார் அறிந்து இருப்பார் – நல்லறிவினோர்கள் (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள் — ஆதலினால் கமல நீர்போல் பிரிந்து இருப்பார் – ஆகையால் அவர்கள் தாமரை யிலையில் நீர்போல (இவ்வுடம்பிலே கூடியிருந்தும் ) கூடாதிருப்பார்கள், — பிறர்க்குப் பேசார் – (பயன்படாமையால்) பிறருக்கு (அந்த நிலையைச் சொல்லார்கள் . எ – று . ஆம் அசை
இ-ம்: உடம்பு வேறு தாம் வேறு என்று அறிந்த ஞானிகள் உடம்போடு கூடியிருப்பினும் பற்றற்றிருப்பார்கள்; ஆதலால் அவர்களுக்குத் துன்பமே இல்லை. எ-ம்.
பாடல் 8
ஈட்டும் பொருண்முயற்சி யெண்ணிறந்த வாயினுமூழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்ட
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்.
இ – ள் : மகிதலத்தீர் கேண்மின் – பூமியிலுள்ள மனிதர்களே, கேளுங்கள் — ஈட்டும் பொருள் – தேடுதற்குரிய பொருள்களானவை, — முயற்சி எண் இறந்த ஆயினும் – முயற்சிகள் அளவில்லாதன வாயிலும், –ஊழ் கூட்டும் படி அன்றிக் கூடாவாம் – ஊழ் கூட்டுமளவினால்லாமற் சேராவாம். — தனம் தரியாது – (ஊழினாலே சேரினும்) அப்பொருள் நிலைபெறாது. — தேட்டம் மரியாதை – (ஆதலினால்) நீங்கள் தேடத்தகுவது மரியாதையேயாம். எ – று. மரியாதை – நன்னெறியினிற்றல். ஆம் அசை . காணுமிரண்டும் முன்னிலையசை.
இ – ம்: பொருள் ஊழினளவன்றி வாராமையானும், வந்த பொருளும் நிலைபெறாமையானும் , நிலைபெறுவதாகிய நல்லொழுக்கத்தையே தேடல் வேண்டும். எ-ம்.
பாடல் 9
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா
றூற்றுப் பெருகா லுலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தா ரானாலும்
இல்லையென மாட்டா ரிசைந்து.
இ-ள்: ஆற்றுப் பெருக்கு அற்று – ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய் — அடி சுடும் அந்நாளும் – (மணலானது வெய்யிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக் காலத்திலும் , — அவ்வாறு ஊற்று பெருக்கால் உலகு ஊட்டும் – அந்த ஆறானது ஊற்று நீர்ப் பெருக்கினால் உலகத்தாரை உண்பிக்கும் – (அதுபோல) — நல்ல குடிப் பிறந்தார் – நல்ல குடியிலே பிறந்தவர் — நல்கூர்ந்தார் ஆனாலும் – வறுமை அடைந்த காலத்திலும் , — ஏற்றவர்க்கு இசைந்து இல்லையென மாட்டார் – இரந்தவருக்குக் (கருத்து) இசைந்து இல்லையென்று சொல்லமாட்டாது கொடுப்பார் . எ – று.
இ-ம் : உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக்காலத்திலும் இரந்தவருக்குக் கொடாது விடார். எ-ம்.
பாடல் 10
ஆண்டாண்டு தோறு மழுது புரண்டாலு
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்– வேண்டா
நமக்கு மது வழியே நாம் போமளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும் .
இ – ள் : மா நிலத்தீர் – பெரிய பூமியிலுள்ள மனிதர்களே — ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் – (இறந்த) அவ்விடத்தில் வருடந்தோறும் அழுது புரண்டாலும், — மாண்டார் வருவரோ – இறந்தவர் திரும்பி வருவாரோ (வர மாட்டார்:) — வேண்டா – (ஆதலினால் அழ ) வேண்டுவதில்லை –நமக்கும் அது வழியே நாம் போம் அளவும் எமக்கு என் என்று நமக்கும் –அம்மரணமே வழியாகும் நாம் இறந்து போமளவும் எமக்கு யாது சம்பந்தம் என்று , — இட்டு உண்டு இரும் – பிசைஷயிட்டு (நீங்களும்) உண்டு (கவலையற்று) இருங்கள் . எ – று.
இ-ம்: இறந்தவர் பொருட்டு அழுகையினால் உடம்பிற்குத் தளர்ச்சியும் உயிருக்கு வருத்தமும் உண்டாமேயன்றிச் சிறிதும் பயனில்லாமையால், கவலையையொழித்துச் சற்பாத்திரத்துக்குக் கொடுத்து வாழ்க. எ-ம்.
பாடல் 11
ஒருநா ளுணவை யொழி யென்றா லொழியாய்
இருநாளுக் கேலென்றா லேலாய் — ஒருநாளும்
என்னோ வறியா யிடும்பைகூ ரென்வயிறே
உன்னோடு வாழ்த லரிது.
இ – ள்: இடும்பை கூர் என் வயிறே – துன்பம் மிகுகின்ற என்னுடைய வயிறே, — ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் – (கிடையாதபோது) ஒருநாளுக்குப் போசனத்தை விட்டிரு என்றால் விட்டிராய். — இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய் – (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு (உண்ணும் போசனத்தை ஒருங்கு) ஏற்றுக் கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய். — ஒரு நாளும் என் நோ அறியாய் – ஒருநாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய். — உன்னோடு வாழ்தல் அரிது – (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் (எனக்கு) அருமையாக இருக்கின்றது . எ – று.
இ-ம்: வயிற்றுக்குத் திருப்தி செய்தலினும் அரியது பிரிதில்லை . எ-ம்.
பாடல் 12
ஆற்றங் கரையின் மரமு மரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே — ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
இ – ள் : ஆறு அம் கரையில் மரமும் – ஆற்றினது கரையில் இருக்கின்ற மரமும் — அரசு அறிய வீற்று இருந்த வாழ்வும் விழும் அன்றே – அரசன் அறிய (அதிகாரஞ்செய்து சம்பாதித்துப்) பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும் அழிந்து போமன்றோ — உழுது உண்டு வாழ்வு ஏற்றம் – (ஆதலினால்) உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும்; — அதற்கு ஒப்பு இல்லை – அதற்குச் சமானம் இல்லை, — வேறு ஓர் பணிக்குப் பழுது உண்டு – மற்றைத் தொழில் வாழ்க்கைகளுக் கெல்லாம் அழிவு உண்டு. எ – று. அம் காரியை. கண்டீர் முன்னிலையசை.
இ-ம்: பிறர்வயத்தினராகாது தம்வயத்தினராய் நின்று செய்யும் வேளாண்மையாலாகிய வாழ்க்கைக்கு அழிவு இல்லா மையால், அதுவே சிறந்தது. எ-ம்.
பாடல் 13
ஆவாரை யாரே யழிப்பா ரதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் – ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்
இ – ள் : அம் புவியதன் மேல் – அழகிய பூமியின் மேலே — ஆவாரை அழிப்பார் யார் – (நல்வினையினால் நெடுங் காலம் உயிர் வாழ்தற்கு உரியவரை (இடையிலே ) அழிக்கவல்லவர் யாவர்? — அது அன்றிச் சாவாரைத் தவிர்ப்பவர் யார் – அது வல்லாமலும் (தீவினையினால்) இறப்பதற்கு உரியவரை நிறுத்தவல்லவர் யாவர்? — ஓவாமல் ஐயம் புகுவாரை விலக்குவார் யார் – (செல்வம் இழந்து) ஒழியாமல் பிசைஷக்குச் செல்வோரைத் தடுக்கவல்லவர் யாவர்? – மெய் – (இது) சத்தியமேயாம் . எ – று. ஏ மூன்றும் அசை.
இ-ம்: ஊழினால் அடைதற்பாலனவாகிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை. எ-ம்.
பாடல் 14
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி யிடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மான மழியா
துயிர்விடுகை சால வுறும்.
இ –ள்: பேசுங்கால் – (ஆராய்ந்து) சொல்லுமிட த்து ; — பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை – பிசைஷ எடுத்து உண்டலினும் (இழிவிற் ) பெரிய குடிவாழ்க்கையாவது – பல இச்சை சொல்லி இடித்து உண்கை – பலவாகிய இச்சைகளைப் பேசி (ஒருவரை) நெருக்கி வாங்கி உண்ணுதலாம் — சிச்சீ – சீசி (இது என்ன செய்கை.) — வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது – வயிற்றை வளர்த்தற்பொருட்டு மானங்கெடாமல், –உயிர் விடு கை சால உறும் – உயிரை விடுதலே மிக (உயர்ச்சியைப்) பொருந்தும். எ – று.
இ-ம் பிறரிடத்தே இச்சை பேசி வாங்கி உண்டு மானம் இழந்து உயிர்வாழ்தலினும் உயிரை விட்டு மானத்தை நிறுத்துதலே உயர்வுடைத்து. எ-ம்.
பாடல் 15
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்
கபாய மொருநாளுமில்லை– உபாயம்
இதுவே மதியாகு மல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்.
இ – ள். சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு- சிவாயநமவென்று தியானித்துக்கொண்டிருப்பவருக்கு– ஒருநாளும் அபாயம் இல்லை – ஒருநாளாயினும் இடுக்கண் உண்டாகாது — இதுவே உபாயம் – (விதியை வெல்லுதற்கு) இதுவே உபாயமாகும்:– (இதுவே) மதி ஆகும் – (ஆதலின்) இதுவே (உண்மையாகிய) அறிவாகும். — அல்லாத எல்லாம் மதி விதியே ஆய்விடும் – (இச்சிவத்தியானம்) அல்லாத மற்றையிடங்கனி னெல்லாம் புத்தியானது விதியின் வசத்ததேயாகிவிடும். எ – று. இதுவே என்பது பின்னுங் கூட்டப்பட்டது.
