திருவள்ளுவர் விருது
Chief Minister has announced the recipients of Ayyan Thiruvalluvar Award for the year 2022 and Perunthalaivar Kamajar Award for the year 2021
2022ஆம் ஆண்டிற்கான “அய்யன் திருவள்ளுவர் விருது”
பெங்களுரில் வாழ்ந்துவரும் திரு. மு.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும்,
2021ஆம் ஆண்டிற்கான “பெருந்தலைவர் காமராசர் விருது’
சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கும் வழங்கிட
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணை
தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டுபுரிந்துவருபவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், 2009ஆம் ஆண்டு மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகவும் கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி, திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவரும் பெங்களுர் இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் பெங்களுரில் வசிக்கும் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த திரு. மு. மீனாட்சி சுந்தரம் (வயது 78) அவர்களுக்கு தமிழ்நாடு அரசு, 2022ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.
அதே போன்று, பெருந்தலைவர் காமராசர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகளை கேட்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றலும் மிக்கவராகவும், தமிழ் இலக்கியவாதியாகவும் சிறந்த நூல்களைப் படைத்தவரும் பன்முகத் திறன் கொண்ட சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தன் (வயது 88) அவர்களுக்கு தமிழ்நாடு அரசு, 2021ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஒரு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள்.
இவ்விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படவுள்ளது.