கோவிட்-19 தாக்கத்திலிருந்து உலகம் விடுபடத் தொடங்கிய 2022இல், தொழில்நுட்ப உலகம் புதிய சாத்தியங்களை எட்டியது. பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைக்கும் போக்கு இந்த ஆண்டு முக்கிய அம்சமாக அமைந்தது. நம்பிக்கை, எதிர்பார்ப்பு, எச்சரிக்கை ஆகியவற்றுக்கு இடையே, தொழில்நுட்ப உலகில் இந்த ஆண்டு தாக்கம் செலுத்திய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது.
கிரிப்டோ குளிர்காலம்: இந்தியாவில் கிரிப்டோ மோசடி தொடர்பான செய்திகள் அதிகரித்துவந்த நிலையில், சர்வதேச அளவில் கிரிப்டோ துறையே பெரும் சோதனைக்கு உள்ளானது. ஓராண்டுக்குமுன், 68 ஆயிரம் டாலருக்கு நிகராக இருந்த பிட்காயின் மதிப்பு, இந்த ஆண்டு 17 ஆயிரம் டாலருக்குச் சரிந்தது. பிட்காயின் மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாவது வழக்கம்தான் என்றாலும், இந்த ஆண்டு கிரிப்டோ நாணயங்கள் தொடர்பான சர்ச்சைகளும் சந்தேகங்களும் பெரும் தாக்கம் செலுத்தின.
இதனிடையே, அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்ட ‘ஸ்டேபிள்காயின்’ வகை கிரிப்டோ நாணயங்கள் கவனத்தை ஈர்த்தாலும், அதிகரித்த பணவீக்கத்தால் முதலீட்டாளர்கள் பாராமுகம் காட்டினர். நவம்பர் மாதம், கிரிப்டோ பரிவர்த்தனைச் சந்தையான எஃப்டிஎக்ஸ் (FTX) திவாலானதால், கிரிப்டோ துறை மேலும் சிக்கலுக்கு உள்ளானது.
தொடர் சிக்கல்களால், கிரிப்டோ நிறுவனங்களுக்கான நிதி முதலீடு கிடைப்பது அரிதாகி, ‘கிரிப்டோ குளிர்காலம்’ நிகழ்வதாகக் கணிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையும், 1950களில் அதன்ஆரம்பகாலச் செழிப்புக்குப் பிறகு இத்தகைய சிக்கலை எதிர்கொண்டபோது ‘ஏஐ குளிர்காலம்’ என வர்ணிக்கப்பட்டது.
டிஜிட்டல் ரூபாய்: டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா சீராக முன்னேறிவரும் நிலையில், மற்றொரு மைல்கல்லாக டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டது. தனியார் கிரிப்டோ நாணயங்களின் எழுச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகள், கட்டுப்படுத்தப்பட்ட டிஜிட்டல் நாணயங்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்தப் போக்கின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ள ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்தது. முதற்கட்டமாக மொத்த பயன்பாட்டுக்கான டிஜிட்டல் ரூபாய் அறிமுகமான நிலையில், சில்லறைப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாய் டிசம்பர் மாதம் முன்னோட்ட வடிவில் அறிமுகமானது.
டிவிட்டர் சர்ச்சை: சமூக ஊடகப் பரப்பைப் பொறுத்தவரை, 2022இன் மிகப் பெரிய செய்தி, ‘டெஸ்லா’ நிறுவனர் எலான் மஸ்க், குறும்பதிவுச் சேவையான டிவிட்டரைக் கையகப்படுத்தியதுதான். டிவிட்டரைவாங்கும் முடிவை மஸ்க் ஏப்ரல் மாதமேஅறிவித்தாலும், பின்னர் அந்த முடிவிலிருந்துபின்வாங்கினார்.
இறுதியாக நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு, நவம்பரில் 44 பில்லியன்டாலருக்கு டிவிட்டர் கைமாறியது. அதை வாங்கிய பிறகு, ‘ப்ளூ டிக்’ வசதிக்குக் கட்டணம் போன்ற மஸ்க்கின் நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. இதனால் ‘மஸ்ட டான்’, நம் நாட்டின் ‘கூ’ உள்ளிட்ட மாற்று சேவைகள் கவனத்தை ஈர்த்தன. டிவிட்டரின் எதிர்காலம் எப்படி இருக்கும் எனும் கேள்வியும், விவாதமும் புத்தாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
தடுமாறிய ஃபேஸ்புக்: டிவிட்டர் சர்ச்சை ஒருபக்கம் இருக்க, முன்னணிச் சமூக ஊடகமான ஃபேஸ்புக் (மெட்டா) வேறுவிதமான பிரச்சினைக்கு உள்ளானது. இணைய உலகில் கூகுளுக்கு நிகராக விளம்பர வருவாயை அள்ளிக் குவிக்கும் நிறுவனமாகக் கருதப்படும் ஃபேஸ்புக், இந்த ஆண்டு வளர்ச்சி நோக்கில் சிக்கலை எதிர்கொண்டு தவித்தது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, முதல்முறையாகக் காலாண்டு வருவாய்ச் சரிவைச் சந்தித்திருப்பதாக ஜூலையில் அறிவித்தது. அதன் வரலாற்றில் முதல்முறையாகப் பயனாளிகள் எண்ணிக்கையிலும் சரிவு நிகழ்ந்தது. 10,000 பேருக்கு மேல் ஆட்குறைப்பு செய்வதாக ஃபேஸ்புக் அறிவித்தது அடுத்த அதிர்ச்சி.
டிக்டாக்கின் எழுச்சி: டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் சிக்கலை எதிர்கொண்டாலும், டிக்டாக் எழுச்சிபெற்றது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட டிக்டாக், சர்வதேசஅளவில் பெரிதாக வளர்ச்சிபெற்று வருவாயையும் அள்ளிக் குவித்தது. அதன் வருவாய் இந்த ஆண்டு இரு மடங்காக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அமெரிக்கர்கள் பெரும்பாலானோர் டிக்டாக்கில் அதிக நேரத்தைச் செலவிடுவதும் தெரியவந்தது. அதோடு, இளம் பயனாளிகள் பலரும் டிக்டாக்கை இணையத் தேடலுக்காகப் பயன்படுத்தும் புதிய போக்கும் தெரியவந்தது.
குட்பை ‘எக்ஸ்புளோரர்’: மைக்ரோசாஃப்டின் ‘எக்ஸ்புளோரர்’ பிரவுசரைப் பலரும் மறந்துவிட்டாலும், ஜூன் மாதம் இந்த பிரவுசர் அதிகாரபூர்வமாக விலக்கிக்கொள்ளப்பட்டது முக்கியச் செய்தியானது. இணைய உலகில் இப்போது கூகுள் ‘குரோம்’ பிரவுசர் ஆதிக்கம் செலுத்தினாலும், நெட்ஸ்கேப்பும் எக்ஸ்புளோரரும் மோதிக்கொண்ட பிரவுசர் யுத்த காலம் பலருக்கு நினைவுக்கு வந்தது. இதுபோலவே கூகுள் நிறுவனம் தனது கேமிங் மேடையான ‘ஸ்டேடியா’வை விலக்கிக்கொள்வதாக அறிவித்தது. ஹோண்டா நிறுவனம் அதன் அஸிமோ ரோபோவுக்கு ஓய்வுகொடுப்பதாக மார்ச் மாதம் அறிவித்தது.
ஜிபிடி சாட்: கிரிப்டோவுக்கு இந்த ஆண்டு சோதனையாக அமைந்தாலும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பல பாய்ச்சல்களைக் கண்டது. இதற்குச் சிகரம் வைத்ததுபோல், ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட் ஜிபிடி (ChatGPT), செயற்கை நுண்ணறிவு அரட்டை சேவை பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உரையாடல் பாணியில் எதற்கும் பதிலளிக்கும் திறன் பெற்றதாகச் சொல்லப்படும் இந்தச் சேவையானது, கூகுள் தேடலுக்குப்போட்டியாக விளங்கும் என ஒரு சிலரால் வர்ணிக்கப்பட்டது. இயந்திரக் கற்றல் துணையால் இயங்கும் மொழி மாதிரியைஅடிப்படையாகக் கொண்ட இது போன்ற சேவைகளேஇணையத்தின் எதிர்காலம் எனச் சொல்லப்படுகிறது.
யூனிகார்ன் தேசம்: இந்திய ஸ்டார்ட்-அப் துறைக்கு ஏற்ற இறக்கமான ஆண்டு என்றாலும், 20க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், 100 கோடி டாலருக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட ‘யூனிகார்ன்’ நிறுவனங்கள் அந்தஸ்து பெற்றன. பிஸிக்ஸ்வாலா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இணைந்தாலும், பைஜூஸ் உள்ளிட்ட கல்விநுட்ப நிறுவனங்கள் பெரும் சவாலை எதிர்கொண்டன.
வந்தாச்சு 5ஜி: திறன்பேசி உலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம், இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமானது. இந்தியாவின் 50 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகமான நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி அறிமுகத்துக்குத் தயாராகி உள்ளது. 5ஜி சேவை எல்லாவற்றையும் வேகமாக்கி மேலும் புதுமைகளைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுமைத் திறன்பேசி: ஆப்பிள், சாம்சங் உள்ளிட்டநிறுவனங்கள் புதிய திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும், நத்திங் 1 போன் (Nothing Phone 1) அதன் புதுமை அம்சங்களால் பேசுபொருளானது. இதன் பின்பக்கஒளி வீச்சு சார்ந்த அறிவிப்பு வசதி பலரையும் கவர்ந்தது.இதற்கு அடிப்படையான கிளிப் இடைமுகமும் பயனாளிகளைவியக்க வைத்தது. செயலிகளைப் பொறுத்தவரை, கூகுள் பிளே ஸ்டோரில், வயதானவர்களுக்கான காயல் செயலி உள்ளிட்டவை வரவேற்பைப் பெற்றன.