இந்திய  விடுதலைப்போரில் தமிழகம்

இந்திய  விடுதலைப்போரில் தமிழகம்

சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
சென்னை- குடியரசு தின  அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற  மூன்று அலங்கார ஊர்திகளை கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய  மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து
தொடங்கி வைத்தார்.

புதுடெல்லியில் இன்று (26.1.2022) நடைபெற்ற குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், ஒன்றிய அரசின் துறைகள் சார்பாகவும் “இந்தியா 75” என்கின்ற தலைப்பில்  நடைபெற்ற  அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இந்த ஆண்டு  விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை பறைசாற்றுகின்ற வகையில் அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் ஒன்றிய அரசின்  தேர்வுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு மூன்று முறை அவர்கள் எடுத்துரைத்த திருத்தங்களை மேற்கொண்டும் எந்தவித காரணமுமின்றி தமிழகத்தின் சார்பிலான அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வருத்தத்தினை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

மேலும், புதுடெல்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம் பெறுவதோடு, தமிழ்நாடு முழுதும் காட்சிப்படுத்தப்படும் என்று கடந்த 18.1.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்.

அந்த வகையில், சென்னையில் இன்று (26.1.2022)   நடைபெற்ற குடியரசு தின விழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின்  பங்களிப்பினை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மூன்று அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணி வகுப்பில் பங்கேற்று பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.01.2021) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அம்மூன்று அலங்கார ஊர்திகளையும் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்படுத்தும் பொருட்டு, கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அலங்கார ஊர்திகளை வரவேற்று, பொதுமக்கள் பெருந்திரளாக பார்வையிட்டு பயன்பெறுகின்ற வகையில் நகரின் முக்கியப் பகுதிகளில் இவ்வூர்திகள் காட்சிப்படுத்தப்படும்.

 

முதல் அலங்கார ஊர்தி

 

இந்த ஊர்தியின் முகப்பில் தமிழகத்தில் வேலூர் கோட்டையில்  1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார், வீரமங்கை வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கினைத் அழித்து தன்னுயிரைத் தியாகம் செய்த வீராங்கனை குயிலி. பரங்கியரின் ஆதிக்கத்திற்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்ததோடு,  ஆங்கிலேயர்களின் ஆட்சியினை எதிர்த்து முதன்முதலில் தீரமாய்ப் போரிட்டுத் தூக்கு கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், அன்னியப் படைகளை தனியாகச் சென்று அழித்த நெற்கட்டும் செவல் பிறப்பிடமாகக் கொண்ட ஒண்டிவீரன், இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக வீர முழக்கமிட்ட நெற்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டுவதைத் தடுத்த  கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகு முத்துக்கோன், வெள்ளையர்களை எதிர்த்து தீரமாய்ப் போரிட்டு, தூக்கிலிடப்பட்ட, மாவீரர்கள் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார் கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிருடன்  காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியானது மதுரை மாநகர் வண்டியூர் தெப்பக்குளம் அருகில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

 

இரண்டாவது  அலங்கார ஊர்தி

இந்த  ஊர்தியில்,  ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தனது புரட்சிகரக் கவிதைகளால் விடுதலை வேள்விக்கு வித்திட்டவரும் சுதந்திரத்திற்காக மட்டுமின்றி சமத்துவம், சமூக விழிப்புணர்வு மற்றும் பெண் விடுதலைக்காக போராடிய பெரும்புலவன் மகாகவி பாரதியார், ஆங்கிலேயரின் கப்பல் வணிகத்திற்குப்  போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவரும்,  எஸ்.எஸ். காலியோ எனும் பிரெஞ்சுக் கப்பலை வாங்கியதால், தேசத் துரோகியாகக் குற்றம்சாட்டப்பட்டு, இரட்டை தீவாந்திர தண்டனை பெற்றவரும், “செக்கிழுத்தச் செம்மல்”  வ.உ. சிதம்பரனார்,   விடுதலைக்காகப் போராடியவரும், “ஞானபானு” மற்றும் “பிரபஞ்ச மித்திரன்” என்ற பத்திரிகைகளைத் தொடங்கி, தேசத் தலைவர்களின் அரிய தொண்டினை வெளியிட்டு தமிழகத்தில் விடுதலைத் தாகத்திற்கு வித்திட்ட  தியாகி சுப்பிரமணிய சிவா, சுதந்திரப் போராட்டத்திற்காக போராடியவரும், சமூக சீர்திருத்தவாதியுமான சேலம் விஜயராகவாச்சாரி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்தி கோவை  மாநகர் வ.உ.சிதம்பரனார் பூங்கா அருகில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

மூன்றாவது  அலங்கார ஊர்தி

இந்த  ஊர்தியில், சத்தியாக்கிரக அறப்போராட்டம் நடத்தியவரும், சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும் தீண்டாமையை வேரறுக்க அரும் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒத்துழையாமை இயக்கம், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட மூதறிஞர் இராஜாஜி, தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் முழங்கிய  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,  ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற்றிட எந்நாளும் உழைத்திட்ட கர்மவீரர் காமராஜர், சமூக சீர்திருத்தச் செயல்பாட்டாளர் ரெட்டைமலை சீனிவாசன், கலெக்டர் ஆஷ் துரையை கொன்று தன்னுயிரை மாய்த்துக் கொண்ட வீரன் வாஞ்சிநாதன், அன்னியர்களை வீரமுடன் எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை,  கொடிகாத்த  திருப்பூர் குமரன், விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும் சிறந்த இலக்கியவாதியுமான  திருச்சிராப்பள்ளி வ.வே.சு. ஐயர், அனைவராலும் போற்றப்பட்ட கண்ணியமிகு காயிதேமில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரப் பேராசிரியராகவும் சிறைத்தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா,  தியாகச் சீலர் கக்கன் ஆகியோரின் புகழினை வெளிப்படுத்துகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading