பிளஸ் 2 -துணைத் தேர்வு
செப்டம்பர்
செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் தனித்தேர்வர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
பழைய நடைமுறை பாடத்திட்டத்தின்படி (200 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு) தேர்வெழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் /அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே தோல்வியுற்ற /வருகை புரியாத பாடங்களைத் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி தனித்தேர்வராக பிளஸ் 2 தேர்வெழுத இப்பருவம் முதல் விண்ணப்பிக்க இயலாது.
தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள மையங்களில் 27.08.2018 (திங்கட்கிழமை) முதல் 01.09.2018 (சனிக்கிழமை) மாலை 5:45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தனித்தேர்வர்கள் ரூ. 1,000/- கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு அனுமதி திட்டத்தில் 3.09.2018 (திங்கட்கிழமை) மற்றும் 4.09.2018 (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆண் தனித்தேர்வர்களும், பெண் தனித்தேர்வர்களும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
தேர்வுக் கட்டணம், ஆன்லைன் பதிவுக் கட்டண விவரம் மற்றும் செலுத்தும் விதம்:- மறுமுறை தேர்வெழுதுவோர் (ழ வகை தனித்தேர்வர்கள்) ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/- வீதம் தேர்வுக் கட்டணமும், இதரக் கட்டணமாக ரூ. 35/-ம் செலுத்த வேண்டும். ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு மட்டும் மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். தனித்தேர்வர்கள் அவரவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அட்டவணை:- பிளஸ் 2 துணைத் தேர்வு செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.