குரூப் 4 முறைகேடு TNPSC விளக்கம்

குரூப் 4 முறைகேடு TNPSC விளக்கம்

குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரத்தில் 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரு வட்டாட்சியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு 01.09.2019 அன்று தொகுதி IV தேர்வு பல்துறைகளைச் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. 16,29,865 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் 12.11.2019 அன்று வெளியிடப்பட்டு 24,260 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 05.01.2020 அன்று சமூக வலைதளங்களிலும் பிறகு ஊடகங்களிலும் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிகப்படியாக தெரிவாகியுள்ளதாக செய்தி வெளிவந்தது.


இதையடுத்து தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்ததாகவும் தேர்வுக்காக மேற்படி தேர்வர்கள் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் (எழுதியவுடன் மாயமாகும் மை) விடைகளைக் குறித்துவிட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.

மேலும் சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.

இத்தேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களைத் தலஆய்வு செய்தும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் மேற்கண்ட தவறுகள், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் மையங்களில் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேற்கூறிய மையங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் வேறு எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கைகளிலும் தேர்வாணைய இணையதளம், தேர்வர்களுக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் போன்ற அனைத்து தளங்களிலும்

1. தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.

2. பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

என்பன போன்று பல வழிகளில் அறிவுறுத்தியும் இதுபோன்ற தவறுகளில் ஒரு சில தேர்வர்களே ஈடுபட்டிருப்பது தேர்வாணையத்திற்கு வருத்தமளிப்பதாகவும் தேர்வாணையத்தின் மாண்பைக் குலைப்பதாகவும் உள்ளது.

எனவே மேற்படி காரணங்களின் அடிப்படையில் தேர்வாணையம் கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.

1. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. .

2. தரவரிசைப்பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 நபர்களைத் தெரிவு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

3. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

4. சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும்.

5. இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நடைபெறுகிறது. எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கைவைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: