பாலகங்காதர திலகர்-முழு விவரம்

மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட விவரிக்க இயலாத துன்பத்திற்கு எதிராகவும், இந்து ராஜ்ஜியம் அமையவும் தோன்றிய மாவீரன் சத்ரபதி சிவாஜி. அதேபோல், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக “சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவோம்” என சுள்ளென உறைக்கும் வகையினில் சிங்கநாதம் செய்தவர் ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் லோகமான்ய பாலகங்காதர திலகர்.

பிறப்பு: 1856 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி மராட்டிய மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கிசல் என்ற கிராமத்தில் பார்வதி பாய் – கங்காதர சாஸ்திரி தம்பதியாருக்கு மகனாகப் பிறந்தார். திலகரின் தந்தை சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற பண்டிதர். இவர் ஆசிரியப் பணியில் ஈடுபட்டு 1886ம் ஆண்டு தொடக்கப்பள்ளித் துணை ஆய்வாளராகவும் இருந்து வந்தார். திலகர், ‘கேசவராவ்’ என்று மூதாதையர் பெயராலும், செல்லமாக ‘பாலன்’ என சிலரால் அழைக்கப்பட்டார்.

கல்வி: திலகர் 5ஆம் வயதில் பூனா நகரில் செயல்பட்டு வந்த திலகர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். சமஸ்கிருதத்திலும் கணிதத்திலும் சிறந்து விளங்கிய திலகர் டெக்கான் கல்லூரியில் 1877 ஆம் ஆண்டு முதல் மாணவராக இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார். சட்டம் படிக்க முடிவு செய்து சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார். அப்போது சிலர், “நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய். எனவே அதையே சிறப்புப் பாடமாக படித்தால் நல்ல எதிர்காலம் ஏற்படும்” என்று கூறினார்கள்.

அதற்கு, “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதையே என் நாடு என்னிடம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

திலகர் குடும்ப வழக்கப்படியே தலைப்பாகை, அங்கவஸ்திரம், காலணி ஆகியவையும் அணிந்து வந்தார். எந்தக் காலத்திலும் தனது பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றாமல் பின்பற்றி வந்த திலகர் கல்லூரிக் காலத்திலும் அதையே பின்பற்றி வந்தார்.

பரந்துபட்ட பல துறையில் ஈடுபாடு கொண்ட திலகர் வைராக்கியத்தின்படி வழக்கறிஞராகி சிறையிலிருந்த பல தேச பக்தர்களை விடுதலையடைய செய்தார். அந்நியக் கல்வி முறையை கடுமையாக எதிர்த்த திலகர், அதற்கு மாற்றாக இந்திய கல்விமுறையில் கல்வி புகட்ட விரும்பி சில நண்பர்களுடன் சேர்ந்து ‘நியூ இங்லீஷ் ஸ்கூல்’ என்ற பெயரில் பள்ளிக்கூடம் தொடங்கினார். இப்பள்ளியின் மூலம் தேசிய உணர்வையும் தட்டி எழுப்பினார்.

விடுதலைப் போராட்டத்தில் திலகர்: 1881 ஆம் ஆண்டு, திலகர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து “கேசரி” என்னும் மராத்தி மொழி பத்திரிக்கையும் மற்றும் “மராட்டா” என்னும் ஆங்கில மொழி பத்திரிக்கையும் தொடங்கி, ஆங்கில அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை வெளியிட்டது. தலையங்கத்தில் ஆங்கில அரசின் கீழ் பாரத மக்கள்படும் துன்பங்களைக் குறித்து வெளியிட்டார். இரண்டே ஆண்டுகளில் “கேசரி” இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கண்ட பத்திரிக்கையாக மாறியது. இந்த பத்திரிக்கைகளில் மக்களுக்கு சுதந்திர விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டது. பத்திரிகை விற்பனை நாடு முழுவதும் சூடு பிடித்தது. இது ஆங்கிலேயருக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. இதனால், ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மக்கள் ஒவ்வொருவரும் வீறு கொண்டு எழுந்து போராட துடித்தனர். கோலாப்பூர் சமஸ்தான நிர்வாகத்தினரிடம் ஆங்கிலேயரின் கொடுமையை ‘கேசரி’ இதழில் வெளியிட்டதற்காக 4 மாத சிறை தண்டனை பெற்றார். இதுவே அவரின் முதல் சிறை அனுபவம். விடுதலை செய்யப்பட்ட பின் 1880ல் நண்பர்களுடன் சேர்ந்து ‘டெக்கான் எஜூகேசனல் சொசைட்டி’யை ஏற்படுத்தினார். பின்னாளில் இதுவே ‘பெர்க்யூஷன் காலேஜ்’என்று விரிவுபடுத்தப்பட்டது.

அரசியல் வாழ்க்கை: 1885 ஆம் ஆண்டு திலகர் காங்கிரஸில் சேர்ந்தார். 1896 ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. 1897ல் பிளேக் நோய் பூனாவில் மிகவும் தீவிரமாக பரவியது. சிகிச்சைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டும் பலன் இல்லாமல், அவரே சுகாதார நிலையங்களை திறந்து மக்கள் துயர் துடைத்தார். அதனை தடுப்பதற்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இரக்கமற்ற ஆங்கில அரசு, விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதை திலகர் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், கண்டித்து பத்திரிக்கைகளிலும் எழுதினார். இந்தக் கட்டுரைகளை காரணம் காட்டி 1897 ஆம் ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது ஆங்கில அரசு. சிறைவாசத்தில் அவர் உடல் நிலை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. சிறைவாசத்திலிருந்து மீண்டபோது, மக்கள் அவரை ‘லோகமான்யர்’ என்று அழைத்தனர்.

விடுதலைக்குப் பின், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய திலகர் 1898ம் ஆண்டு சென்னை மற்றும் 1899ம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். இதற்கு அடுத்த ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்பு பர்மா சென்று வந்தார். அரசியலில் தீவிரமாக செயல்பட்ட திலகர், அப்போது பத்திரிகையில் புரட்சிகரக் கருத்துகளைப் புகுத்திவந்தார். அரசியலில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். ‘அந்நிய துணிகளை அணிய வேண்டாம், பஞ்ச காலத்தில் வரி கட்ட வேண்டாம்’ என எடுத்துரைத்தார். தீவிர எண்ணம் கொண்டவர்கள் திலகர் மீது நம்பிக்கை வைத்தார்.

1907ல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சி ‘மிதவாதிகள்’, ‘தீவிரவாதிகள்’ என இரு பிரிவுகளாக பிரிந்தது. திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர்.  இதன் பிறகு மிதவாதிகளுக்கு ஆதரவு குறையத் தொடங்கியது. தீவிர கருத்துடைய திலகர் போன்றோர் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது. அந்நிய ஆட்சியை, வன்முறையை கைக்கொண்ட இளைஞர்கள், அரசினை கவிழ்க்க பயங்கரவாத இக்கங்களை தொடங்கினர்.

இப்படிப்பட்ட செயல்களுக்கு காரணம் காங்கிரஸ் தீவிர  தலைவர்களே என கருதிய ஆங்கில அரசு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. போன்றோரை கைது செய்தது. வ.உ.சி. கைது செய்யப்பட்டதை எதிர்த்து கண்டன குரல் எழுப்பிய திலகரும், தண்டிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ரங்கூன் மண்டேலா சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்’ என்ற நூலை எழுதினார். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று 16.06.1914 அன்று விடுதலை அடைந்தார்.

திலகரின் தீவிர கருத்தினைக் கொண்டு நேதாஜி செயல்பட்டார். கோகலேயின் மிதவாத கருத்தால் மகாத்மா காந்தி செயல்பட்டார். மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு திலகரின் தன்னாட்சிக் கொள்கையை ஏற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.

நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால்தான் சீக்கிரத்தில் சுதந்திரம் கிடைக்கும் என்ற  திலகர், சத்திரபதி சிவாஜி விழாவுக்கு புத்துயிர் கொடுத்து நாட்டு மக்களுக்கு தேசபக்தியை உணத்தினார். மக்கள் வீடுதோறும் குடும்பவிழாவாக கொண்டாடிவந்த விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய விழாவாக்கி, அவ்விழாவில் சுதந்திர ஆர்வத்தை உணர்த்தி, மக்களிடம் தேசபக்தியைப் பொங்கச் செய்தார்.

1919 ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் வந்தது. அதை எதிர்த்து மக்கள் போராடினர். அப்படி ஜாலியன் வாலாபாக் திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களை ஜெனரல் டயர் சுட்டான். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடந்தது. இந்நிலையில் பிரித்தாளும் சூழ்ச்சியாக, ஆங்கில அரசு இந்தியாவுக்கு சிறிது சிறிதாக சுயாட்சி அளிப்பதாக கூறியது. அப்போது,  காந்தியடிகள் அரசியலில் பங்கு பெற்றுவந்தார். இவரைக் குறிப்பிட்டு, “இந்தியாவுக்கு எதிர் காலத்தில் அவர் ஒருவரே தலைவராக இருக்கத் தகுதியுடையவர்” என்று திலகர் தெரிவித்தார்.

இறப்பு: ஆங்கில ஆட்சியை எதிர்த்து தீவிரமாகப் போராடி, “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய திலகர், கல்வி தேசத்தொண்டு, பத்திரிக்கை என பல வழிகளில் இந்திய மக்கள் அனைவரின் மனத்திலும் விடுதலை நெருப்பை பற்றவைத்தவர். ஒவ்வொரு இந்தியனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காக போராடத் தூண்டிய திலகர், கடைசிவரை தான் கொண்ட லட்சிய வேட்கை மாறாத திலகர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1, 1920 ஆம் ஆண்டு தன்னுடைய 64 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

முக்கிய நிகழ்வுகள்:

* இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவர் இவரே.

* இவருக்கு லோகமான்யா என்ற பட்டப் பெயர் உண்டு.

* சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன் என முழங்கியவர்.

* முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றிருந்தார். திலக் மகாராஜா எனவும் அழைக்கப்பட்டார்.

* மராத்தா (ஆங்கிலம்), கேசரி (மராத்தி) என்ற இரு பத்திரிகைகளை நடத்தினார்.

* 1889 – இல் காங்கிரஸில் சேர்ந்தார்.

* 1893 – இல் மக்களிடையே நாட்டுபற்றை வளர்க்க கணபதிவிழா நடத்தினார்.

* 1895 – இல் சிவாஜி விழாவையும் நடத்தினார். இதனால் மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை ