இரட்டைமலை சீனிவாசன்

ரெட்டைமலை சீனிவாசன்

அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழியாளத்தில் பிறந்த இரட்டைமலை சீனிவாசன் பஞ்சம், சாதிக்கொடுமை ஆகிய காரணங்களால் சிறுவயதிலே தஞ்சைக்கு இடம்பெயர்ந்தார். திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்ற அவர், கோயம்பத்தூர் அரசுக் கல்லூரியில் இளங்கலை படிப்பைத் தொடங்கினார். வெளிப்படையாகவே சாதிப் பாகுபாடு நிறைந்த அந்தச் சூழலில் சீனிவாசனோடு கல்லூரியில் 400 மாணவர்கள் படித்தனர். அதில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர்கள் என்பதால், சீனிவாசன் மிகுந்த சிரமத்தோடு பட்டப்படிப்பை முடித்தார். தமிழகத்தில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம்பெற்ற முதல் தலித் பட்டதாரி இரட்டைமலை சீனிவாசன்தான். இந்திய அளவிலும் அவரே முதல் தலித் பட்டதாரி எனவும் சொல்வதுண்டு.

1880-களின் தொடக்கத்தில் நீலகிரியில் ஐரோப்பிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு சீனிவாசனுக்கு தியாசபிக்கல் சொசைட்டியை சேர்ந்த மேடம் பிளாவட்ஸ்கி, கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் ஆகியோருடன் தொடர்பு கிடைத்தது. ஏற்கெனவே அங்கிருந்த தன் உறவினர் அயோத்திதாசப் பண்டிதருடன் இணைந்தும், தனித்தும் இரட்டை மலை சீனிவாசன் அவர்களுடன் அரசியல் செயல்பாட்டில் இணைந்திருந்தார். தலித் வரலாற்றின் இருபெரும் ஆளுமைகளான அயோத்திதாச பண்டிதருக்கும், இரட்டைமலை சீனிவாசனுக்கும் அரசியல் பயிலகமாகவே நீலகிரி விளங்கியது.

தமிழக தலித் வரலாற்றைப் பொறுத்தவரை மக்கள் பலம் கொண்ட முதல் எழுச்சி நாயகன் என்றால் அது இரட்டைமலை சீனிவாசன்தான். “எந்த சாதியின் பெயரைச் சொல்லி என்னை இழிவுபடுத்துகிறீர்களோ, அதே அடையாளத்தில் மீண்டெழுவேன்” எனும் உறுதியோடு இருந்தார். 1891-ல் ‘பறையர் மகா ஜன சபை’ தொடங்கிய சீனிவாசன் அதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் தரப்பிலான கோரிக்கை, விண்ணப்பம், தலையீடு, கூட்டம், தீர்மானங்களை நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பினார்.

அப்போதைய அரசியல் வட்டாரத்திலும் சமூக தளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்திய அச்சுப் பண்பாட்டை உள்வாங்கி, 1893-ல் ‘பறையன்’ என்ற பெயரில் இதழ் ஒன்றைத் தொடங்கினார். முதல் மூன்று மாதங்கள் மாத இதழாக வெளிவந்த அந்த இதழ், தாழ்த்தப்பட்டோரின் பேராதரவால் வார இதழாக மாறியது. 1900 வரை சொந்த அச்சகத்தில் அச்சாகி சனிக்கிழமைதோறும் வெளியான அந்த இதழுக்குத் தமிழகம் கடந்தும் வாசகர்கள் இருந்தனர்.

தாழ்த்தப்பட்டோரின் பிரச்சினைகள், தீண்டாமைக் கொடுமைகள், பிராமணிய எதிர்ப்பு, காங்கிரஸாருக்குக் கண்டனம், கல்வி உரிமை, நில மீட்புப் போராட்டம், அரசுக்குக் கோரிக்கைகள், தாழ்த்தப்பட்டோருக்கான உரிமை கோரல் ஆகியவை தொடர்பான செய்திகள் அந்த இதழில் தொடர்ந்து இடம்பெற்றன. வடமாவட்டங்களில் மட்டுமல்லாமல் தென்மாவட்டங்களில் நிலவிய சமூகச் சூழல் தொடர்பான பதிவுகளும், கிராமங்களில் நிகழும் அநீதி தொடர்பான தகவல்களும் இடம்பெற்றன. தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதிலும், தாழ்த்தப்பட்டோரின் கோரிக்கையை அரசுக்குத் தெரியப்படுத்தியதிலும் அந்த இதழின் பங்களிப்பு மகத்தானது.

அப்போதைய கிருஷ்ணா மாவட்டத்தில் 28.04.1894 அன்று பஞ்சமர்களுக்காக சீனிவாசன், நில உரிமைப் போராட்டத்தை நடத்தினார். இதன் காரணமாக ஆங்கிலேய அரசு தாழ்த்தப்பட்டோருக்குப் பஞ்சமி நிலத்தை வழங்கியது. அதே ஆண்டில், இங்கிலாந்தில் நடக்கும் ஐசிஎஸ் தேர்வை இந்தியாவில் நடத்த வேண்டும் என காங்கிரஸார் கோரிக்கை விடுத்தனர். அதற்காக சில நூறு பேரிடம் கையெழுத்து வாங்கி அரசுக்கு, மனு அனுப்பியும் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனிவாசன் அந்த தேர்வை இங்கிலாந்தில்தான் நடத்த வேண்டும்; இந்தியாவில் நடத்தினால் ஆதிக்க சாதியினர் சாதிபேதம் பாராட்டுவார்கள் எனக் கூறி 3,412 பேரிடம் கையொப்பம் பெற்று ஆங்கிலேய அரசுக்கு அனுப்பி வைத்தார். இன்றைய அரசியலில் நடைபெறும் பிரமாண்டமான பேரணி, தீர்மானம், அரசுக்கு நெருக்கடி, ஆதரவு என எல்லா ராஜதந்திரங்களையும் அன்றைய காலகட்டதில் செய்துக்காட்டியவர் சீனிவாசன்.

 

தென்னாப்பிரிக்காவில் இரட்டைமலை சீனிவாசன்

1900-களின் தொடக்கத்தில் பொருளாதாரத் தேவைக்காக தென்னாப்பிரிக்கா சென்ற சீனிவாசன் 20 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தார். இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் மிகுதியாக வாழ்ந்த நட்டால் நகரில் வசித்த அவர் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிய காந்தியுடன் பழகும் வாய்ப்பு சீனிவாசனுக்குக் கிடைத்தது.

நீண்ட இடைவேளைக்கு பின், லண்டன் வட்டமேஜை மாநாட்டில் காந்தியைச் சந்தித்துத் தாழ்த்தப்பட்டோர் நலன் தொடர்பாக சீனிவாசன் பேசினார். இரட்டை வாக்குரிமையை எதிர்த்து எரவாடா சிறையில் காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது, அம்பேத்கருடன் சென்று காந்தியை சந்தித்தார். காந்தி – அம்பேத்கர் இடையே கையெழுத்தான பூனா ஒப்பந்தத்தில் தாழ்த்தப்பட்டோர் சார்பாக இரட்டைமலை சீனிவாசன் கையெழுத்திட்டார்.

தேர்ந்த மொழி புலமை உள்ளவர் ரெட்டைமலை சீனிவாசன். அண்ணல் காந்தியடிகளுக்கும், மாபெரும் எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கும் உள்ள நட்பு அனைவரும் அறிந்ததே. இதில் அதிகம் வெளியே தெரியாத, அல்லது பதிவு செய்யப்படாத முக்கிய விடயம் ஒன்று உள்ளது. ஒருமுறை காந்தி, லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தில், ‘தம்மை துன்புறுத்துபுவரிடமும் தண்டிக்காமல் மன்னிக்கும் குணம் குறித்து நீங்கள் எழுதிய வரிகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது’ என்று சிலாகித்தார். அதற்குப் பதிலளித்த லியோ டால்ஸ்டாய், ‘இந்தப் பெருமையெல்லாம் உங்கள் நாட்டில் உள்ள சிறப்புமிக்க தமிழ் மொழியின் திருக்குறளையேச் சாரும். அதுவே மானுடத்தை எனக்குள் மெருகேற்றியது’ என்று ‘இன்னா செய்தாரை’ குறளையும் எழுதி அனுப்புகிறார்.

அதில், உருகிய அண்ணல் காந்தி, ‘ஆங்கிலத்தில் படித்தபோதே திருக்குறள் சிறப்பானதாக இருக்கிறதே… அதன் மூலமொழியான தமிழ் மொழியில் பயின்றால் எந்தளவு சுக அனுபவமாக இருக்கும்’ என்று தமிழ் படிக்க ஆர்வப்படுகிறார். அவரின் ஆர்வத்துக்கு ஆசிரியராக இருந்து திருக்குறளைப் போதித்து, காந்திக்குத் தமிழில் கையொப்பமும் இடக் கற்றுத் தந்தவரே ‘ரெட்டைமலை சீனிவாசன்!’

 

ஆலய நுழைவின் ஆரம்பப் புள்ளி

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய சீனிவாசன் 1923-38 காலகட்டத்தில் சென்னை மாகாணச் சட்டமன்றத்தின் நியமன உறுப்பினராக இருந்தார். அப்போது, தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களைக் கொண்டுவந்தார். தாழ்த்தப்பட்டோர் பொதுவெளியில் பிரவேசிக்கவும், சாலை தெருக்களில் நடக்கவும், பொது நீர்நிலைகளில் நீர் எடுக்கவும் வழிவகை செய்யும் தீர்மானத்தை 25.08.1924 அன்று சீனிவாசன் கொண்டுவந்தார்.

தீண்டாமை ஒழிப்பு, சாதிப் பாகுபாடு, ஆலய நுழைவு, நில உரிமை, இட ஒதுக்கீடு, கல்விக்கு நிதி ஒதுக்கீடு போன்றவை தொடர்பாக சீனிவாசன் முக்கியப் பங்காற்றினார். அரசு விடுமுறை தினங்களில் மதுக் கடை மூடல், பரம்பரை மணியக்காரர் முறை, ஆலய நுழைவு, தொழுவத்தில் குற்றவாளிகள் கட்டும் முறை ஒழிப்பு, படிப்பறிவில்லாதவர்களிடம் கைரேகைகள் பெறும் முறையில் மாற்றம் போன்ற சமூக சீர்த்திருத்தச் சட்டங்களிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். இவரது பொதுவெளி பிரவேசத் தீர்மானமும், ஆலய நுழைவுத் தீர்மானமும் பாலக்காடு கல்பாத்தி அக்ரஹார நுழைவுக்கும் வைக்கம் கோயில் நுழைவுக்கும் முன்னோடியாக அமைந்தன.

அம்பேத்கருடனான ஆத்மார்த்தமான உறவு

லண்டனில் 1930, 1931, 1932 ஆண்டுகளில் நடைபெற்ற வட்டமேஜை மாநாடுகளில், ‘தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதி’ என சீனிவாசன் தன் கோட்டில் பட்டை அணிந்திருந்தார். பிரிட்டிஷ் பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகளுக்கு விருந்து அளித்தபோது, அவரோடு கைக்குலுக்க சீனிவாசன் மறுத்துவிட்டாராம். ”நான் அடிமைகளின் அடிமை. தீண்டத்தகாத வகுப்பிலிருந்து வந்தவன். என்னை நீங்கள் தொட்டால் தீட்டு ஒட்டிக்கொள்ளும்” என்று கூறி, இந்திய சமூகத்தின் சாதி முகத்தை மன்னருக்கு விளக்கினாராம்.

இந்தியாவில் தீண்டாமை இருக்கிறது என்பதை உணர்த்த சீனிவாசன் செய்த செயலை பார்த்து அதிர்ந்த ஜார்ஜ் மன்னர் அவரை அருகில் அழைத்து கை குலுக்கினார்.

வட்ட மேஜை மாநாட்டில், ”தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கினால்தான் தீண்டாமைக் கொடுமை ஒழியும். கல்வி வேலைவாய்ப்பில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். சட்டசபையில் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்” என சீனிவாசன் வலியுறுத்தினார். அம்பேத்கருடனான ஆத்மார்த்தமான உறவு குறித்து, ”நானும் அவரும் நகமும் சதையும் போலப் பழகினோம். வட்டமேஜை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடினோம்” என எழுதியுள்ளார்.

 

பறையன் மகாஜன சபை

இரட்டைமலை சீனிவாசன் 1891 ஆம் ஆண்டு ‘பறையன் மகாஜன சபை’ எனும் அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வைசிராயிடமும், ஆளுநரிடமும் முறையீடு செய்தார்.

‘பறையன்’ இதழ்

இவ்வளவு தொழில் நுட்பம் உள்ள இந்தக் காலத்தில் ஒரு பத்திரிகையை தொடங்கி நடத்துவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், 1893ம் ஆண்டே பறையன் என்ற இதழை தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். முதலில் மாத இதழாக வந்த இந்த ‘பறையன்’ பின்னர் வார இதழாக வெளியானது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 1900 வரை நிற்காமல் வெளியானது என்பது இதன் சிறப்பு.

 

புரட்சி செய்த தாத்தா

மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் 5ம் ஜார்ஜ் மன்னருடன் கை குலுக்கிய போது, தான் கை குலுக்க மறுத்தார் இரட்டை மலை சீனிவாசன். ஏன் என மன்னர் கேட்ட போது, நான் தீண்டத்தகாதவன் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்திய புரட்சியாளர்

சிறப்பு அஞ்சல்தலை

தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு சிறப்பு செய்யும் வகையில் 2000வது ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி, அப்போது தமிழகத்தை ஆண்ட திமுக அரசு அவருக்கு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. அதே போன்று காந்தி மண்டபம் அருகில் அவருக்கு மணிமண்டபம் ஒன்றும் திமுக தலைவர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.

 

கண்டறியப்படாத புரட்சியாளர்

இரட்டைமலை சீனிவாசனின் வரலாறு குறித்த தரவுகள் போதுமான அளவுக்கு நமக்குக் கிடைக்கவில்லை. 1939-ல் இரட்டைமலை சீனிவாசன் எழுதிய ‘ஜீவிய சரித்திரச் சுருக்கம்’ என்ற சுயசரிதை நூலில், தனது அரசியல் செயல்பாட்டை ஓரளவுக்குப் பதிவுசெய்துள்ளார். அந்த நூல்தான் தமிழில் வெளியான முதல் தலித் சுயசரிதை என்று கருதப்படுகிறது. அந்த நூலில், தென்னாப்பிரிக்காவில் கழிந்த அவரது 20 ஆண்டு கால வாழ்க்கை பற்றிய பதிவுகள் அதிகமாக இல்லை.

அதே போல இரட்டைமலை சீனிவாசன் நடத்திய ‘பறையன்’ இதழின் ஒரு பிரதிகூட இதுவரை கிடைக்கவில்லை. இதழின் செய்திகள் தொடர்பாக அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இரட்டைமலை சீனிவாசனின் 15ஆண்டுகால சட்டமன்ற உரைகள், பல்வேறு ஆளுமைகளுடான தொடர்புகள், அரசியல் போராட்டங்கள், முக்கியத் தீர்மானங்கள் ஆகியவை முழுமையாகத் தொகுக்கப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: