காவலர் தேர்வை இனி ஆன்லைனில் நடத்துவதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் திட்டமிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் ஏற்படும் காவலர் பணியிடங்களுக்கு 1991ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காவல்துறையே நேரிடையாக இளைஞர்களைத் தேர்வு செய்து வந்தது. இதேபோல தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றுக்கும் நேரிடையாக காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நவீன காலத்துக்கு ஏற்றாற்போல இந்தக் குழுமம், தன்னை புதுப்பித்து வருகிறது. தொடக்ககாலத்தில் விண்ணப்பிப்பது, தேர்வு நடத்துவது, தேர்வு முடிவுகளை அறிவிப்பது என அனைத்துப் பணிகளும் காகித வடிவில் இருந்தன. இப்போது அதை படிப்படியாக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கணினிமயமாக்கி வருகிறது.
இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்தக் கட்டத்துக்கு சென்றுள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், அடுத்ததாக தேர்வை ஆன்லைனில் நடத்துவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை, ரயில்வே தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட மத்திய தேர்வு வாரியங்களிடமிருந்து பணியாளர் தேர்வு குழுமம் பெற்று வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் உயர் அதிகாரி கூறியது: இளைஞர்கள் தேர்வு அறையில் இருந்து தேர்வு எழுதுவதை விட, ஆன்லைனில் தேர்வு எழுதுவது மிகவும் பாதுகாப்பானது, எளிதானது. காவலர் தேர்வில் எள்ளளவும் முறைகேடு நடந்து விடக்கூடாது என்பதற்காக ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கான திட்ட வரைவை தயாரித்து வருகிறோம்.
தேர்வுகளை பல கட்டங்களாக நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்கான கேள்விகள் ஒரே தரத்தில் அமைப்பது தொடர்பாகவும் கல்வியாளர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம்.