இ-ம் . சிவத்தியான முடையவருக்கு விதி இல்லை; சிவத் தியானமில்லாதவருக்கு விதி உண்டு. எ-ம். இடையறாத சிவத்தியான முடையவர் அச்சிவத்தையேயன்றிப் பிறிதொன்றையும் அறியாரதலின், அவர் சரீரம் முகந்தது கொண்ட சுகதுக்கமென்னும் பிராரத்தகருமம் அவருக்குப் புசிப்பாகாமல், அவருடன் புசிப்பாய் ஒழியும் என்பதே அவருக்கு விதியில்லை யென்பதற்குக் கருத்து. அது திருநாவுக்கரசு நாயனார் முதலிய மெய்ஞ்ஞானிகள் சரித்திரங்களாலும் அறிக.
பாடல் 16
தண்ணீர் நிலநலத்தாற் றக்கோர் குணங்கொடையாற்
கண்ணீர்மை மாராக் கருணையாற் — பெண்ணீர்மை
கற்பழியா வாற்றாற் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமா மென்றே அறி.
இ – ள். தண்ணீர் நில நலத்தால் – தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும் , — தக்கோர் குணம் கொடையால் – நல்லோருடைய குணமானது கொடையினாலும் , — கண் நீர்மை மாராக் கருணையால் – கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், — பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் – பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், — கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதம் ஆம் என்றே அறி – சமுத்திரஞ் சூழ்ந்த பூமியினிடத்து (எல்லாரும் ) ஆச்சரியப்பபடத்தக்கவைகளாகும் என்று நீ அறிவாயாக. எ – று.
இ-ம்: நிலநன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும். எ-ம்.
பாடல் 17
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ விருநிதியம் –வையத்
தறும்பாவ மென்னவறிந் தன்றிடார்க் கின்று
வெறும் பானை பொங்குமோ மேல்.
இ-ள் . வையத்துப் பாவம் அறும் என்ன அறிந்து – பூமியிலே (சற்பாத்திரத்திற் செய்யப்படும் தானத்தினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து — அன்று இடார்க்கு – அக்காலத் திலே (சற்பாத்திரத்திலே) தானஞ்செய்யாதவருக்கு — செய் தீவினை இருக்க – செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்க, — (இன்று) தெய்வத்தை நொந்தக்கால் – இப்பொழுது கடவுளை வெறுத்தால், –இரு நிதியம் எய்த வருமோ – பெரிய திரவியம் பொருந்த வருமோ, (வாராது.) — வெறும் பானை மேல் பொங்குமோ – வெறும் பானை (அடுப்பிலே வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ – (பொங்காது.) எ – று.
இ-ம்: வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை . எ-ம்.
பாடல் 18
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேரலகில்
உற்றா ருகந்தா றெனவேண்டார் – மற்றோர்
இரணங் கொடுத்தா விடுவ ரிடாரே
சாணங் கொடுத்தாலுந் தாம்.
இ-ள் . பேர் உலகில் – பெரிய பூமியிலே –பெற்றார் (என) – (இவர் எம்மைப்) பெற்றவர் என்றும் , — பிறந்தார் (என )- (இவர் எமக்குப் ) பிறந்தவர் என்றும் , — பெருநாட்டார் (என) (இவர் எம்முடைய பெரிய தேசத்தார் என்றும், — உற்றார் (என)- (இவர் எம்முடைய) சுற்றத்தார் என்றும் , — உகந்தார் என – (இவர் எம்மைச் சிநேகித்தவர் என்றும் — வேண்டார் – விரும்பாதவராகிய உலோபிகள், — மற்றோர் இரணம் கொடுத்தால் இடுவர் – அன்னியரேயாயினும் (தம்முடம்பிலே) காயத்தைச் செய் தாராயின், (அவருக்கு எல்லாங்) கொடுப்பர் — சரணம் கொடுத்தாலும் இடார் — (முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகு ந்தாராயினும், அவருக்கு ஒன்றுங் கொடார் . எ – று. தாம் ஏ இரண்டும் அசை.
இ-ம்: உலோபிகள் தமக்கு அகிதத்தைச் செய்யும் கள்வர் முதலாயினோருக்கன்றி இதத்தைச் செய்யும் தாய் தந்தை முதலாயினோருக்குக் கொடார். எ-ம்.
பாடல் 19
சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழி னுடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி யரிசிக்கே நாம்.
இ – ள் வயிற்றின் கொடுமையால் – வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே, — சேவித்தும் – (பிறரைச்) சேவித்தும் , — சென்று இரந்தும் – (பலரிடத்தே) போய் யாசித்தும் , –தெள் நீர்க் கடல் கடந்தும் – தெளிவாகிய நீரையுடைய சமுத்திரத்தைக் (கப்பலேறிக்) கடந்தும், — பாவித்தும் — (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், — பார் ஆண்டும் – பூமியை ஆண்டும், –பாட்டு இசைத்தும் – (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப்பாடியும், — நாம் உடம்பை நாழி அரிசிக்கே பாழின் போலிப்பம் – நாம் இந்தச்சரீரத்தை நாழியரிசிக்காகவே பாழிலே செலுத்துகின்றேம். எ – று.
இ-ம்: முத்திக்குரிய சாதனத்தைத் தேடும் பொருட்டு அரிதாகக் கிடைத்த சரீரத்தை, அதற்குக் கொடுக்கப்படும் கூலியாகிய போசனத்தைத் தேடும் பொருட்டே முழுமையும் செலுத்துதலின் மிக்க பேதைமை பிறிதில்லை . எ-ம்.
பாடல் 20
அம்மி துணையாக வாறிழிந்த வாறோக்குங்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம் – இம்மை
மறுமைக்கு நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.
இ – ள் . கொம்மை முலை பகர்வார்க் கொண்டாட் டம் – குவிவாகிய தனங்களை விற்கின்ற பரத்தையரைக் கொண் டாடுதல் — அம்மி துணை ஆக ஆறு இழிந்த ஆறு ஒக்கும் – அம்மிக் கல்லே துணையாக ஆற்று வெள்ளத்தில் இறங்கிய தன்மையைப் போலும்; — (அன்றியும்) மா நிதியம் போக்கி வெறுமைக்கு வித்து ஆய்விடும் – (அது) பெரிய செல்வத்தை அழித்து வறுமைக்குக் காரணமாய்விடும் : — இம்மை மறுமைக்கு நன்று அன்று – (ஆதலினால்) அது இப்பிறப்பிற்கும் வருபிறப்பிற்கும் நல்லதாகாது . எ – று. பகர்தல் – விற்றல். ஓடத்தினாலே கடக்கத்தக்க ஆற்றை அம்மியினாலே கடக்கப் புகுந்தவன் அமிழ்ந்து உயிரை இழத்தல்போல, மனைவியினாலே அநுபவிக்கத்தக்க காமவின்பத்தை வேசையினாலே அநுபவிக்கப் புகுந்தவன் மேகநோயால் வருந்தி உயிரை இழப்பன் ஆதலின், அம்மி துணையாக வாறிழிந்தவாறொக்கு மென்றார்.
இ-ம்: வேசையைப் புணர்ந்தவன் கைப்பொருளை இழந்து மேகநோயால் வருத்தமுற்றுப் பழிபாவங்களை அடைவன். எ-ம்.
பாடல் 21
நீரு நிழலு நிலம்பொதியு நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க் கென்றுந்
தருஞ்சிவந்த தாமரையா டான்
இ-ள்: சிவந்த தாமரையாள் – செந்தாமரை மலரில் இருக்கின்ற சீதேவியானவள், — வஞ்சம் இலார்க்கு – வஞ்சனை இல்லாதவருக்கு — நீரும் – நீர்வளத்தையும் , — நிழலும் – நிழல் வளத்தையும் , — நிலம் பொதியும் நெற்கட்டும் – நிலத்திலே நிறையும் நெற்போரையும், — பேரும் – பேராயும் , — புகழும் – கீர்த்தியையும் , — பெருவாழ்வும் – பெரிய வாழ்வையும் , –ஊரும் – கிராமத்தையும் , — வரும் திருவும் – வளர்கின்ற செல்வத்தையும் , — வாழ்நாளும் – நிறைந்த ஆயுளையும் ; — என்றும் தரும் – எந்நாளும் கொடுத்தருளுவள் . எ – று. தான் அசை.
இ-ம் . வஞ்சனை செய்யாதவருக்குச் சீதேவியினது திருவருளினாலே எல்லா நலமும் உண்டாகும். எ-ம்.
பாடல் 22
பாடுபட்டுத் தேடிப் பணத்தை புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானுடரே கேளுங்கள் –கூடுவிட்டிங்
காவிதான் போயினபின் யாரே யநுபவிப்பார்
பாவிகா எந்தப் பணம்.
இ – ள். பணத்தைப் பாடு பட்டுத் தேடிப் புதைத்து வைத்து – பணத்தைப் பிரயாசப்பட்டுச் சம்பாதித்து (நீங்களும் உண்ணாமல் பிறருக்குக் கொடாமற் பூமியிலே) புதைத்துவை த்து –கேடு கெட்ட மானுடரே கேளுங்கள் – அப்பொருட்கேட்டினால் (சரீரசுகத்தையும் ஆன்மசுகத்தையும் ஒருங்கு) இழந்த மனிதர்களே (நான் சொல்வதைக்) கேளுங்கள் . — ஆவி கூடு விட்டுப் போயின பின்பு – ஆன்மாச் சரீரத்தைவிட்டு நீங்கிய பின்பு, — பாவிகாள் அந்தப் பணம் இங்கு ஆர் அநுபவிப்பார்- பாவிகளே, அந்தப் பணத்தை இவ்விடத்து யாவர் அநுபவிப்பார். எ – று . தான் ஏ – இரண்டும் அசை.
இ-ம், பூமியிலே புதைத்து வைக்கப்பட்ட பணம் வைத்தவர் இறந்தபின் அவருக்கு உதவாமற் போவதுமன்றிப் புதைத்தவிடந் தெரிந்து எடுக்கக் கூடாமையினாலே பிறருக்கும் உதவாமற்போம். எ-ம்.
பாடல் 23
வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே -மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.
இ – ள். மன்று ஓரம் சொன்னார் மனை – தருமசபையிலே பகஷபாதஞ் சொன்னவருடைய வீட்டிலே , — வேதாளம் சேரும் – பேய்கள் (வந்து) சேரும்; – வெள்ளெருக்குப் பூக்கும் – வெள்ளெருக்கு (முளைத்து) மலரும், – பாதாள மூலி பட ரும் – பாதாள மூலியென்னுங்கொடி படரும் — மூதேவி சென்று இருந்து வாழ்வள் – மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள் , — சேடன் குடிபுகும் – பாம்புகள் குடியிருக்கும் . எ – று, ஏ ஐந்தும் அசை.
இ-ம்: வழக்கோரஞ் சொன்னவர் குடும்பத்தோடு அழிவது மன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம். எ-ம்.
பாடல் 24
நீரில்லா நெற்றிபாழ் நெய்யில்லா வுண்டிபாழ்
ஆரில்லா வூருக் கழகுபாழ் – மாறில்
உடற்பிறப் பில்லா வுடம்புபாழ் பாழே
மடக்கொடி யில்லா மனை.
இ-ள்: நீறு இல்லா நெற்றி பாழ் – விபூதியில்லாத நெற்றி பாழாகும்; — நெய் இல்லா உண்டி பாழ் – நெய்யில்லாத போசனம் பாழாகும். — ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் – நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும் ;– மாறு இல் உடற்பி றப்பு இல்லாத உடம்பு பாழ் – மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும் — மடக்கொடி இல்லாத மனை பாழே – (இல்லறத்திற்குத் தக்க மனைவியில்லாத வீடு பாழேயாகும். எ-று.
இ-ம் . விபூதியினாலே நெற்றியும், நெய்யினாலே போசன ம், நதியினாலே ஊரும், சகோதரராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும். எ-ம்.
பாடல் 25
ஆன முதலி லதிகஞ் செலவானான்
மான மழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்குங் கள்ளனா யேழ்பிறப்புந் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனா நாடு,
இ – ள். ஆன முதலில் செலவு அதிகம் ஆனான் (தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு அதிகமானவன், — மானம் அழிந்து – மானங்கெட்டு , — மதி கெட்டு – அறிவு இழந்து , — போன திசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் – (தான் ஓடிப்) போன திசையிலும் எல்லாருக்கும் கள்ளனாகி , — ஏழ் பிறப்பும் தீயனாய் – எழுவகைப் பிறப்புக்களினும் பாவம் உடையவனாகி , — நல்லார்க்கும் பொல்லன் ஆம் – (தன்னிடத்து அன்பு வைத்த) பெண்டிர்களுக்கும் பொல்லாதவனவான். — நாடு (இதனை) ஆராய்ந்து அறிவாயாக. எ – று.
இ-ம்: வரவுக்கு அதிகமாகச் செலவு செய்பவன் பழிபாவங்களை அடைவன் ஆகலின், வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும். எ-ம்.
பாடல் 26
மானங் குலங்கல்வி வண்மை யறிவுடைமை
தானந் தவமுயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
இ – ள். பசி வந்திட – பசிநோய் ஒன்று மாத்திரம் வந்தால், — மானம் – மானமும் , –குலம் – குலமும், –கல்வி – கல்வியும் , — வண்மை – வாய்மையும், — அறிவுடைமை – அறிவு டைமையும் , –தானம் – கொடையும் , , — தவம் – தவமும், — உயர்ச்சி – உயர்வும் , — தாளாண்மை – தொழின் முயற்சியும், — தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் – தேன்பெருக்குப்போலத் தோன்றுகின்ற சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசைசைவைத்தலும் ஆகிய –பத்தும் பறந்து போம் -இப்பத்தும் விட்டோடிப்போம்.எ – று.
இ-ம்: மான முதலிய எல்லா நலங்களையும் கெடுத்தலினாலே பசிநோயினுங் கொடியது பிறிதில்லை. எ-ம்.
பாடல் 27
ஒன்றை நினைக்கி னதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி யதுவரினும் வந்தெய்தும்– ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினு நிற்கும்
எனையாளு மீசன் செயல்.
இ – ள். ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும் — ஒரு பொருளைப் பெற நினைதால், அப்பொருள் கிடை யாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும் — அன்றி அதுவரினும் வந்து எய்தும் — அப்படியல்லாமல் அப்பொருளே வந்து கிடைத்தாலும் கிடைக்கும்; — ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும் – (இன்னும்) ஒருபொருளை நினையாதிருக்கு முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும். — எனை ஆளும் ஈசன் செயல் – (இவைகளெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும். எ – று.
இ-ம் . இருவினைகளுக்கீடாக இன்பத்துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின் படியேயன்றி ஆன்மாக்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது. எ-ம்.
பாடல் 28
உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்தெண்ணுவன – கண்புதைத்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சரத்துணையுஞ் சஞ்சலமே தான்.
இ – ள் . கண்புதைத்த மாந்தர் – அகக்கண் குருடாக இருக்கின்ற மனிதர் — உண்பது நாழி – உண்பது ஒரு நாழியரிசி யன்னமேயாகும்;–உடுப்பது நான்குமுழம் – (அவர்) உடுப்பது நான்குமுழ வஸ்திரமேயாகும்; –(இப்படியாகவும்) –நினைந்து எண்ணுவன எண்பது கோடி – (அவர்) நினைந்து எண்ணுங்காரியங்களோ எண்பது கோடியாகும்: – (ஆதலினால்) — மண்ணின் கலம் போலச் சரம் துணையும் குடிவாழ்க்கை சஞ்சலமே – மட் பாத்திரம் அழிந்தாற்போல் (அவர் சரீரம்) அழியும் வரையும் (அவருடைய) குடிவாழ்க்கையினாலே துன்பமே விளையும். எ அ . தான் அசை
இ-ம்: உள்ளதே போதும் என்று திருப்தி அடையாதவர் சரங்காறும் அடைவது துன்பமேயன்றிப் பிறிதில்லை. எ-ம்.
பாடல் 29
மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை – சுரந்தமுதங்
செற்றா தரல்போற் கரவா தளிப்பரேல்
உற்றா ருலகத் தவர்.
இ – ள் . மரம் பழுத்தால் – மரம் பழுத்திருந்தால், –வா என்று வெளவாலைக் கூவி இரந்து அழைப்பார் அங்கு யாவரும் இல்லை — (இப்பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வெளவாலைக் கூவி வேண்டி அழைப்பவர் அம்மரத்தருகில் ஒருவரும் இல்லை , — கன்று ஆ அழுதும் சுரந்து தரல்போல் கரவாது அளிப்பரேல் — கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல ஒளிக்காமற் கொடிப்பாராயின், — உலகத்தவர் உற்றார் — உலகத்தார் (அவ்வெளவால்போலத் தாமேவந்து) உறவி னராவார். எ-று.
இ-ம், கொடையாளருக்கு எல்லாரும் தாமே உறவினராவார். எ-ம்.
பாடல் 30
தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை யென் செயலா மூரெல்லா மொன்றா
வெறுத்தாலும் போமோ விதி
இ – ள், வேந்தே – அரசனே, — முன் தாம் தாம் செய்தவினை – முற்பிறப்பிலே தாம் தாம் செய்த நல்வினை தீவினைகளை — பூந்தாமரையோன் பொறி வழியே தாமே அநுபவிப்பார் – தாமரைமலரில் இருக்கின்ற பிரமா விதித்தபடியே தாமே அநுபவிப்பார்கள் , — ஒறுத்தாரை என் செயலாம் – (தீவினையினாலே தூண்டப்பட்டுத் தீங்கு செய்தவரை நாம் யாது செய்யலாம். — ஊர் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதிபோமோ – ஊரிலுள்ளார் எல்லாருஞ் (துணையாகத்) திரண்டு வெறுத்தாலும் விதி போகுமோ (போகாது.) எ – று.
இ-ம்: தமக்கு ஒருவன் துன்பஞ்செய்யின், அது தாம் முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக்கிடைத்த தென்று அமைவதே அறிவு. எ-ம்.
பாடல் 31
இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று சாலும்
ஒழுக்க முயர்குலத்தி னன்று வழுக்குடைய
வீரத்தினன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தி னன்று தனி.
இ – ள். இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று – இலக்கணவழுக்களையுடைய செய்யுளினும் இசை நல்லது, — உயர் குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று – உயர்வாகிய குலத்தினும் மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது. — வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று — தவறுதலையுடைய வீரத்தினும் தீரா வியாதி நல்லது , — பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று – பழிச்சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது . எ – று.
இ-ம்: இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொலொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையுஞ் தீரா வசையை விளைவிக்கும். எ-ம்.
பாடல் 32
ஆறிடு மேடு மடுவும்போ லாஞ்செல்வ
மாறிடு மேறிடு மாநிலத்தீர் சோறிடுந்
தண்ணீரும் தாருந் தருமமே சார்பாக
உண்ணீர்மை விறு முயர்ந்து.
இ – ள் . மா நிலத்தீர் – பெரிய பூமியிலுள்ளவர்களே , — ஆறு இடும் மேடும் மடுவும் போல் – ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மேடும் பள்ளமும் போல, — செல்வம் ஏறிடும் மாறிடும் – செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும்: — (ஆதலினால்) சோறு இடும் – (இரப்பவருக்கு உண்ண) அன்னத்தை இடுங்கள் – தண்ணீரும் வாரும் – (குடிக்கச்) சலத்தையும் தாருங்கள் — தருமமே சார்பு ஆக உள் நீர்மை உயர்ந்து வீறும் – (இப்படிச் செய்ய வருவீர்களானால்,) இந்தத்தருமமே துணையாக உள்ளத்திலே (சுத்தியாகிய) தன்மை ஓங்கி விளங்கும். எ – று . ஆம் அசை.
இ-ம் . நிலையில்லாத செல்வம் உள்ள பொழுதே இரப்பவர்களுக்கு அன்னபானியங்களைக் கொடுக்கிற சித்த சுத்தி உண்டாகும். எ-ம்.
பாடல் 33
வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்திற்
பட்டிருவுங் கோல்பஞ்சிற் பாயாது – நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குடைப் பாறை பசுமாத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
இ-ள்: வேழத்தில் பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது – (வலிய) யானையின் மேலே பட்டுருவும் அம்பானது (மெல்லிய) பஞ்சின் மேலே பாயாது — (அதுபோல) – வெட் டெனவை மெத்தெனவை வெல்லா – வலிய சொற்கள் மெல்லிய சொற்களை வெல்லமாட்டா — நெடு இருப்புப் பாரைக்கு நெக்கு விடாப் பாறை – நெடுமையாகிய இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற்பாறையானது — பசு மரத்தின் வேருக்கு நெக்கு விடும் – பச்சமரத்தின் வேருக்குப் பிளந்துபோம். எ – று. ஆம் அசை.
இ-ம்: வலிய சொல்லே மெல்லிய சொல்லுக்குத் தோற்றுப்போம். எ-ம்.
பாடல் 34
கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை
இல்லாளும் வேண்டாண்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்.
இ – ள். கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் – (ஒருவன்) படியாதவனே யாயினும் (அவன்) கையிலே பொருண்மாத்திரம் இருந்தால், — எல்லாரும் சென்று எதிர்கொள்வர் – (அவனை) யாவரும் போய் எதிர்கொண்டு உபசரிப்பர் — இல்லானை இல்லாளும் வேண்டாள் – (படித்தவனே யாயினும் பொருள்) இல்லாதவனை (அவன்) மனைவியும் விரும்பாள் , — ஈன்று எடுத்த தாய் வேண்டாள் – (அவனைப்) பெற்று வளர்த்த மாதாவும் விரும்பாள் ; — அவன் வாயில் சொல் செல் லாது – அவன் வாயிற் பிறக்குஞ் சொல்லானது பயன் படாது. எ – று. அங்கு, மற்று அசை.
இ-ம்: கல்லாதவனேயாயினும் பொருளுடையவனை எல்லாரும் மதிப்பர்; கற்றவனேயாயினும் பொருளில்லாதவனை ஒருவரும் மதியார். எ-ம்.
பாடல் 35
பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்-
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே — தூவா
விரைத்தாலு நன்றாகா வித்தெனவே பேதைக்
குரைத்தாலுந் தோன்றா துணர்வு.
இ – ள். பூவாதே காய்க்கும் மரமும் உள – பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு — (அதுபோல) – மக்களுளும் ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் — மனிதர்களுள்ளும் ஏவாமலே இருந்து தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு — தூவா விரைத்தாலும் நன்று ஆகா வித்து என – தூவி விரைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல், — பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது – மூடனுக்கு (எடுத்து விளங்கச்) சொன்னாலும் (அதனை அறியும் ) அறிவு (அவனிடத்து) உண்டாகாது. எ – று.
இ-ம்: குறிப்பறிந்து செய்வோரே அறிவுடையோர்; அறிவிக்கவும் அறிந்து செய்யாதவர் மூடர். எ-ம்.
பாடல் 36
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்திற்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோ–லொண்டொடி
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலமயன்
மாதர்மேல் வைப்பார் மனம்.
இ-ள்: ஒள் தொடி – ஒள்ளிய வளையலை அணிந்தவளே , — நண்டு சிப்பி வேய் கதலி – நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் , –நாசம் உறும் காலத்தில் – தாம் அழிவை அடையுங்காலத்திலே, — கொண்ட கரு அளிக்கும் கொள்கை போல் – (முறையே தாம்) கொண்ட (குஞ்சும் முத்தும் அரிசியும் காய்க்குலையும் ஆகிய) கருக்களை ஈனுந்தன்மை போல , — (மனிதர்கள்) – போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம் – ஞானமும் செல்வமும் வித்தையும் அழிய வருங்காலத்திலே — அயல்மாதர்மேல் மனம் வைப்பார் – பிறர்மனைவியர்மேல் மனம் வைப்பார்கள் . எ – று.
இ-ம்: ஒருவன் பிறன் மனையாளை இச்சிக்கின், அது அவனிடத்துள்ள ஞானம் செல்வம் கல்வி என்னும் மூன்றுங் கெடுத ற்கு அறிகுறியாகும். எ-ம்.
பாடல் 37
வினைப்பயனை வெல்வதற்கு வேத முதலாம்
அனைத்தாய நூலகத்துமில்லை — நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப்படே னெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.
இ – ள். வேதம் முதலாம் அனைத்து ஆய நூலகத்தும் – வேத முதலாகிய எல்லா நூல்களினுள்ளும் (ஆராய்ந்தால்) — வினைப்பயனை வெல்வதற்கு – இருவினைப்பயனை வெல்வதற்கு (உபாயம் ) – அது நினைப்பு எனக் கண்ணுறுவது அல்லால் இல்லை – அவ்வினைப்பயன் (நம்முடைய) நினைவாலாவது என்று அறிவதல்லாமல் வேறு இல்லை. — நெஞ்சே கவலைப்படேல்- மனமே கவலையை அடையாதே — மெய் விண் உறுவார்க்கு விதி இல்லை – நித்தியமாயுள்ள ஞானாகாசமாகிய பதியோடு கலந்து நிற்பவருக்கு ஊழ் இல்லை . எ – று.
இ-ம்: பரஞானத்தினாலே பதியைத் தெளிந்து நோக்கி அன்பு செய்யப்பெற்றவர் அப்பதியையேயன்றிப் பிராரத்வாக்களை தாக்குதற்குரிய மற்றைப் பதார்த்தங்களைச் சிறிதும் காணாராகலின், அவருக்கு விதி இல்லை. எ-ம்.
பாடல் 38
நன்றென்றுந் தீதென்று நானென்றுந் தானென்றும்
அன்றென்று மாமென்று மாகாதே – நின்றநிலை
தானதாந் தத்துவமாமஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவர் தேடும் பொருள்.
இ – ள். நன்று என்றும் – (இது) நல்லது என் றும், — தீது என்றும் – (இது) தீயது என்றும் , — நான் என்றும் (இது செய்தவன்) நான் என்றும், — தான் என்றும் – (இது செய்தவன்) அவன் என்றும், — அன்று என்றும் – (இது) அன்று என்றும், – ஆம் என்றும் – (இது) ஆகும் என்றும் , — ஆகாதே நின்ற நிலை – பேதஞ்செய்யாமலே (பதியினுள் அடங்கி இரண்டறக் கலந்து) நின்ற நிலையே, — தான் அது ஆம் தத்துவம் ஆம் – (ஆன்மா வாகிய) தான் (பதியாகிய) அதுவாகுகின்ற உண்மை நிலையாகும் — சம்பு அறுத்தார் யாக்கைக்குத் தேடும் பொருள் போனவர் – சம்பை அறுத்தவர் அதனைக் கட்டுதற்குத் தேடும் பொருள் அதுவன்றி வேறில்லாமற் போனவாறுபோலப் பாசத்தின் வேறாகக் காணப்பட்ட தன்னைப் பதியினுள்ளே அடக்குதற்குத் தேடும் பொருள் தானன்றி வேறில்லை. எ – று.
இ-ம் ஆன்மாப் பதியின் வேறாயினும் கண்ணொளியும் சூரியனொளியும் போல வேற்றுமை சிறிதுந் தோன்றாவண்ணம் ஒற்றித்து நிற்கும் நிலையே தான் அதுவாதலாகிய உண்மை நிலை. எ-ம்.
பாடல் 39
முப்பதா மாண்டளவின் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமற் றன்னுட் பெறானாயிற் – செப்புங்
கலையளவே ஆகுமாங் காரிகையார் தங்கண்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
இ – ள். முப்பது ஆம் ஆண்டு அளவில் – முப்பது வயதினளவிலே — மூன்று அற்று – (மலம் மாயை கரும்ம் என்னும் பந்தம் மூன்றும் நீங்கி — ஒருபொருளைத் தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் – ஒப்பில்லாத முதற்பொருளாகிய பதியைய தவறாமல் தன்னுள்ளே (அநுபூதிஞானத்தினால் ஒருவன்) அடையானானயின், — செப்பும் கலை அளவே ஆகும் – (அம்முதற் பொருள் அவனுக்கு அவன்) கற்ற சாத்திர ஞானத்திளைவேயாகும் — முப்புக் காரிகையார் தங்கள் முலை அளவே ஆகும் – (அவன் பின் வரும்) முதுமைப் பருவத்திலே (தான் கண்ட) பெண்களுடைய தனத்தினளவாகவே (தளார்ச்சியுடையவன்) ஆவன் (ஆதலால ) எ – று. ஆம் இரண்டும் அசை.
இ-ம்: அநுபூதிஞானம் நிட்டையினாலல்லாது பெறப்படாமையாலும், நிட்டை உடம்பும் அறிவும் தளர்ச்சியடையும் முதுமைப்பருவத்திற் சித்சிக்க மாட்டாமையாலும், ஞானாசாரியரை அடைந்து ஞானசாத்திரங்களைக் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை கூடல் என்னும் நான்கையும் இளமைப் பருவத்திற்றானே செய்தல் வேண்டும். எ-ம்.
பாடல் 40
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும
மூவர் தமிழு முனிமொழியுங் — கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.
இ-ள்: தேவர் குறளும் – திருவள்ளுவநாயனாருடைய திருக்குறளும் , — திரு நான்மறை முடிவும் – சிறப்புப் பொருந்திய நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், — மூவர் தமிழும் – திருஞான சம்பந்தமூர்த்திநாயனார் திரு நாவுக்கரசு நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர் ) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், — முனி மொழியும் – வியாச முனிவருடைய வேதாந்த சூத்திரமும் , — கோவை திருவாசகமும் – (திருவாதவூரடிகளுடைய) திருக்கோவையார் திருவாசகங்களும் , — திருமூலர் சொல்லும் – திருமூல நாயனாருடைய திருமந்திரமும் , — ஒரு வாசகம் என்று உணர் – ஒருபொருளையே குறித்த வாக்கியங்களென்று அறிவாயாக, எ – று.
இ-ம்: திருக்குறண் முதலிய நூல்களெல்லாம் வேறு வேறு வாக்கியங்களாகத் தோன்றினும், பதிலக்கணமும் பசுலக்கணமும் பந்தலக்கணமும் முத்திலக்கணமும் ஆகிய இவைகளை ஒரு தன்மையாகவே அறிவிக்கும் நூல்களாம். எ-ம்.
error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop