இந்திய நூலக அறிவியலின் தந்தை
இந்திய நூலக அறிவியலின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் (S.R.Ranganathan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வேதாந்தபுரம் கிராமத்தில் (1892) பிறந்தார். தந்தை ராமாயண சொற்பொழிவுகள் நிகழ்த்தும் நிலக்கிழார். சீர்காழியில் ஆரம்பக் கல்வி கற்றார். ஆழ்வார்கள், நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைப் பயின்றார்.
# எஸ்.எம்.இந்து உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேறிய பிறகு, சென்னை கிறிஸ் தவக் கல்லூரியில் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். ஆசிரியர் பயிற்சியில் பட்டம் பெற்று, மங்களூர், கோயம்புத்தூர், சென்னை பல்கலைக்கழகங்களில் கணிதம், இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
# சென்னை பல்கலைக்கழக நூலகராக 1924-ல் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, லண்டன் சென்று, அங்குள்ள சிறந்த நூலகரான டபிள்யூ.சி.பி.சேயர்ஸிடம், நூல்களை வகைப்படுத்தும் கோட்பாட்டை அறிந்தார்.
# நாடு திரும்பியதும், பல்கலைக்கழக நூலகத்தை மறுசீரமைக்கத் தொடங்கினார். விரைவில் இந்த நூலகம் அறிவுசார் பிரிவினரைக் கவர்ந்தது. அவர்களை ஒன்றிணைத்து, சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். இது நூலக இயக்கத்தின் சின்னமாக மாறியது. அதன் அமைப்பு செயலாளராக 1928 முதல் 1945 வரை செயல்பட்டார்.
# இவரது பணிக்கு மனைவியும் உறுதுணையாக இருந்தார். ஸ்கூல் ஆஃப் லைப்ரரி சயின்ஸ் அமைப்பைத் தொடங்கினார். ஏறக்குறைய 15 ஆண்டுகள் இதன் இயக்குநராகப் பணியாற்றினார். தன் சேமிப்பு முழுவதையும் இதற்காக வழங்கினார். இவரது நூலக இயக்கத்துக்கு ஆங்கில அரசின் ஆதரவையும் பெற்றார்.
# இவர் நல்ல எழுத்தாளரும்கூட. நூலக நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக 60-க்கு மேற்பட்ட நூல்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். பல நாடுகளுக்குச் சென்று நூலகம் குறித்து உரையாற்றினார். கடுமையாகப் பாடுபட்டு நூலகம் மற்றும் தகவல் அறிவியலுக்கான புதிய, அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவினார்.
# நூலகத் துறையில் 21 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக செயல்பட்டு பல புரட்சிகளை ஏற்படுத்தியவர் 1945-ல் ஓய்வுபெற்றார். பின்னர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நூலக அமைப்பை மேம்படுத்துவதற்காக வந்த அழைப்பை ஏற்று, அங்கு சென்றார். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, தனி ஒருவராக அங்கிருந்த ஒரு லட்சம் நூல்களை வகைப்படுத்தினார்
# நூலக அறிவியல் பட்டயப் படிப்பை அறிமுகம் செய்து, தானே கற்பித்தார். டெல்லி பல்கலைக்கழக அழைப்பை ஏற்று அங்கு சென்றவர், நூலக அறிவியல் பாடம் கற்பித்தார். இவர் அங்கு இருந்தபோது, நூலக அறிவியல் இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன.
# இந்திய நூலகச் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆவணங்கள் பதிவு ஆராய்ச்சி மையம், இந்திய புள்ளியியல் நிறுவனம் ஆகிய அமைப்புகளை நிறுவினார். டெல்லி, பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பத்மஸ்ரீ விருதும் பெற்றார். மிக எளிமையாக வாழ்ந்தவர். சிக்கனமானவர். தேவையின்றி பணத்தையோ, ஆற்றலையோ வீணடிக்கமாட்டார்.
# நூலக அறிவியல், ஆவணப்படுத்துதல், தகவல் அறிவியல் துறைகளின் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் 80-வது வயதில் (1972) மறைந்தார். இவரது பெயரில் ஆண்டுதோறும், சிறந்த நூலகர்களுக்கு ‘நல் நூலகர்’ விருது வழங்கப்படுகிறது.