புகழ்பெற்ற இந்தியர்கள்

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவுசெய்ய உள்ளது. இந்த 75 ஆண்டுகளில் உலக அளவில் பல இந்தியர்கள் புகழ்பெற்றிருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம்.

முதல் பெண்மணி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட், நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்ததன் மூலம் இந்தியப் பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல நாடுகளுக்கு இந்தியாவின் தூதராக விஜயலட்சுமி இருந்தார்.

உச்சபட்சமாக 1953இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் பெண் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் விஜயலட்சுமி பண்டிட். மேலும், இந்தியா சார்பில் ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்திலும் பணியாற்றியவர்.

யுனெஸ்கோவில் தடம்

இந்தியர்கள் எழுத்தறிவு பெற வேண்டும் என்பதற்காகப் பெரும் முயற்சிகளை முன்னெடுத்தவர் மால்கம் ஆதிசேஷய்யா. கல்வியாளர், பொருளாதார நிபுணர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல முகங்களைக் கொண்ட அவர், யுனெஸ்கோவின் துணைப் பொது இயக்குநராகவும் இருந்த தமிழர்.

ஜெனிவாவில் உள்ள உலகப் பல்கலைக்கழக சேவையில் (1946-48) சேர்ந்து துணைப் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய மால்கம் ஆதிசேஷய்யா, பின்னர் யுனெஸ்கோவில் (1948-70) நீண்ட காலம் பணியாற்றி புகழ்பெற்றவர்.

அன்னையின் சேவை

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் பிறந்தவர் என்றாலும், சமூக சேவையை இந்தியாவில் செய்த புனிதர் அன்னை தெரசா. 1929இல் முதன்முறையாக மேற்கு வங்கத்துக்கு வந்த அன்னை தெரசா, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஏழை மக்கள், பசியுடன் திரிந்த குழந்தைகள், நோயாளிகள் போன்றோருக்குச் சேவை செய்ய முடிவெடுத்தார்.

இறக்கும் வரை இந்தியாவிலேயே தங்கி மக்களுக்காகத் தொண்டு செய்தவர். இதன்மூலம் உலக அளவில் சிறந்த சமூக சேகவர் என்று பாராட்டப்பட்ட தெரசா, 1979இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். 1980இல் இந்தியாவின் பாரத ரத்னா, 2003இல் அருளாளர் பட்டம் என சர்வதேச அரங்கில் அவர் வாங்கிய விருதுகளும் கவுரவங்களும் கணக்கிடலங்காதவை.

இசையின் ஞானத் தந்தை

இசைக் கருவியான சிதாரை வாசிப்பதில் புலமைத்துவம் பெற்ற பண்டிட் ரவிசங்கர் உலகம் முழுக்க நடத்திய இசை நிகழ்ச்சிகள் மூலம் எல்லை தாண்டி விரிவடைந்தார். இவருடைய ‘வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்’ என்கிற இசை ஆல்பம் உலகப் புகழ்பெற்றது.

பத்ம பூஷண், பத்ம விபூஷண், மகசேசே, பாரத ரத்னா என விருதுகளைக் குவித்த இவர், கிராமி விருதையும் மூன்று முறை வென்றவர். ‘உலக இசையின் ஞானத் தந்தை’, ‘இந்தியப் பாரம்பரிய இசையின் தூதர்’ என்று போற்றப்படுபவர்.

ஆஸ்கர் நாயகன்

விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்துவந்த ஏ.ஆர்.ரஹ்மான், 1992இல் சினிமா இசையமைப்பாளர் என்கிற அவதாரம் எடுத்தார். தொடர்ச்சியாக ஃபிலிம் ஃபேர் விருதை வென்றவர். ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் இசை அமைத்ததற்காக திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்ற தமிழர்.

ஆஸ்கர் விருது மட்டுமல்லாமல் தேசிய விருது, கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகளையும் வென்றவர். இவருடைய ‘வந்தே மாதரம்’ தொடங்கிப் பல பாடல்கள் உலக அளவில் புகழ்பெற்றவை.

சென்னை டூ அமெரிக்கா

அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்குத் தலைமைப் பொறுப்பை இந்தியர்களால் ஏற்க முடியும் என்று உணர்த்திய பெண்மணி இந்திரா நூயி. சென்னையைச் சேர்ந்த இவர், கொல்கத்தா ஐஐஎம், யேல் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் படிப்பை முடித்தவர்.

1994ஆம் ஆண்டில் குளிர்பான நிறுவனமான பெப்சிகோவில் இணைந்து 24 ஆண்டுகள் பணியாற்றியவர். அதில் 12 ஆண்டுகள் பெப்சிகோவின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்ததன் மூலம் இந்தியர்களின் திறமையை உலகம் அறியச் செய்தவர்.

கூகுள் ஆண்டவர்

மாதா, பிதா, கூகுள் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் கூகுள் பிரபலம். அத்தகைய புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கிறார்.

மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்த சுந்தர் பிச்சை, கரக்பூர் ஐஐடியிலும் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் படித்தவர். 2004இல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். கூகுள் குரோம், ஆண்ட்ராய்டு, கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப், யூடியூப் போன்ற ஆக்கங்களில் சுந்தர் பிச்சைக்குப் பெரும்பங்கு உண்டு.

2015இல் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான அவர், அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு, உலக அளவில் புகழ்பெற்றிருக்கிறார்.

மைக்ரோசாப்ட்டில் இந்தியர்

கணினிச் சந்தையில் மைக்ரோசாப்ட்டின் வீச்சு உலகமே அறிந்ததுதான். உலகப் புகழ்பெற்ற அந்த நிறுவனத்தில் இந்தியர் ஒருவரும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர்தான்.

அவர், தெலங்கானாவைச் சேர்ந்த சத்ய நாதெள்ளா. 1992ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்த இவர், தொடர்ந்து அதே நிறுவனத்தில் பணியாற்றி 2007இல் ஆன்லைன் சேவை மூத்த துணைத் தலைவர், 2011இல் கிளவுட் எண்டர்பிரைசஸ் குழும மூத்த துணைத் தலைவர் என உயர்ந்தார்.

2014இல் மைக்ரோசாப்டின் மூன்றாவது தலைமை செயல் அதிகாரியாக உருவெடுத்தார் சத்ய நாதெள்ளா.

ஹாலிவுட்டில் இந்தியர்

ஹாலிவுட் தரத்தில் இந்தியப் படம் எடுக்க வேண்டும் என்று பேசுவோர் மத்தியில் ஹாலிவுட்டிலேயே இந்தியர் ஒருவர் படங்களை இயக்கி வருவது பலருக்கும் வியப்பாக இருக்கும்.

தமிழ் அம்மாவுக்கும் மலையாளி அப்பாவுக்கு மாஹேயில் பிறந்த மனோஜ் என். சியாமளன், சிறுவயதிலேயே அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். 22 வயதிலேயே ஹாலிவுட்டில் சினிமா இயக்குநராக உருவெடுத்த மனோஜ், ‘தி சிக்ஸ்த் சென்ஸ்’, ‘லேடி இன் தி வாட்டர்’ உள்பட புகழ்பெற்ற பல படங்களை இயக்கியவர்.

டிவிட்டர் பராக்

இன்று பெரும்பாலான இந்தியர்கள் காலையில் கண் விழிப்பதே சமூக ஊடகங்களில்தான். அப்படிப்பட்ட சமூக ஊடகங்களில் ஒன்றான டிவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால். டிவிட்டரில் 2011இல் இணைந்த பராக் அவர்வால், 2018இல் அந்நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார்.

பின்னர் 2021இல் பராக் அகர்வால், டிவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். உலக அளவில் கோலோச்சும் டிவிட்டரில் இந்தியர் ஒருவர் உயரிய பொறுப்பில் இருப்பது நாட்டுக்கும் கிடைத்த பெருமைதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: