ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும்

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்துவிதப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்தத் தகுதியுடையவர்கள் ஆவர்.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை உள்ளது. அந்நிலையை மாற்றித் தற்போது ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக என்சிடிஇ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, ”டெட் தேர்வில் இனித் தேர்வு எழுதி வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ், ஆயுட்காலம் வரை செல்லும். எனினும் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றோருக்கு சட்ட ஆலோசனை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விதி திருத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 50-வது பொதுக்குழுக் கூட்டம் கடந்த செப்.29-ம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: