காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. ஒன்றரை லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்ற நிலையில், மதுரவாயல் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
அந்த இரு தேர்வு மையங்களிலும் சோதனை நடத்திய தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் பணிக்கான அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வுக்காக 5,275 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
அந்தப் பட்டியலில் வேலூர் மையத்தில் தேர்வு எழுதிய 100 பேர் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளதாகவும், எனவே முறைகேடு நடைபெற்றது உறுதியாகி விட்டதாகவும், சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், வேலூர் மாவட்டத்தில் 6,015 பேர் தேர்வு எழுதியதாகவும், அதில் 236 பேர் மட்டுமே அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளதாகவும் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.