TN TRB Computer Instructor
கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த தயானா, சென்னையைச் சேர்ந்த குழந்தைவேல், ரோஹிணி, விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஞானவேல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.
அதில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அந்த அறிவிப்பாணையின் படி கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. குறிப்பாக இந்த தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. கேள்விகளும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டிருந்தன. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு என அறிவித்து விட்டு தேர்வை ஆங்கிலத்தில் நடத்தியது ஏற்புடையதல்ல.
மேலும் இந்த தேர்வு எந்த மொழியில் நடத்தப்படும் என்பது தொடர்பாக முறையாக அறிவிக்கவில்லை. எனவே இந்த தேர்வை ரத்து செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் திங்கள்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, முதுநிலை படிப்பு வரை கணினி தேர்வை தமிழில் நடத்த வாய்ப்புகள் இருந்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழில் தேர்வை நடத்தாமல் புறக்கணித்துள்ளது. இதனால் மனுதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாதிட்டார்.
அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் முனுசாமி, கணினி ஆசிரியர் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் உள்ளது.
இந்த சூழலில் மனுதாரர்கள் தேர்வை தமிழில் நடத்தவில்லை எனக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே இதுதொடர்பாக பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.