தமிழர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பைக் குறைப்பது நியாயமா?

தமிழகத்தில் தமிழர்களுக்கு  ரயில்வே வேலைவாய்ப்பைக் குறைப்பது நியாயமா?

வட மாநிலத்தவர்கள், குறிப்பாக இந்தி பேசுபவர்கள் திட்டமிட்டு மத்திய அரசு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள் என்று வைகோ சுட்டிக்காட்டுகிறார். இதைத் தடுக்க வேண்டும் என்று பேசியிருக்கும் அவர் கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது மாநிலத்தவர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதற்காக சட்டங்கள் இயற்றியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

 

முன்னுதாரண மாநிலங்கள்

கடந்த மாதம், மகாராஷ்டிர மாநில அரசு ஒரு கொள்கை முடிவை அறிவித்துள்ளது. அதன்படி, இனிமேல் அம்மாநிலத்தில் தொடங்கப்படுகிற தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவன வேலைவாய்ப்புகளில் 80%-ஐ மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் வரிச் சலுகைகளையும் பயன்களையும் பெற வேண்டும் என்றால், இந்த விதி கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். இது வெறும் வழிகாட்டும் நெறிமுறை அல்ல, நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் அரசுத் தணிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம் ஒரு படி மேலாகப் போய், அம்மாநிலத்தில் தொடங்கப்படுகிற தனியார் நிறுவனங்களில் குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ நிலை பணிகள் அனைத்தையும் கன்னடம் பேசுபவர்களுக்கே வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது. இதற்காக, கர்நாடகத் தொழிற்சாலை வேலைவாய்ப்புகளுக்கான நிலையாணை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால்தான் இங்குள்ள நிலத்தையும் தொழில்களுக்குத் தேவையான வள ஆதாரங்களையும் கொடுக்கிறோம். தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு அவற்றில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை எப்படி அனுமதிக்க முடியும்?’ என்பது இச்சட்டத்துக்கு ஆதரவளிக்கும் கன்னட அமைப்புகளின் கேள்வி.

கர்நாடக அரசால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, சரோஜினி மகிஷி கமிட்டி 1986-ல் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலானது. அக்குழு அளிந்த பரிந்துரைகள் அரசுத் துறை, பொதுப் பணித் துறை, தனியார் துறை அனைத்திலும் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்கிறது. குரூப் ‘பி’ நிலையில் 80%, குரூப் ‘ஏ’ நிலையில் 65% என்று கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று தொழில் தொடங்குவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அனுமதியளிக்கிறது.

ஆனால், அரசின் சலுகைகளைப் பெற்று ஒரு நிறுவனம் தொடங்கப்படுகிறபோது அரசு கோரும் முன்னுரிமைகளையும் அந்நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மகாராஷ்டிரமும் கர்நாடகமும் வலியுறுத்தியிருப்பது தனியார் நிறுவனங்களில் எழுத்தர், உதவியாளர் நிலையிலான பணிகளில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பதை. அப்படியென்றால், மத்திய அரசின் நிறுவனங்களிலும் பொதுப் பணித் துறை நிறுவனங்களிலும் அவை இயங்குகின்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பணிவாய்ப்புகளை வழங்க வேண்டியது அவசியம் என்பதைத் தனித்துச் சொல்ல வேண்டியதில்லை. வைகோ எழுப்பியிருக்கும் கேள்வியின் நியாயமும் அதுதான்.

ஆனால், தமிழகத்தின் நிலையோ வேறாக இருக்கிறது. தமிழக அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வையேகூட, மொழிபெயர்க்க ஆளில்லை என்று சொல்லி ஆங்கிலத்திலேயே தேர்வு நடத்த முயற்சித்தது டிஎன்பிஎஸ்சி. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகுதான் அது தனது முடிவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. தமிழ் இலக்கியம் படிக்காதவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது, தமிழ் வழியில் படிக்காதவர்கள் தமிழில் தேர்வெழுதக் கூடாது என்றெல்லாம் முட்டுக்கட்டை போடும் முயற்சிகளில் இறங்கியது யுபிஎஸ்சி. எதிர்ப்புகளுக்குப் பிறகுதான் அந்த முயற்சிகளும் கைவிடப்பட்டன. இப்போது ரயில்வே தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் தரக் கோரும் போராட்டம் அவசியப்படுகிறது.

ரயில்வே மட்டும் விதிவிலக்கா?

இந்திய ரயில்வேயின் ஒவ்வொரு மண்டலமும் தனியொரு மாநிலத்தை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கவில்லை. அருகருகே அமைந்துள்ள இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் இணைந்தே ஒரு மண்டலமாக இயங்கிவருகின்றன. எனவே, ரயில்வே துறையை மற்ற பொதுப் பணித் துறை நிறுவனங்களைப் போலக் கருத முடியாது என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். அதேநேரத்தில், ரயில்வே துறையின் பணிநியமனங்கள் இன்று கடும் விவாதத்துக்குரியவையாக மாறியிருக்கின்றன என்பது மறுக்க முடியாத ஒன்று.ரயில்வே தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுதான் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியில் சேர்கிறார்கள். தமிழகத்தில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் அப்படித் தேர்வெழுதி பணிக்கு வந்தவர்கள்தான்.

தென்னக ரயில்வே மண்டலத்துக்காக நடத்தப்படும் தேர்வில் மட்டுமே தமிழில் எழுதும் வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதனால்தான் இங்கு குறைந்தபட்சமாகவேனும் ரயில்வே துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆனால், மற்ற மண்டலங்களுக்கு நடக்கும் தேர்வுகளைத் தமிழில் எழுத முடிவதில்லை. இந்தி பேசுபவர்கள் தங்களது மண்டலத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பணிபுரியும் வாய்ப்பைப் பெறும்போது தமிழர்களின் வேலைவாய்ப்பு தமிழகத்துக்குள்ளேயே சுருங்கிப்போய்விடுகிறது.

ரயில்வே தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்காக பாட்னாவில் ஏகப்பட்ட பயிற்சி நிலையங்கள் இருக்கின்றன, தமிழகத்தில் ரயில்வே வேலைவாய்ப்புகளுக்காக அப்படிப் பயிற்சிப் பள்ளிகள் உருவாகவில்லை என்பதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தி பேசுபவர்களுக்கு தேசம் தழுவிய வாய்ப்புகள் இருப்பதால்தான் அதற்கான பயிற்சி நிலையங்களும் பெருவாரியான எண்ணிக்கையில் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

திருச்சியில் நடந்தது என்ன?

திருச்சி கோட்டத்தில் தொழில்பழகுநர் இடங்களுக்குத்தான் வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். தொழில்பழகுநர்களாகப் பயிற்சி பெற்றவர்கள் ரயில்வே துறையில் பணிபுரியும் வாய்ப்பு இருப்பதால், அதைக் கைப்பற்றுவதில்கூட போட்டி அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில், பாஜகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களிலும் குறிப்பாகத் தென்னக ரயில்வேயில் அதிகளவில் வட மாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது பற்றிய வைகோவின் கேள்விக்குத் தகுந்த பதில் அளிக்க��்பட வேண்டும்.

2014-ல் குரூப் ‘டி’ பணிகளுக்கான அறிவிப்பிலேயே குளறுபடிகளைச் செய்து இரண்டரை லட்சம் தமிழ் இளைஞர்களின் விண்ணப்பங்களை ரயில்வே துறை நிராகரித்ததை உதாரணம் காட்டித்தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் வைகோ. அவரது குற்றச்சாட்டுக்கு ரயில்வே தேர்வாணையம் என்ன பதில் சொல்லப்போகிறது?

Thanks Hindu Tamil

One thought on “தமிழர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பைக் குறைப்பது நியாயமா?

  1. Pingback: Railway Ministry Reply to RRB Group D result - Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading