வனக் காவலர் தேர்வை ரத்து செய்ய கோரிய வேட்டை காவலர்கள்

நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் வனக் காவலர் பணியிடங்கள்

ஏமாற்றத்தில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்

Forest Watcher Exam Issue – 2019

வனத் துறையில் காலியாக உள்ள வனக் காவலர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால், இந்த வேலையை நம்பி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


தமிழக வனத் துறையில் பல நிலையிலான பணியிடங்கள் இருந்தாலும் மிக முக்கியமாகவும், ஆபத்து மிகுந்த பணியாகவும் கருதப்படுவது வேட்டைத் தடுப்புக் காவலர்களின் பணியாகும். விவசாய நிலம் மற்றும் ஊருக்குள் நுழையும் வன விலங்குகளை விரட்டுவது, தடுப்பது, கண்காணிப்பது மற்றும் வன விலங்குகள் வேட்டையாடுதலைத் தடுத்தல், வனப் பகுதிகளில் சமூக விரோதிகள் நடமாட்டத்தைக் கண்காணித்தல் போன்ற பணிகளில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வனப் பகுதியில் 1,119 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியின மக்களாவர். மீதமுள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.

கடந்த 2012-இல் ரூ. 2,126 -ஆக இருந்த இவர்களது மாத ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.12,500 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

 

கடந்த 10 ஆண்டுகளில்  யானை உள்ளிட்ட வன விலங்குகளின் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேரடி நியமனம்: வனத் துறையில் காலியாக உள்ள வனக் காவலர் பணியிடத்துக்கு பணிமூப்பு அடிப்படையில் தகுதியுடைய வேட்டைத் தடுப்புக் காவலர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வனத் துறை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் வேட்டைத் தடுப்புக் காவலர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

தகுதி உடையவர்களை நியமிக்க வேண்டும்: இதுகுறித்து வன வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் எம்.பிரவீண்குமார் கூறியது:

தகுதியுடைய வேட்டைத் தடுப்புக் காவலர்களை வனக் காவலர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று கடந்த 2007-இல் இருந்து அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் 137 வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வனக் காவலர்களாக நியமிக்கப்பட்டனர். 

இந்நிலையில், காலியாக உள்ள வனக் காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

கடந்த  2013-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையில், வனக் காவலர் பணியிடத்துக்கு நேரடியாகப் பணி நியமனம் நடைபெறாது.

என்றும் பணிமூப்பு அடிப்படையில்,  வேட்டைத் தடுப்பு காவலர்களாகப் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு பணியிடம் நிரப்பிய பின், மீதமுள்ள இடத்துக்கு நேரடி நியமனம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி வனக் காவலருக்கு நேரடி நியமனம் நடைபெறுவது ஏமாற்றம் அளிக்கிறது.

வன விலங்குகளுக்கு மத்தியில் இரவு பகல் பாராமல் பணியாற்றும் எங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு வனக் காவலர் பணியிடத்துக்கு 10 ஆண்டுகள் பணியாற்றிய தகுதியுடைய வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

அரசு நினைத்தால் நடக்கும்: இதுகுறித்து வனத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், வனக் காவலர் போன்ற கடினமான பணிக்கு வன விலங்குகளைக் கையாளுவதில் அனுபவம் வாய்ந்த வேட்டைத் தடுப்புக் காவலர்களைத் தான் நியமிக்க வேண்டும்.

தற்போதுள்ள வேட்டைத் தடுப்புக் காவலர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய சுமார் 350-க்கும் மேற்பட்டோர் வனக் காவலர் பணிக்குத் தகுதியுடையவர்கள்.

ஆனால், உயரம் போன்ற பல்வேறு காரணங்களைக் காட்டி, அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு தயங்குகிறது. ஆனால், அரசு நினைத்தால் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்றார்.

இதுகுறித்து வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், வேட்டைத் தடுப்புக் காவலர் விவகாரம் குறித்து வனத் துறைச் செயலர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

நன்றி : தினமணி

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: