இந்தியாவின் 3-வது குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன்
இந்தியாவின் 3-வது குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் ஆந்திர மாநிலம் (அன்று) ஹைதராபாத்தில் 1897 பிப்ரவரி 8-ம் தேதி பிறந்தார். 15 வயதிற்குள்ளாகவே பெற்றோரை இழந்தார். சுயமாக படித்தார். ஜெர்மனியின் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தி, உருது, ஆங்கிலத்தில் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
பிளேட்டோவின் ‘ரிபப்ளிக்’ நூலை உருது மொழியில் மொழிபெயர்த்தார். இவர் ஜாமியா மிலியா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, மாணவர்கள் அழுக்கு ஷு அணிந்து கல்லூரி வருவது கண்டார். ஒருநாள், கல்லூரி வாசலில் பிரஷ், பாலிஷுடன் நின்றவர் அழுக்கு ஷுவுடன் வந்த மாணவர்களிடம், ‘காலைக் காட்டு. நான் பாலிஷ் போடுகிறேன்’ என்றார்.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தராக 8 ஆண்டுகள் பணியாற்றினார். 1956-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். 1967-ல் குடியரசுத் தலைவரானார். ‘இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்’ என்று முழங்கிய ஜாகிர் உசேனுக்கு பத்ம விபூஷண், பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.