“எண்ணும் எழுத்தும்” திட்டம்

 
“எண்ணும் எழுத்தும்” திட்டம்

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.6.2022) திருவள்ளுர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில்,

பள்ளிக் கல்வித் துறை சார்பில், 2022-23ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட இருக்கும் “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில்  எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான காணொலி, கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆசிரியர் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

JOIN GROUP 4 TEST BATCH- ONLINE TEST SERIES  WHATSAPP 8681859181

கொரோனா பெருந்தொற்றினால் தமிழகப் பள்ளிகள், 19 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு,  வகுப்புகள் இல்லாத நிலையில் மாணவர்களின் கற்றலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது.

இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக, தமிழ்நாடு அரசு, 2022-23ஆம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி,

2025-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட  அனைத்துக் குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பெருந்தொற்றினால் தொடக்க வகுப்புகளில் குறிப்பாக 1 முதல் 3-ஆம் வகுப்புக் குழந்தைகள், தங்கள் வகுப்பிற்குரிய கற்றல் நிலையை அடைந்திருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, மூன்றாம் வகுப்புக் குழந்தைகள், இரண்டாம் வகுப்புக்குரிய கற்றல் அடைவைப் பெறவில்லை.

 

இரண்டாம் வகுப்புக் குழந்தைகள் முதல் வகுப்புக்குரிய கற்றல் அடைவைப் பெறவில்லை. இவ்வாறாக, 19 மாத இடைவெளிக்குப் பிறகு, குழந்தைகள், அந்தந்த வகுப்பிற்குரிய திறன்களைப் பெறாமலே வகுப்பை நிறைவு செய்து உள்ளனர்.

எனவே குழந்தைகள் இழந்த கற்றலைப் பெறுவதற்கு உதவியாகப் பள்ளிக் கல்வித்துறையின் முன்னோடித் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம், கற்றல் நிலைக்கேற்பக் கற்பித்தல் ‘Teaching at the Right Level’ (TARL) என்ற அணுகுமுறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.   இதற்கேற்ப எண்ணும் எழுத்தும் திட்டத்தில் அரும்பு, மொட்டு, மலர் என்னும் பெயர்களில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களுக்கு சூழ்நிலையியல் பாடத்திறன்களையும் ஒருங்கிணைத்து முதல்முறையாக நிலைவாரியான பயிற்சிநூல்கள் (Level Based Workbooks) உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளன.

 

இப்பயிற்சிநூல்கள் வாயிலாக மூன்றாம் வகுப்புக் குழந்தைகள்,
1 மற்றும் 2-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திறன்களையும் இரண்டாம் வகுப்புக் குழந்தைகள், முதல் வகுப்புக்கான பாடத்திறனையும் அடைவதற்கான வாய்ப்பைப் பெறுவர்.

இப்பயிற்சி நூல் செயல்பாடுகளைக் குழந்தைகள் செய்து கற்பதற்கு வழிகாட்டி உதவும்வகையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்பிப்பதற்கான தெளிவான, விரிவான விளக்கங்களுடன் கூடிய ஆசிரியர் கையேடுகளும் முதல்முறையாக உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளன.

 

பாடவாரியாக உருவாக்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகளும் பயிற்சி நூல்களும்  ஒவ்வொரு குழந்தையும் தனக்குத் தெரிந்த  கற்றல் நிலையிலிருந்து  படிப்படியாகத் தனது கற்றலை வளர்த்துக் கொண்டு செல்ல உதவும்.

மேலும், குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் வகுப்பறையில், பாடல் களம், கதைக் களம், செயல்பாட்டுக் களம், படைப்புக் களம், படித்தல் களம் மற்றும் பொம்மலாட்டக் களம் போன்றவை அமைக்கப்பட்டு குழந்தைகளின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் கற்றல், கற்பித்தல் நடைபெறும்.

 

இதனால், குழந்தைகளுக்குப் பிடித்தமான கதைகள், பாடல்கள், விளையாட்டுகள், புதிர்கள், கலைகள் மற்றும் கைவினைப் பொருள்களால் எண்ணும் எழுத்தும் வகுப்பறை நிறைந்திருக்கும்.

 

எண்ணும் எழுத்தும் வகுப்பறையின்  செயல்பாடுகள், குழந்தைகள், கவனச்சிதறல் இன்றிப்  பங்கேற்றுக் கற்கவும் துணைக்கருவிகளின்  (Teaching Learning Materials) உதவியுடன் பாடங்களைப் புரிந்து ஆர்வமுடன் கற்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை  குழந்தைகள், தனியாகவும்  இணைந்தும் குழுவாகச் சேர்ந்தும் அச்சமின்றிக் கற்க உதவிபுரியும். மேலும்,  எண்ணும் எழுத்தும் திட்டத்தில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் கல்வி நிருவாகக் கண்காணிப்பும் விளையாட்டு வழி மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

 

“எண்ணும் எழுத்தும்” திட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம், 2025ஆம் ஆண்டிற்குள்  தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றிப் படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவுமான எழுத்தறிவையும் எண்ணறிவையும் பெறுவது  உறுதிசெய்யப்படும்.

 

“எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தினை தொடங்கி வைத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் “எண்ணும் எழுத்தும்” மாதிரி வகுப்புகளைப் பார்வையிட்டார்.

 

  • 2025-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது நம்முடைய இலக்கு!

 

  • 2025-ஆம் ஆண்டுக்குள் எட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் எண்ணறிவு பெற்றவர்களாகத் திகழ வேண்டும் என்பது நம்முடைய இலக்கு!

 

  • 2022-23-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

 

  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய மூன்று வகுப்புகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

 

  • தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய மூன்று பாடங்களுக்குப் பயிற்சி நூல்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

  • தமிழ்வழி – ஆங்கிலவழி ஆகிய இரண்டு மொழி வழியாகவும் இந்த நூல்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

 

  • பாடமாக மட்டுமல்லாமல், எளிமையான செயல்பாட்டு வடிவத்திலும் பயிற்சி நூல்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

 

  • குழந்தைகளுக்கு அச்சம் ஏற்படாத வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

  • இதற்காக ‘எண்ணும் எழுத்தும்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

 

  • இப்பாடங்களை எப்படி கற்பிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

 

  • ஒவ்வொரு பாடமும் நடத்துவதற்கு ஏற்றவாறு வகுப்பறைக் களம் அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

  • ஆடல் – பாடல் – கதையாகச் சொல்லுதல் – நடித்துக் காட்டுதல் – பொம்மலாட்டம் – கைவினைப் பொருள்கள் எனப் பல்வேறு வடிவங்களில் இப்பாடங்கள் பயிற்றுவிக்கப்பட இருக்கின்றன.

 

  • இதற்கான காணொளிகளும் வழங்கப்பட உள்ளன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: