CBI அதிகாரி ஆவது எப்படி?

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளை சிபிஐ (Central Bureau of Investigation) அமைப்பின் புலனாய்வு அதிகாரிகள் கையாளுவதை செய்தியாக நீங்கள் வாசித்திருக்கலாம்.

அதன் மூலம் உங்களுக்குள் சிபிஐ அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை வேர் விட்டிருக்கலாம். எப்படி சிபிஐ அதிகாரியாவது? என்ன படிக்க வேண்டும்? பார்ப்போம்.

சிபிஐ போல தேசிய அளவில் பல புலனாய்வு அமைப்புகள் இந்தியாவில் உள்ளன. ஐபி (Intelligence Bureau -IB), ‘ரா’ (Research and Analysis Wing-RAW), என்ஐஏ (National Investigation Agency-NIA) போன்ற அமைப்புகளில் புலனாய்வு நிபுணராகச் சேர்ந்து தேசப் பணியாற்றலாம்.

சிபிஐ-யின் பணி?

ஏன் பல புலனாய்வு அமைப்புகள் இந்தியாவில் உள்ளன? புலனாய்வு அமைப்பு ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட நோக்கங்கள் உண்டு. ஊழல், பொருளாதாரக் குற்றங்கள், பல மாநிலங்களை உள்ளடக்கிய குற்றங்கள், மத்திய அரசின் சட்டங்களை மீறுகிற செயல்கள் உள்ளிட்ட வழக்குகளை சிபிஐ புலனாய்வு செய்கிறது.

இன்டர்போல் (INTERPOL) என்ற சர்வதேச போலீஸ் அமைப்பில் சிபிஐ தான் இந்தியாவின் சார்பில் அங்கம் வகிக்கிறது.

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவு தொடர்புடைய புலனாய்வுப் பணிகளில் ஐபி அமைப்பும், அயல்நாட்டு நுண்ணறிவு தொடர்புடைய பணிகளில் ‘ரா’ அமைப்பும், தீவிரவாதம் தொடர்புடைய குற்றப்புலனாய்வில் என்ஐஏ அமைப்பும் ஈடுபட்டிருக்கின்றன.

என்ன படிக்க வேண்டும்?

சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளில் எப்படி பணியில் சேருவது, என்ன படிக்க வேண்டும் போன்றவற்றை இனி காண்போம். மத்திய புலனாய்வு அமைப்பு சார்ந்த பணியில் சேர மூன்று நிலைகள் உள்ளன.

1. ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றலாம். ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றி பெற்றால் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம். இத்தேர்வை எழுத ஏதாவது ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

2. உதவி ஆய்வாளராக பதவியில் சேரலாம். இதற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். பின்பு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வில் (Combined Graduate Level Exam) வெற்றி பெற வேண்டும். இதில் உடல்தகுதித் தேர்வும் உண்டு. இந்த தேர்வு குறித்த மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

3. காவலராக பணியில் சேரலாம். மாநிலஅல்லது மத்திய அரசின் காவல்துறைகளில் ஏற்கெனவே காவலராக பணியாற்றுபவர்கள் அயல்பணியாக (Deputation) மத்திய புலனாய்வுத்துறைகளில் சேர்ந்து பணியாற்றலாம். மாநிலக் காவல்துறையில் காவலராக பணியில் சேர, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதும் உடல் தகுதியும் அவசியம் என்பதை நினைவில் கொள்க.

இவை தவிர மத்திய புலனாய்வு அமைப்புகளில் பணியாற்ற, அனுபவமுள்ள காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், இந்திய வருவாய்த்துறை அதிகாரிகள் (ஐஆர்எஸ்), வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தேவைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும்.

மொழிப்பாடங்கள், அறிவியல், மின்னணு பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைசார் வல்லுனர்களுக்கும் தேசிய புலனாய்வு அமைப்புகளில் பணியாற்ற அவ்வப்போது வாய்ப்புகள் ஏற்படும்.

புத்திக்கூர்மையும் உடலுறுதியும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் புலனாய்வு அதிகாரிகளாக ஜொலிப்பது நிச்சயம். அறிவை பெருக்கும் படிப்பிலும் உடலை வலிமைப்படுத்தும் விளையாட்டுகளிலும் சமமாக கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் புலனாய்வு அதிகாரியாக சிறக்க தயாராகுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: