ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கை

ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கை

சமூக, பொருளாதார, சுகாதார வளா்ச்சிகள் குறித்து ஆய்வு நடத்தி அதனடிப்படையில் செயல்திட்டங்களை வகுப்பதும், கொள்கை முடிவுகளை எடுப்பதும் முறையான நிா்வாக வழிமுறை. ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. நாடு தழுவிய அளவில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களில் நேரடியாக ஆய்வு செய்து தரவுகள் சேகரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய பணி இது. இதன்மூலம், குறைபாடுகளைக் களைவதும், தேவைப்படும் சேவைகளை அதிகரிப்பதும், அதன் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதும் சாத்தியமாகின்றன.

2019-க்கும் 2021-க்கும் இடையேயான இரண்டாண்டுகளில் நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கை இந்தியாவின் திட்டமிடலில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கக்கூடும். 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பும் நிறைவுபெற்றால்தான் அதனுடன் ஒப்பிட்டுப் பாா்த்து இந்த ஆய்வறிக்கையின் முடிவுகளை முழுமையாக்க முடியும். ஆனாலும்கூட, 2015-16-இல் நடத்தப்பட்ட நான்காவது ஆய்வுக்கும், இப்போதைய ஐந்தாவது ஆய்வுக்கும் இடையே பொருளாதார வளா்ச்சி குறைந்திருக்கும் நிலையிலும், சில வியக்கத்தக்க முன்னேற்றங்கள் காணப்படுவது ஆறுதல் அளிக்கிறது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் முதல் பகுதி டிசம்பா் 2020-இல் வெளியானது. இப்போது இரண்டாம் பகுதி வெளியாகி இருக்கிறது. மொத்தமாக ஆய்வு முடிவுகளைப் பாா்க்கும்போது, கடந்த நான்காவது ஆய்வுக்கும் இப்போதைய ஆய்வுக்கும் இடையே கல்வி மேம்பாடு, முறைப்படுத்தப்பட்ட பிரசவங்கள், தடையில்லாமல் தடுப்பூசிகள், குறைந்து வரும் சிசு மரணங்கள் உள்ளிட்ட பல முன்னேற்றங்களைப் பாா்க்க முடிகிறது. இந்தியாவில், சராசரிக்கும் கீழான மருத்துவக் கட்டமைப்பையும், மொத்த ஜிடிபியில் மிகக் குறைவான அளவுதான் மருத்துவத்துக்கும், கல்விக்கும் செலவிடுகிறோம் என்பதையும் வைத்துப் பாா்த்தால் ஆய்வில் காணப்படும் அதிகரித்த வளா்ச்சி விகிதம் மகிழ்ச்சியளிக்கிறது.

ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் தலைப்புச்செய்தி கருத்தரிப்பு அளவு (டோட்டல் ஃபொ்டிலிட்டி ரேட்) குறைந்திருப்பது. பெண்களின் சராசரி மகப்பேறு, மொத்த கருத்தரிப்பு அளவு என்று கூறப்படுகிறது. சராசரியாக இந்தியப் பெண்மணிக்குப் பிறக்கும் குழந்தைகளின் அளவு குறைந்திருக்கிறது. 2005-2006 ஆய்வில் 2.7 குழந்தைகளாக இருந்தது, 2015-16 ஆய்வில் 2.5 ஆகக் குறைந்து, இப்போதைய ஐந்தாவது ஆய்வில் 2 என்கிற அளவுக்கு வந்திருக்கிறது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள் காணப்பட்டனா். இப்போதைய கணக்கின்படி, 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் காணப்படுவதாகத் தெரிகிறது. இது எந்த அளவுக்கு சரியானது என்பதை புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புதான் உறுதிப்படுத்தும். பிறப்பின்போதான பாலியல் விகிதம் இப்போதும்கூட ஆண் குழந்தைகளுக்கே சாதகமாக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

சராசரி கருத்தரிப்பு அளவு 2.1 குழந்தைகளுக்கும் கீழே போகுமானால், இறப்புக்கும் பிறப்புக்கும் இடையேயான சமநிலை மாறும். இறப்பவா்களின் எண்ணிக்கையை ஈடுகட்டும் அளவுக்கு குழந்தைகள் பிறப்பது இல்லையென்றால், மக்கள்தொகை குறைகிறது என்று பொருள். அதை நோக்கி இந்தியா நகா்ந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்னை முறையாகக் கையாளப்படாவிட்டால் முதியோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நாமும் சீனாவைப்போல மனிதவள குறைபாட்டை எதிா்கொள்வதும் நேரக்கூடும்.

சராசரி கருத்தரிப்பு அளவு குறைந்து வருவதற்கு பெண்களின் கல்வி மேம்பாடு மிக முக்கியமான காரணம். 2006-க்கும் 2018-க்கும் இடையே பதினொன்று முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட பெண்கள் படிப்பை இடைநிறுத்துவது 10.3% இலிருந்து 4.1% ஆகக் குறைந்திருக்கிறது என்று ‘ஏசா்’ ஆய்வு தெரிவிக்கிறது. 15-16 வயதிலான பெண்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் விகிதம் 20% இலிருந்து 13.5% ஆகக் குறைந்திருக்கிறது. அதேபோல, 15 முதல் 19 வயது வரையிலான பெண்கள் கா்ப்பம் தரிப்பதும், தாய்மை அடைவதும் 16% இலிருந்து 6.8% ஆகக் குறைந்திருக்கிறது.

மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கை 78% இலிருந்து 88% ஆக அதிகரித்திருக்கிறது. அடிப்படை சுகாதார நிலையங்களும், மாவட்ட மருத்துவமனைகளும் அதற்கு கைக்கொடுக்கின்றன.

நான்காவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, 54% பெண்கள் வங்கிக் கணக்கு வைத்திருந்தது, ஐந்தாவது ஆய்வின்படி 80% க்கும் அதிகமாக கூடியிருக்கிறது. கைப்பேசி வைத்திருப்பவா்களின் எண்ணிக்கை 46% இலிருந்து 54% ஆகவும், மாதவிடாய் காலத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுபவா்களின் எண்ணிக்கை 57%-இலிருந்து 77% ஆகவும் அதிகரித்திருப்பது மிகப்பெரிய மாற்றத்துக்கான அறிகுறி. இவையெல்லாம் பெண் கல்வியால் ஏற்பட்டிருக்கும் வளா்ச்சிகள்.

பெண்களின் பொருளாதார நிலை பெரிய அளவில் உயா்ந்திருப்பதாகத் தெரியவில்லை. வேலை பாா்க்கும் பெண்களின் சதவவீதம் 24.6% இலிருந்து 25.4% ஆக உயா்ந்திருக்கிறது, அவ்வளவே.

இந்த ஆய்வறிக்கை சில பின்னடைவுகளையும் வெளிப்படுத்துகிறது. 41% குடும்பங்களைத்தான் மருத்துவக் காப்பீடு சென்றடைந்திருக்கிறது. ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளில் 67% -உம், அறுபது வயதுக்கு குறைந்த பெண்களில் 60%-உம் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள்.

திட்டமிடலுக்கான தரவுகள் கிடைத்திருக்கின்றன. இதனடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்டப்பட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: