குரூப் 4 தேர்வு முறைகேட்டில் அரசு ஊழியருக்கு தொடர்பு?

TNPSC குரூப் 4 முறைகேடு

குரூப் 4 தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில், அரசு ஊழியர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, போலீசில் புகார் அளித்து விசாரணை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், அரசு பணிகளுக்காக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், வி.ஏ.ஓ., என்ற கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், வரி தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, குரூப் 4 தேர்வு, 2019 செப்டம்பரில் நடந்தது. இதன் முடிவுகள், நவம்பரில் வெளியாகின.
இதில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றனர். இதுகுறித்து, புகார் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய தேர்வு மையங்களுக்கு சென்று, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குரூப் 4 தேர்வில் முன்னிலை இடம்பெற்ற, 50க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு, ‘சம்மன்’ அனுப்பி, விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு ஆஜரான தேர்வர்களுக்கு, குரூப் 4 பாடத்திட்டத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய வினாத்தாளுடன் மாதிரி தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வின் விடைத்தாள்களுடன், தேர்வர்கள், ஏற்கனவே எழுதிய, குரூப் 4 தேர்வு விடைகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு உள்பட, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட போட்டி தேர்வுகளில், சில இடைத்தரகர்கள் செயல்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மீது, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில், சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர், சென்னையில் அரசு துறையில் பணியாற்றுவதாகவும், சில பயிற்சி மையங்களுடன் தொடர்பில் இருந்து, வேலை வாங்கி தர உதவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையா என, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது. இதுகுறித்து, போலீசில் விரைவில் புகார் அளிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-4 பணிக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியான நிலையில் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.

அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 40 பேர் முதல் 100 இடங்களில் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அதிலும் இந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

தேர்வு தொடர்பான ஆவணங்களை சரிபார்ப்பு, தேர்வானவர்களிடம் விசாரணை என்று டி.என்.பிஎஸ்.சி. இருக்கும் நிலையில் இந்த மோசடியின் முக்கியமான பின்னணி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரிக்கு தெரியவந்துள்ளது.

நடந்து முடிந்த குருப்-4 தேர்வு முடிவில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தேர்வாளர்கள் முதல் நூறு இடங்களைப் பிடித்து தேர்வு பெற்றுள்ளனர்.

இந்த தேர்வு முறைகேடாக நடந்துள்ளது. கடுமையான பயிற்சி எடுத்து தேர்வு எழுதியவர்கள் கூட 70 மதிப்பெண் எடுக்க முடியவில்லை. ஆனால், மிக சாதாரணமாக ராமேஸ்வரம், கீழக்கரை போன்ற இடங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பது முதல் நூறு மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற பெரிய கண்ணனூர் பகுதியை சேர்ந்த நாற்பதுக்கும் அதிகமான தேர்வாளர்களை நேற்று சென்னைக்கு வருமாறு டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். “எப்படி உங்களுக்கு தொடர்பே இல்லாத ராமேஸ்வரம் சென்டரை தேர்வு செய்தீர்கள்…?” என்று அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

அதில், முப்பதுக்கும் அதிகமானவர்கள் “எங்க தாத்தா, பாட்டிக்கு திதி குடுக்க போகவேண்டியிருந்தது. அதனால் தான் ராமேஸ்வரத்துக்கு போனோம். அங்கேயே தேர்வு எழுதிட்டு, பின்னாலே திதி குடுத்துட்டு ஊருக்குத் திரும்பி வந்தோம்.” என்று அச்சு பிசகாமல் பதில் சொல்லியுள்ளனர். இந்த பதில்தான் விசாரணையை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

இதுகுறித்து பெரிய கண்ணனூர் பகுதியில் தேர்வு எழுதியும் தோல்வி தழுவிய சிலரிடம் விசாரிதோம்.

“இப்போது நடந்துள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளுக்கு மூலகாரணமாக இருந்தவர் ஒரு போலீஸ்காரர். இவருடைய சொந்த ஊர் பெரியகண்ணனூர். இவருடைய அப்பா ஆளும் கட்சியை சேர்ந்தவர். முன்பு காவல் துறை உயர் அதிகாரியாக இருந்து பின்னர் டி.என்.பி.எஸ்.சி-யில் பொறுப்புக்கு வந்த ஒரு அதிகாரிக்கு இவர் கார் ஓட்டியுள்ளார். அதன் பின்னர், சில காலம் வருவாய் துறை அமைச்சருக்கும் இந்த போலீஸ்காரர் கார் ஓட்டியுள்ளார்.

இப்போது, நீதிபதி ஒருவருக்கு கன் மேனாகவும் கார் ஓட்டுனராக இருக்கிறார். இவர் டி.என்.பி.எஸ்.சி தலைவருக்கு கார் ஓட்டிய நேரத்திலேயே தலைவருடன் சேர்ந்து பல குறுக்கு வேலைகளை செய்து பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். இதன் மூலம், டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். அதன் பின்னர் அமைச்சருக்கு கார் ஓட்டியபோதும் ஆளும் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆட்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு டி.என்.பி.எஸ்.சி மூலமாக வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இப்போது, சிவகங்கை மாவட்டம், பெரிய கண்ணனூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த 207, பேரிடம் தலா ஆறு லட்சம் வீதம் பணம் வாங்கிக்கொண்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கூடுதல் மதிப்பெண் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். ஏற்கனவே குரூப்-1, குரூப்-2 தேர்வுகளிலும் பலருக்கு பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் வெற்றிபெற வைத்துள்ளார். இப்படி பணம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் பெரும்பாலும் அதிமுகவினர். அல்லது அதிமுக பிரமுகர்கள் மூலமாக இந்தப் போலீசாரிடம் பணம் கொடுத்தவர்கள் தான்.

முறையாகப் படித்து தேர்வு எழுதிய நாங்கள் எல்லோருமே ஒரு மதிப்பெண். ஒன்னரை மதிப்பெண் குறைவாக வாங்கி வேலை வாய்ப்பை இழந்துள்ளோம்” என்கிறார்கள்.

இந்த போலீஸ்காரருக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைமையகத்தில் இருக்கும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாம்ல இவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்காது என்பதால் இந்த கோணத்தில் விசாரணை போகுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. எனவே இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: