தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019

தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019

நன்றி : பிபிசி தமிழ்

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை இவ்வளவு சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பதும் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பதும் ஏன்?

இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறியது.

இந்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. துவக்கத்தில் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் அறிக்கையின் பல அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள்.

கல்வி ஆர்வலர்கள் கூறுவது என்ன?

இந்த அறிக்கை கூட்டாட்சித் தத்துவதிற்கு எதிராக இருப்பதாகவும் ஒற்றை நாடு – ஒற்றைக் கல்வி முறையை நோக்கி இந்தியாவைத் திருப்புவதாகவும் கூறி தமிழகத்தில் உள்ள கல்வி ஆர்வலர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர்.

“பள்ளிக்கல்வி என்பது மத்திய – மாநில அரசுகளின் ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும்போது, மாநில நலன்களுக்கு எதிரான அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த வரைவு இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்”

“1976ஆம் ஆண்டுவரை பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்போது தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகச் சிறந்த கல்வியை அனைவருக்கும் அளித்த பெருமையைப் பெற்றது. 1964ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முழுமையும் கட்டணமில்லாமல் ஆக்கப்பட்டது. ஆசிரியர்கள் அனைவரும் முழுத் தகுதி பெற்றவர்களாக திகழ்ந்தனர். இதற்கு முக்கியக் காரணம், கல்வி மாநிலப் பட்டியலில் இருந்ததுதான்”

“1976ல் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டாலும் பெரிதாக மத்திய அரசின் தலையீடு இருந்ததில்லை. ஆனால், இப்போது ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் பள்ளிக் கல்வியை மத்தியப் பட்டியலில் உள்ள ஒரு அம்சத்தைப்போலவே மத்திய அரசு கருதுகிறது. அந்த அம்சத்திற்கு வலுவூட்டும் வகையில்தான் இந்த புதிய கல்விக் கொள்கை வரைவு அமைந்திருக்கிறது” என கட்டுரை ஒன்றில் இந்த வரைவு அறிக்கை குறித்து சுட்டிக்காட்டினார் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன்.

இந்தியாவில் இதற்கு முன்பாக இரு தேசிய கல்வி கொள்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழக கல்வி ஆணையம், மேல்நிலைக் கல்வி ஆணையம் உள்பட பல்வேறு ஆணையங்களை மத்திய அரசு அமைத்தது.

அதேபோல, தேசிய கல்விக் கொள்கையை வகுக்க தௌலத் சிங் கோத்தாரி தலைமையில் ஒர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை 1968ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார்.

14 வயது வரை கட்டாயக் கல்வி, ஆங்கிலம், இந்தி, பிராந்திய மொழி உள்ளிட்ட மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவது, சமஸ்திருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவை இந்தக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருந்தன. வருவாயில் ஆறு சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கவும் இந்த ஆணையம் பரிந்துரைத்தது.

இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் எப்படி உருவானது?

இதற்குப் பிறகு 1986ல் இரண்டாவது தேசியக் கல்விக் கொள்கையை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி வெளியிட்டார். கல்வி வாய்ப்புகளில் உள்ள பாரபட்சங்களை நீக்கி, அனைவருக்கும் சமவாய்ப்புள்ள கல்வி கிடைக்கச் செய்வதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டிருந்தது.

உதவித் தொகை விரிவாக்கம், வயதுவந்தோர் கல்வி, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பது ஆகியவற்றையும் இந்தக் கல்விக் கொள்கை முன்வைத்தது. இந்த கல்விக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

இதற்குப் பிறகு நரசிம்மராவ் பிரதமரானபோது, 1986ஆம் ஆண்டின் கல்விக் கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பிறகு, 2005ல் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் மன்மோகன் சிங் அரசு ஒரு கல்விக் கொள்கையை முன்வைத்தது.

இந்நிலையில்தான், 2014ல் பதவியேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதிய ஒரு கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு முன்னாள் கேபினட் செயலர் டி.எஸ்.ஆர். சுப்ரமணியம் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஆனால், டிஎஸ்ஆர் சுப்பிரமணியத்திற்கும் அப்போதைய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டால், 2016ல் அக்குழு முன்வைத்த வரைவு அறிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.

சர்ச்சையை உருவாக்கிய அம்சங்கள்

இதற்குப் பிறகு, கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017ல் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுதான் தனது பரிந்துரையை தற்போது வெளியிட்டிருக்கிறது.

இந்த வரைவு அறிக்கையில் பின்வரும் சில அம்சங்கள்தான் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன.

1. குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி மூன்று வயது முதல் 7 வயதுவரை என ஐந்து ஆண்டுகளாக இருக்கும் என இந்த வரைவு கூறுகிறது. பல வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் ஆரம்பக் கல்வியை 5 வயதில் துவங்கும்போது மூன்று வயதில் ஆரம்பக் கல்வியைத் துவங்குவது தேவையில்லாதது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

2. கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து, பழைய கல்வி முறைகளான குருகுலம், மதரசா, பாடசாலை முறை போன்ற புராதன கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவதை இந்த வரைவு முன்வைக்கிறது. ஆனால், ஜாதி அடிப்படையிலான, மத அடிப்படையிலான கல்வியை வலியுறுத்துவதாக இந்த முறை அமைந்துவிடும் என்றும் இது கல்வி முறையை பின்னோக்கிச் செலுத்தும் என்றும் கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.

3. எட்டாம் வகுப்போடு பொதுக் கல்வியை முடித்துவிட்டு, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தங்கள் எதிர்காலப் படிப்புக்கான பாடங்களை தேர்வுசெய்து படிப்பதை இந்த வரைவு ஊக்கப்படுத்துகிறது. 13 வயதில் எட்டாம் வகுப்பை முடிக்கும் ஒரு மாணவனால் எப்படி எதிர்காலப் படிப்பைத் தீர்மானிக்க முடியும் என்றும் எட்டாம் வகுப்போடு படிப்பை முடிக்கவே இந்தத் திட்டம் ஊக்குவிக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

4. மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தேசிய திறனறித் தேர்வுகள் நடத்த வேண்டும்; இதன் மூலம் மாணவர்கள் எந்த அளவுக்கு கற்றிருக்கிறார்கள் என்பதை அறியமுடியும் என்கிறது இந்தக் கல்வி வரைவு.

அடுத்த வகுப்புகளுக்குச் செல்ல இந்தத் தேர்வின் முடிவுகள் கணக்கில் கொள்ளப்படமாட்டாது என இப்போது கூறினாலும் விரைவிலேயே அது அறிமுகப்படுத்தப்பட்டு, மூன்றாம், ஐந்தாம் வகுப்புகளிலேயே மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் போகலாம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

5. பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை அவை மூன்று விதமாகப் பிரிக்கப்படும். முதலாவது பல்கலைக்கழகம் கூடுதலாக ஆய்வுகளையும் குறைச்சலாக பாடப் பிரிவுகளையும் வழங்கும்.

இரண்டாவது பிரிவு கூடுதலான பாடப் பிரிவுகளையும் குறைச்சலான ஆய்வுகளையும் மேற்கொள்ளும். மூன்றாவது வகைப் பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்கும் அதிகாரத்தை மட்டுமே கொண்டிருக்கும். பெரும்பாலான கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு, அந்தந்த கல்லூரிகளே பட்டங்களை வழங்க அனுமதிக்கப்படும். ஆனால், பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்கும்போது, இம்மாதிரியான ஒரு பரிந்துரையை கல்விக் கொள்கை முன்வைக்க முடியாது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

6. National Testing Agency என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, எல்லா கல்லூரி, பல்கலைக்கழக படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை இருக்கும் என்கிறது வரைவு. ஆனால், இது பள்ளிக் கல்விக்கான மதிப்பைக் குலைத்து, கோச்சிங் சென்டர்களை அதிகரிக்க வழிவகுப்பதோடு, ஏழைகள் கல்வியே பெற முடியாத நிலையை ஏற்படுத்தும் என்கிறார்கள் கல்வியாளர்கள். மேலும் பள்ளிகளைவிட கோச்சிங் சென்டர்களுக்கே கூடுதலான முக்கியத்துவம் கிடைக்கும்.

7. பிரதமரின் தலைமையில் தேசிய அளவிலான கல்வி அமைப்பாக ‘ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக்’ உருவாக்கப்படும் என்கிறது இந்த வரைவு. இந்தியா போன்ற பல இன மக்கள் பல்வேறு விதமான கலாச்சாரங்களுடன் வாழும் நாட்டில், எல்லா அதிகாரங்களையும் கொண்ட உயர் அதிகார அமைப்பை ஏற்க முடியாது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

8. பாலி, பிராகிருதம், பெர்ஷிய மொழிகளை மேம்படுத்த புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றைக் கற்றுத் தரும் அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் சமஸ்கிருத மொழி ஊக்குவிக்கப்படும் என்றும் புதிய வரைவு கூறுகிறது. இது முழுக்க முழுக்க சமஸ்கிருதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தரும் ஒரு கொள்கை என்கிறார்கள் கல்வியாளர்கள். மத்திய அரசு எல்லா மொழிகளையும் சமமாகப் பார்ப்பதற்குப் பதிலாக, இந்தி, சமஸ்கிருத மொழிகளின் வளர்ச்சிக்கு கூடுதலாக செலவழிப்பது சரியா என்கிறார்கள் கல்வியாளர்கள்.

9. தற்போது மருத்துவக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை வரைவின்படி, எம்பிபிஎஸ் முடித்தவர்கள், தேசிய அளவிலான வெளியேறும் தேர்வு (Exit Exam) ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். அதில் பெறும் மதிப்பெண்களை வைத்தே முதுகலைப் படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்வுசெய்யலாம் என்கிறது இந்த வரைவு அறிக்கை. ஆனால், இது மருத்துவக் கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் முழுமையாகப் பறிக்கும் செயல் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

“இந்த புதிய கல்வி வரைவானது பல விஷயங்களை முன்வைக்கிறது. ஆனால், எதன் அடிப்படையில் இந்த விஷயங்களை முன்வைக்கிறது என்பதற்கான அடிப்படைத் தரவுகள் ஏதும் இதில் இல்லை. இது இந்த அறிக்கையின் மிக முக்கியமான பலவீனம்” என்கிறார் வலதுசாரி சிந்தனையாளரும் எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரி.

“இதில் உள்ள பல அம்சங்கள் நம் கல்வி முறையை மேம்படுத்தக்கூடியவை என நான் நினைக்கிறேன். ஆனால், மற்றவர்களும் அதனை ஏற்கவேண்டுமானால் அதற்கான வாதங்களும் புள்ளிவிவரங்களும் தேவை. அப்படி ஏதும் இதில் இல்லை. எதிர்காலம் இப்படி இருக்க வேண்டுமென கூறும் ‘விஷன் டாக்குமென்ட்’ஐப் போல இந்த வரைவு இருக்கிறது” என்கிறார் அவர்.

நம்முடைய பள்ளிக் கல்வித் தரம் மோசமாக இருக்கும் நிலையில், அதனை மேம்படுத்தும் ஆலோசனைகள் இதில் இருக்கின்றன. இது நம் பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த சில கட்டாயங்களை இந்த வரைவு உருவாக்குகிறது. ஆனால், ஒருவர் ஏன் இதையெல்லாம் ஏற்க வேண்டுமென்றால், அந்தக் கேள்விக்கு இந்த வரைவு பதிலளிக்கவில்லை என்கிறார் பத்ரி சேஷாத்ரி.

ஆனால், பொதுக் கல்விக்கான மாநில மேடையின் பிரின்ஸ் கஜேந்திர பாபு இந்த வரைவு அறிக்கையைக் கடுமையாகச் சாடுகிறார்.

“அரசியல் சாஸனத்தின் 7வது பிரிவின்படி பல்கலைக்கழகங்களை உருவாக்குவது, நடத்துவது, கலைப்பது மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் வரும். அது தொடர்பாக இந்த வரைவு அறிக்கை எப்படி ஆலோசனைகளை முன்வைக்கிறது? மேலும், அடுத்த பத்தாண்டுகளில் கல்லூரிகளே பட்டம் வழங்கும் அளவுக்கு மேம்படுத்தலாம் என்கிறார்கள். இதற்கான நிதி எங்கிருந்துவரும்?” எனக் கேள்வி எழுப்புகிறார் அவர்.

மேலும் ஒத்திசைவு பட்டியலில் வரும் பள்ளிக் கல்வியில் பல கட்டுப்பாடுகளை, ஆலோசனைகளை இந்த வரைவு முன்வைக்கிறது. ஆனால், இதெல்லாம் மாநில அரசுகளுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டாமா என்கிறார் அவர்.

இந்தப் புதிய கல்வி வரைவில் இருப்பதிலேயே மிகப் பெரிய அபாயம், ‘ஆர்எஸ்ஏ’ எனப்படும் ராஷ்ட்ரீய சிக்ஷா ஆயோக்தான் என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன். “இது ஒரு சர்வாதிகார அமைப்பாக இருக்கப்போகிறது. சென்னைப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவ்வளவு அனுபவம் வாய்ந்த கல்வி அமைப்பு அது. ஆனால், அங்கு ஒரு பாடத்திட்டத்தைத் துவங்க இந்த ஆர்எஸ்ஏவிடம் போய் நிற்க வேண்டுமென்றால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும்?” எனக் கேள்வியெழுப்புகிறார் ராஜகோபாலன்.

மேலும், மூன்று வயதே நிரம்பிய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பச் சொல்வதை ராஜகோபாலன் கேள்வியெழுப்புகிறார். “வெளிநாடுகளில்கூட இந்த வயதுக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அங்கு அவர்களுக்கு விளையாட்டு வகுப்புகள்தான் இருக்கும். பாடம் இருக்காது. இங்கு பாடங்களைச் சொல்லித்தருவதாக சொல்கிறார்கள். இந்த வயதில் பொம்மைகள் மிக முக்கியமானவை. அதைப் பற்றி ஏதாவது இந்த வரைவு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறதா?” என்கிறார் ராஜகோபாலன்.

இந்தியா முழுமைக்கும் பள்ளிக்கூடங்களுக்கான பாடப் புத்தகங்களை என்சிஈஆர்டிதான் உருவாக்குமென்றால் மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் திறமையே அற்றுப்போய்விடும். பாடப் புத்தகங்களை எழுதும் திறன் வாய்ந்த ஆசிரியர்களை வெறும் மொழிபெயர்ப்பாளர்களாக இது மாற்றிவிடும் என்கிறார் அவர்.

இந்த புதிய கல்விக் கொள்கையிலேயே மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது பிரிவு மொழிக் கொள்கை குறித்த பிரிவுதான். இந்தியா முழுமைக்கும் மும்மொழிக் கொள்கையை இந்த வரைவு முன்வைத்தது. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம், தாய்மொழி ஆகியவற்றோடு, இந்தி மூன்றாவது மொழியாக இருக்குமென்றும் இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம், இந்தி ஆகியவை தவிர, ஏதாவது ஒரு பிராந்திய மொழி மூன்றாவது மொழியாக இருக்குமென்றும் கூறப்பட்டது.

ஆனால், இந்தக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால், எல்லா மாநிலங்களிலும் மூன்றாவதாக ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் என மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனால், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுக்கும் எந்த மாநிலத்திலும் ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள்; முடிவில் இந்தியே அந்த இடத்தைப் பிடிக்கும் என்ற அச்சம் தமிழ்நாட்டில் நீடிக்கிறது.

தவிர, இந்த புதிய கல்வி வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள பல அம்சங்கள் தெளிவாகவும் தர்க்கத்திற்குப் பொருந்தாத வகையிலும் இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக, பக்கம் 206ல் மிகப் பெரிய பல்துறை பல்கலைக்கழகங்களை உருவாக்குவதை இந்த வரைவு முன்வைக்கிறது.

அதன் பயன்களைப் பற்றிப் பேசும்போது, இது மாணவர்களின் மூளையின் இரு பக்கங்களையும் செயல்படச் செய்யும் எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது, அறிவியல், கணிதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பகுதியையும் கற்பனை, கலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பகுதியையும் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவருவதை நோக்கமாக இந்தப் பகுதி குறிப்பிடுகிறது. இது மிக அபத்தமானது என்கிறார்கள் கல்வியாளர்கள். மிகப் பெரிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இது எப்படி சாத்தியமாகும் என்கிறார்கள் அவர்கள்.

மேலும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு செயல்பட்டதாகச் சொல்லப்படும் ‘நாளந்தா, தக்ஷசீலம் ஆகிய பல்கலைக்கழங்களைப் போல’ என குறிப்பிடுவதும் ஆய கலைகள் 64ஐயும் இந்தியக் கல்வி முறைக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் எனக் கூறுவதும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் பல அமைப்புகள் இந்த புதிய வரைவு குறித்த தங்கள் விமர்சனங்களை, இந்த ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் இது தொடர்பான அரங்கக் கூட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்தக் கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா விமர்சித்துப் பேசியபோது, அதனை மாநில அமைச்சர் கடம்பூர் ராஜு கண்டித்துப் பேசினார். இதைத் தவிர மாநில அரசு இந்த கல்விக் கொள்கை குறித்து விரிவான பார்வை எதையும் இதுவரை அளிக்கவில்லை.

நன்றி : பிபிசி தமிழ்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: