Blue Print method will be removed in TN Public School Exams

மனப்பாட முறை ஒழிகிறது

கல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு இனி ப்ளுபிரிண்ட்’ அடிப்படையில் கேள்விகள் கேட்காமல், முழுமையாக பாடப் புத்தகத்தில் இருந்து மட்டுமே கேள்வி கேட்கப்படும் முறையை பள்ளிக் கல்வித்துறை அமல்படுத்தவுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட பாடத்தில் இருந்து குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு, குறிப்பிட்ட பகுதியில் உதாரணமாக 1,2,5,10 மதிப்பெண்களுக்கு என வினாக்கள் கேட்கப்படும். இதனால் ஆசிரியர்கள் அந்த குறிப்பிட்ட பாடத்தை மட்டுமே மாணவர்களுக்கு கற்பித்து வந்தனர்.

இந்த முறையால் மாணவர்கள் மனப்பாடம் மட்டுமே செய்து, பொதுத் தேர்வினை எழுதினர். பாடப் புத்தகத்தினை முழுவதுமாகப் படிக்காமல் இருந்தனர். இதனால் மாணவர்கள் தமிழக அளவில் அதிகளவில் மதிப்பெண்களை குவித்தனர். ஆனால் மத்திய அரசின் எந்த போட்டித் தேர்வையும் பெரும்பாலான மாணவர்களால் சிறப்பாக எழுதி வெற்றிப்பெற முடியவில்லை.

மேலும் தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களும் உயர் கல்வியில் தேர்ச்சி பெறாமல் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் பிளஸ் 2 வகுப்பு பாடங்களில் குறிப்பிட்ட சில பாடங்களை மட்டுமே நடத்தி மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததே ஆகும்.

ப்ளு பிரிண்ட்’ முறை நீக்கம்: இந்தநிலையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவினர் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை முற்றிலும் மாற்ற வேண்டும் என கூறி, ப்ளுபிரிண்ட் முறையை நீக்கி உள்ளனர். இதையடுத்துஅரசுத் தேர்வுத்துறை இயக்ககம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வின் போது வினாத்தாள் எப்படி வடிவமைக்கப்படும் என்பது குறித்தும், மாணவர்களை ஆசிரியர்கள் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஆசிரியர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. இந்த அறிவுரைகள் விவரம்:-

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர்கொள்ளும் வகையிலும், அரசின் போட்டித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையிலும் புத்தகத்தின் கருத்துக்களை நன்கு படித்து உணர்ந்து அதனடிப்படையில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும்.

பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், ஆசிரியர்கள் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பாடம் சார்ந்து கேட்கப்படும் உயர் திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் வினாக்கள் ஆகியவற்றுக்கும் விடையளிக்க பயிற்றுவிக்க வேண்டும்.

சிந்தித்து பதிலளிக்கும் வினாக்கள்: நிகழ் கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாளில் தோராயமாக 20 சதவீதம் வினாக்கள் (ஒரு மதிப்பெண் , சிறுவினா, குறுவினா, நெடுவினா) கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள், பாடம் சார்ந்து கேட்கப்படும் உயர் திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் பயிற்சிகள் இருப்பது அவசியம். . பிளஸ் 2 வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் ஜூலை முதல் வாரத்தில் அனுப்பப்படும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டுள்ள வினாக் கட்டமைப்பின்படி வினாத்தாள் அமையும். எனவே, கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பினை மட்டும் படித்தால் முழு மதிப்பெண் பெறமுடியாது என்பதனை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி பாடத்தின் உட்கருத்தினை புரிந்து கொண்டு படிக்குமாறும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், வினாத்தாளில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை நன்கு படித்தபின் தேர்வெழுத அறிவுறுத்த வேண்டும். மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்தெழுதுக’ என்ற தலைப்பில் இடம்பெறும் வினாக்களுக்கு, வினா எண் குறியீட்டுடன், விடையினையும் சேர்த்து எழுதினால் மட்டுமே உரிய மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் குறியீடு மட்டுமோ அல்லது விடை மட்டுமோ எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது எனவும் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

மேலும், விடைத்தாள் முழுமைக்கும் நீலம் அல்லது கருப்புமையில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தலைப்புகள், வினாக்களுக்கு மட்டும் கருப்பு மையினைப் பயன்படுத்துவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இந்த முறையினை பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளிலேயே கடைப்பிடிக்க மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன

source- Dinamani- Thanks

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: