TNPSC UNIT 9 Study Materials
ராஜகோபாலாச்சாரி (C.Rajagopaachari)
சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், எழுத்தாளர், இந்தியாவின் கவர்னர் ஜெனரல், சென்னை மாகாண முதல்வர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ராஜகோபாலாச்சாரி (C.Rajagopaachari) பிறந்த தினம் (டிசம்பர் 10).
கிருஷ்ணகிரி மாவட்டம் (அன்றைய சேலம் மாவட்டம்) தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார் (1878). பெங்களூர் சென்ட்ரல் கல்லூரி, மற்றும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் பயின்றார்.
1900-ம் ஆண்டில் ஒரு வழக்குக்கே 1000 ரூபாய் வாங்கும் வெற்றிகரமான வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.
காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். வழக்கறிஞர் தொழிலை கைவிட்டார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். ரவுலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம் உள்ளிட்டப் பல போராட்டங்களில் பங்கேற்றார்.
1917-ல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடினார். அவர்களுக்கு பதவிகள் வழங்கினார்.
1930-ல் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடத்தி சிறை சென்றார். 1937-ல் மதராஸ் மாகாணத்தின் பிரதான மந்திரியாகப் பொறுப்பேற்றார்.
அப்போது அரசு நிர்ணயித்த ஆண்டு ஊதியமான ரூ. 56,000த்தை ஏற்காமல் அத்தியாவசிய செலவுகளுக்காக வெறும் 9 ஆயிரம் மட்டுமே பெற்றுக்கொண்டார்.
1946-ல் அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். படைப்பாற்றல் மிக்கவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் திறன் கொண்டவர்.
ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
‘திண்ணை ரசாயனம்’, ‘கண்ணன் காட்டிய வழி’, ‘பஜ கோவிந்தம்’, ‘மெய்ப்பொருள்’, ‘பக்திநெறி’, ‘வள்ளுவர் வாசகம்’ உள்ளிட்ட ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார்.
கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சி.யுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார்.
அமர கீதமான ‘குறை ஒன்றும் இல்லை.. மறைமூர்த்தி கண்ணா’ உள்ளிட்ட பல பாடல்களையும் இயற்றியுள்ளார்.
சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தவர். சென்னை மாகாண பிரதம அமைச்சர், வங்க ஆளுநர், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதலமைச்சர் ஆகிய பொறுப்புகளில் சிறந்த நிர்வாகியாக முத்திரை பதித்தார்.
காங்கிரசின் சோஷலிசக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திராக் கட்சியை நிறுவினார்.
மதுவிலக்குக் கொள்கையைத் தீவிரமாக ஆதரித்தார். பிரதான அமைச்சராக இருந்த சமயத்தில் சென்னை மாகாணம் முழுவதும் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்.
1967-ல் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து, தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய துணை நின்றார். காந்தியத்தைத் தமிழ் மண்ணில் வளர்த்தெடுக்கப் பாடுபட்டார்.
புதுப்பாளையம் என்ற கிராமத்தில் ஆசிரமம் அமைத்து சமூகத் தொண்டாற்றினார்.
1954-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
தேசத் தொண்டையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த இவரது சேவையைப் போற்றும் வகையில் இவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.
சேலத்து மாம்பழம் என்றும் ராஜாஜி என்று அன்புடன் அழைக்கப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சரியார் 1972-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி 94-ம் வயதில் காலமானார்.
DOWNLOAD PDF
CURRENT AFFAIRS TELEGRAM GROUP