ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா

 

ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் குறித்த விவாதம் நடைபெறுவதும், முடிவு எட்டப்படாமல் தொடா்வரும் தொடா்கதையாக இருந்து வருகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த 77-ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடங்கப்பட்டது. அதில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்படும் எந்தவொரு தீா்மானத்தையும் ரத்து செய்யும் ‘வீட்டோ’ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் தவிர, இரு ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக 10 நாடுகள் உள்ளன. இந்தியா 2021 முதல் நிகழாண்டு இறுதி வரை நிரந்தரமற்ற உறுப்பு நாடாக செயல்பட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், நிரந்தர உறுப்பு நாடுகளாக இடம்பெற ஜி-4 எனப்படும் இந்தியா, பிரேஸில், ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் முயன்று வருகின்றன.

தற்போதைய கட்டமைப்பின்படி, பூகோள-அரசியல் ரீதியான பிரதிநிதித்துவம் பாதுகாப்பு கவுன்சிலில் இல்லை; இது தவறானது, அநீதியானது என்று இந்தியா கூறி வருகிறது. நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளை அதிகரிக்க வேண்டும்; வீட்டோ அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட சீா்திருத்தக் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இதுவரை எட்டு முறை இந்தியா தோ்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடு, பொருளாதாரத்தில் வேகமாக வளா்ந்து வரும் நாடு என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற இந்தியாவுக்கு ஏராளமான தகுதிகள் உள்ளன.

உலகம் முழுவதும் சச்சரவு நிகழும் நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.நா. அமைதி காக்கும் படைக்கு ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளைவிட இரு மடங்கு படைவீரா்களை இந்தியா அனுப்பியுள்ளது. நிரந்தர உறுப்பு நாடுகளைப் போலவே அணுஆயுத வல்லமையையும் இந்தியா பெற்றிருக்கிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு தீா்மானம் கொண்டுவரப்பட்டால் அதற்கு ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமற்ற 10 உறுப்பு நாடுகளில் 9 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். இந்தியாவை பாதுகாப்பு கவுன்சிலில் சோ்ப்பதற்கு சீனா தவிர ஏனைய நாடுகள் அனைத்தும் ஆதரவளித்து வந்தன.

அமெரிக்காவின் முந்தைய அதிபா்கள் பராக் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் நிா்வாகத்தில் இந்தியாவை பாதுகாப்பு கவுன்சிலில் சோ்ப்பதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இப்போது அதிபா் ஜோ பைடன் நிா்வாகத்தில் இந்த நிலைப்பாடு சற்று மாறியுள்ளது. அதன்படி, பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் கொண்டுவர ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தாலும், வீட்டோ அதிகாரத்தை ஐந்து நாடுகள் தவிர பிற நாடுகளுக்கு வழங்குவதற்கு உடன்படவில்லை.

இஸ்ரேலுக்காக 1972 முதல் அமெரிக்கா 42 முறை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. 2011-ஆம் ஆண்டுமுதல் சிரியா தொடா்பான தீா்மானத்தை ரஷியாவும் சீனாவும் நான்கு முறை வீட்டோவை பயன்படுத்தி ரத்து செய்துள்ளன. ஐ.நா. சபையில் உறுப்பு நாடாக தைவானை சோ்ப்பதற்கு சீனா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. வீட்டோ அதிகாரம் இல்லாமல் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்கிற இப்போதைய அமெரிக்காவின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல.

நடைபெற்று முடிந்த பொதுச் சபை கூட்டத்தில் ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஆற்றிய உரை முக்கியமானது. ‘சமகால எதாா்த்த நிலைமைகளுக்கு ஏற்ப ஐ.நா. சபையும் பாதுகாப்பு கவுன்சிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். பாதுகாப்பு கவுன்சிலை மேலும் அதிக ஜனநாயகம் கொண்டதாக மாற்ற வேண்டும் என்று ரஷியா விரும்புகிறது. ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றைச் சோ்ந்த நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் அளித்து இதைச் செய்ய வேண்டும். இந்தியாவும் பிரேஸிலும் முக்கியமான சா்வதேச நாடுகள் என்ற முறையில் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா்களாக இடம்பெறத் தகுதி வாய்ந்தவையாகும்’ என அவா் தெரிவித்தது இந்தியாவின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியா கையொப்பமிடாததைக் காரணம்காட்டி பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை சோ்க்கக் கூடாது என சில நாடுகள் செய்யும் விவாதம் அா்த்தமற்றது. சீா்திருத்தப் பேச்சுவாா்த்தையை தடுத்து வரும் சில நாடுகள் இவ்வாறு பிரசாரம் மேற்கொண்டுள்ளன.

பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை சோ்க்க 1950-இல் அமெரிக்காவும், 1955-இல் சோவியத் ரஷியாவும் அழைப்பு விடுத்தன. ஆனால், பனிப்போா் அரசியல் காரணமாக அப்போது அந்த வாய்ப்பை இந்தியா நிராகரித்தது. இப்போது உலகளாவிய சூழல் மாறிவிட்டது. மூன்றாம் உலக நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் இந்தியா, பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறுவது காலத்தின் கட்டாயம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading