குரூப் 4 தேர்வு முறைகேடு – புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு எனத் தகவல்

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வெழுதிய தேர்வர்கள் மீது காவல்துறையில் புகாரளித்து, அவர்களை போலீஸ் விசாரணைக்கு உள்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் – 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் 16,29,865 பேர் தேர்வு எழுதினர்.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பதவிகளுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில், தேர்வில் வெற்றியடைந்தவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல தேர்வர்கள், இந்த இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகப் பிற தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.இந்தப் புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த 13-ம் தேதி காலை தொடங்கிய விசாரணை மறுநாள் வரை நீடித்தது. அந்த இரு மையங்களில் தேர்வெழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான தேர்வர்கள் ஒரே மாதிரியான பதிலைத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பந்தமே இல்லாமல் எதற்காக அந்தத் தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’ என அவர்களிடம் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க சென்றதாகவும், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றதாகவும் அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளனர். தேர்வர்கள் ஒரே மாதிரி அளித்த பதிலால் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரு மையங்களில் தேர்வெழுதியவர்கள் மீது போலீசில் புகாரளித்து விசாரணைக்கு உள்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: