எழுத்தாளர் – ஐயா பிரபஞ்சன் பற்றிய சில தகவல்கள்

எழுத்தாளர் ஐயா பிரபஞ்சன் 

சாகித்ய அகாதெமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர் பிரபஞ்சன் நேற்று காலை (வெள்ளிக்கிழமை) காலமானார். அவரின் வயது 73.

அவரை பற்றிய சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு :

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1945ஆம் ஆண்டு பிறந்த பிரபஞ்சன் அவர்களின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம்.

1995ஆம் ஆண்டு பிரபஞ்சனின் வரலாற்றுப் புதினமான ‘வானம் வசப்படும்’ என்ற புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’, ‘இன்பக் கேணி’, ‘நேசம் மறப்பதில்லை’ என மொத்தம் நான்கு வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார்

விருதுகள்
சாகித்திய அகாதமி விருது – வானம் வசப்படும் (1995)
பாரதிய பாஷா பரிஷத் விருது
கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது – மகாநதி
இலக்கியச் சிந்தனை விருது – மானுடம் வெல்லும்
சி. பா. ஆதித்தனார் விருது – சந்தியா
நேற்று மனிதர்கள் -தமிழக அரசின் பரிசு
ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு

எழுதிய நூல்கள்

புதினங்கள்

வானம் வசப்படும்
மகாநதி
மானுடம் வெல்லும்
சந்தியா
காகித மனிதர்கள்
கண்ணீரால் காப்போம்
பெண்மை வெல்க
பதவி
ஏரோடு தமிழர் உயிரோடு
அப்பாவின் வேஷ்டி
முதல் மழை துளி

குறு நாவல்கள்

ஆண்களும் பெண்களும்
சிறுகதைத் தொகுப்புகள்
நேற்று மனிதர்கள்
விட்டு விடுதலையாகி
இருட்டு வாசல்
ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்

நாடகங்கள்

முட்டை
அகல்யா

கட்டுரைகள்

மயிலிறகு குட்டி போட்டது
அப்பாவின் வேஷ்டி

” ‘சாரங்கபாணி வைத்தியநாதன்’, ஏன் ‘பிரபஞ்சன்’ ஆனார்?”

”என் அப்பா – அம்மாவுக்கு வைத்தீஸ்வரர் கோயில் இறைவன் மீது நம்பிக்கை. நீண்ட காலம் குழந்தை இல்லாமல் இருந்தவர்கள், வைத்தீஸ்வரர் கோயிலுக்கு வேண்டிக்கொண்டார்களாம். நான் பிறந்தேன். ஆகவேதான் வைத்திலிங்கம் ஆனேன். (இது புனைவு இல்லை. அந்தக் காலப் பழக்கம்தான்!)

கோவையை மையமாகக்கொண்டு 60-களில் ‘வானம்பாடி’ கவிதை இயக்கம் தோன்றியது. சிற்பி, புவியரசு, கோவை ஞானி, அக்னிபுத்திரன்… முதலானோர் இதன் போஷகர்கள். வானம்பாடிகள், அப்போது பரவலாகப் பேசப்பட்ட தெலுங்குப் புரட்சிக் கவிகளை (திகம்பர கவிகள்) முன் வைத்து, சாதி, மதம் தெரியாத புனைப்பெயர்களைப் பூண்டார்கள். பாலசுப்ரமணியம் ‘சிற்பி’ ஆனார். ஜெகன்நாதன் ‘புவியரசு’, முகமது மேத்தா ‘மு.மேத்தா’, அரங்கநாதன் ‘அக்னிபுத்திரன்’… என ஆனார்கள்.

எனக்கு வானம்பாடிகள், ‘பிரபஞ்ச கானன்’ என்று பெயர் சூட்டினார்கள். அது நீளமாக இருக்கிறது என்ற எண்ணத்தில், கதை எழுதும்போது ‘பிரபஞ்சன்’ என்றும், கவிதை எழுதும்போது ‘பிரபஞ்ச கவி’ என்றும் நான் என் பெயரை அமைத்துக்கொண்டேன்!”

ரா.மருதவாணன், திருக்காட்டுப்பள்ளி.

”உங்களின் பெரும்பாலான கதைகளில் நாயகியின் பெயர் சுமதி. இதற்கு எதுவும் சிறப்புக் காரணம் உண்டா?”

”கல்லூரி நாட்களில் என் தோழியாக, சினேகிதியாக இருந்தவர் சுமதி. எனக்கு பெண்-ஆண் மேன்மையைச் சொல்லிக் கொடுத்தவர். மேலும், நீண்ட பெயர் எழுதுவது சிரமம். சின்ன மூன்றெழுத்துச் சொல் சுமதி. தவிர, என் மத்திய தர, கீழ்மத்திய தரக் குடும்பச் சூழல் கதைகளுக்கு அந்தப் பெயர் பொருத்தமாக இருக்கிறது!”

முருகானந்தம், துவரங்குறிச்சி.

”நீங்கள் இப்போது ஏன் கவிதைகள் எழுதுவதில்லை?”

”நான் கவிதைகள் எழுதிய காலத்தில், இலக்கிய சகா ஒருவர், நான் விளாடிமிர் மாயகாவ்ஸ்கி (ரஷ்யக் கவிஞர்)போல எழுதுவதாகச் சொல்லிப் பாராட்டினார். நான் அதுவரை மாயகாவ்ஸ்கியைப் படித்திருக்கவில்லை. பிறகு படித்தேன். இரண்டு விஷயங்கள் தெரிந்தன. ஒன்று, நான் மாயகாவ்ஸ்கி இல்லை என்பது; என்னை மாயகாவ்ஸ்கி என்றவரும் மாயகாவ்ஸ்கி கவிதைகளைப் படித்தது இல்லை என்பது.

யாரும் விமர்சிக்காமலேயே நான் கவிதை எழுதுவதை நிறுத்திக்கொண்டேன். கவிதை எழுதி, தொண்டுசெய்வது ஒரு வகை; கவிதை எழுதாமல் இருப்பதே கவிதைக்குச் செய்யும் தொண்டு என்பது மற்றொரு வகை. நான் இரண்டாம் வகை!”

இளையராஜா, ஆலக்குடி.

”படைப்புகள் மற்றும் கட்டுரைகளில் திராவிட இயக்கத்தைச் சாதகமாகவும் அணுகியிருக்கிறீர்கள்; கடுமையாக விமர்சித்தும் இருக்கிறீர்கள். திராவிட இயக்கத்தின் இன்றைய நிலைகுறித்து..?”

”பெரியாரின் திராவிட இயக்கத்தைச் சாதகமாகவும், 1969,70-க்குப் பிறகான கலைஞர் கருணாநிதியின் திராவிட இயக்கத்தைக் கடுமையாகவும் விமர்சித்துக் கொண்டிருக்கிறேன். உண்மைதான். இரண்டும் ஒன்றல்ல. மஞ்சள், கறுப்பாக முடியாது. இல.கணேசன் சொல்வதுபோல, ‘ஆரியம் என்பது குணம்; திராவிடம் என்பது இடம்…’ என்பதை ஏற்க முடியாது. திராவிடம் என்பது, மொழி, இனம், நாடு முதலான உட்பகுதிகளைக்கொண்ட மனோபாவம் என்றேதான் கருதுகிறேன். பெரியாரின் திராவிடம் அதுதான். பெரியாரின் அனைத்துச் சிந்தனைகளையும், எழுத்து, பேச்சுக்களையும் தமிழர்களுக்கு சட்டச் சிக்கல் இல்லாமல் வழங்கும் வாய்ப்பு கலைஞருக்கு இருந்தது. அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார். பெரியார் என்கிற தமிழ் மழைக்கு காப்பிரைட் பிரச்னை வர முடியுமா? இந்த நாட்டில் அந்த விசித்திரம் நிகழ்ந்தது.

புட்டபர்த்தி சாய்பாபாவை வீட்டுக்கு அழைக்கிற திராவிடம், ‘தமிழை, ஆங்கிலவழிக் கல்வி காப்பாற்றும்’ என்ற திராவிடம், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் பெட்டிக்கடைகள் போல புற்றீசல்போல புறப்பட்டிருக்கும் சூழல்களை உருவாக்கித்தந்த திராவிடம், திராவிட மனோபாவம் இல்லை. தமிழக மீனவர்கள், ‘பேராசை கொண்டவர்கள்’ என்ற சொல்லை திராவிடம் தராது. ‘நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக’ என்பதல்ல திராவிடம். காங்கிரஸோடு கூட்டு வைப்பதல்ல திராவிடம். பி.ஜே.பி. ஒன்றும் ‘தீண்டத்தகாத கட்சி அல்ல’ என்று சொல்லி பதவிக்காக அலையாது திராவிடம். என்றால், ‘தீண்டத்தகுந்தது எது..? தகாதது எது..?’ என்று சொல்லுமா கலைஞர் திராவிடம்? கொத்துக்கொத்தாக தமிழர் கொல்லப்படுகையில், காலை உணவுக்கும் பகல் உணவுக்கும் இடைப்பட்ட ‘ஆச்சர்ய’ உண்ணாவிரதம் மேற்கொள்ளாது திராவிடம். காங்கிரஸுடன் உறவு இல்லை என்று சொல்லிவிட்டு, தன் குடும்பத்து உறுப்பினருக்காக எம்.பி. யாசகம் கேட்டு, மீண்டும் காங்கிரஸுடன் உறவுகொள்ளாது உண்மைத் திராவிடம்.

எனக்கு ஒன்றுதான் தோன்றுகிறது. தன் கடைசி வாய்ப்பை மட்டும் அல்ல, கடைசி ரயிலையும் விட்டுவிட்டார் கலைஞர். ஒருகட்டத்தில் இந்தியாவும் இந்திய அரசும் கலைஞரை எதிர்நோக்கி இருந்தன. இன்றோ, கலைஞர் தன் ஆட்சிக்கு காங்கிரஸை எதிர்நோக்கி இருக்கிறார்.

‘தன் குடும்பம், தன் பிள்ளை, தன் உடைமை’ என்பதல்ல திராவிடம்.பெரியாரியத்தை வளர்த்தெடுப்பதே சரியான திராவிடம். பெரியாரை விமர்சிப்பதை பெரியாரே விரும்புவார்!”

பழ.ராஜ்குமார், செல்லப்பன்பேட்டை.

”இன்றைய தமிழ்ச் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகள் என எவற்றைக் கருதுகிறீர்கள்?”

”கீரை விற்பதற்கும்கூட, பன்னாட்டு வியாபாரிகள் திருவல்லிக்கேணிக்கு வந்து கடை பரப்புகிறார்கள். விவசாயிகள், தற்கொலை செய்துகொள்ளும் சூழல் உருவாகிவிட்டது. விளைநிலங்கள், கடுமையான பூச்சி மருந்துகளால் நாசமாகிவிட்டன. தவிரவும் அவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சொந்தமாகிக் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் வாழ்வாதாரம் நாள்தோறும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. சாதிக் கலவரங்கள், தமிழனைச் சீரழிக்கின்றன. பள்ளிக்கூடம் சேர்வதற்கு மட்டுமல்ல, காதலுக்கும் சாதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது. சமூகத்தின் அடி ஆழத்தில் வைக்கப்பட்டிருக்கும் ‘அருந்ததியர்’களை, தாழ்த்தப்பட்டவர்களே பகைக்கிறார்கள். தமிழர்களின் சரியான வரலாறு தமிழர்களுக்கே தெரியவில்லை. தமிழும் தமிழர் வரலாறும் புதிதாக, காலம்காலமாக ஒடுக்கப்பட்டவர் பார்வையில் எழுதப்பட வேண்டும். அது இப்போது தமிழர்களுக்கான அதிஅவசியத் தேவை!”

மாதேஷ், கள்ளக்குறிச்சி.

”இணையத்தைப் பயன்படுத்துவீர்களா?”

”ஆசைதான். பல காரணங்களால் விலகி இருந்தேன். அதனால் உலகம் என்னை விலக்கி இருந்தது. இப்போது இணையதளத்துக்குள் பிரவேசித்து இருக்கிறேன்!”

நாகலட்சுமி, திருத்துறைப்பூண்டி.

”பெண் விடுதலை பேசி வருபவர் என்ற முறையில் இன்றைய சமகாலப் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?”

”பெண்கள் ஒருகாலத்தில் மாப்பிள்ளைகளுக்காகத் தயாரிக்கப்பட்டார்கள். ஆனால், இப்போது அவர்களிடம் படிப்பறிவு, கல்வி அறிவு மிகுந்து இருக்கிறது. இப்போதைய பெண்கள் சட்டென்று ஏதோ ஒரு கிளர்ச்சியில் காதலில் விழுவது இல்லை. நிறைய யோசிக்கிறார்கள். ஆண்கள் உடைக் கட்டுப்பாடு கொண்டுவரும்போது எதிர்க்கிறார்கள். இது வரவேற்கவேண்டிய விஷயம். பெண்களுக்கு ஒழுக்கம் சொல்பவர்கள், பெரும்பாலும் யோக்கியர்கள் இல்லை. புருஷன் என்பவன் ‘சகப்பயணி’ என்ற ஆரோக்கிய நிலை உருவாகி இருக்கிறது. இன்றைய பெண்கள் ‘தாலி மகிமை’ பற்றி பேசாதவர்களாக, அதே சமயம் அன்பை ஆதாரமாகக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் அரசியல்மயப்படுகிறார்கள். இது மிக நல்ல விஷயம். பெண்களின் உலகம், வீடு அல்ல; எல்லை, புருஷன் அல்ல; நோக்கம், குழந்தை பெறுவது அல்ல… என்ற புதிய ஞானம் தோன்றியிருக்கிறது!”

“தமிழ் இலக்கியத்தில் விமர்சனம் என்ற துறையே இன்று இல்லாமல் போய்விட்டதே?’’

“ஆமாம். இந்தத் தலைமுறையில் விமர்சகர்கள் உருவாகவே இல்லை. அப்படி விமர்சிக்கிறவர்களும் கோஷ்டி சார்ந்து விமர்சிக்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்தவர்களை நன்றாக எழுதுவதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். தமிழகத்தின் அரசியலைப்போல இருக்கிறது இலக்கியத் துறையும். தத்துவம் அற்றது நம் அரசியல். அறம் குறைந்தது நம் இலக்கியத் துறை. நன்றாக எழுதுபவரை, நன்றாக எழுதுகிறார் என்று சொல்லாதவர்கள் நம் நண்பர்கள்.’’

நன்றி: ஆனந்த விகடன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: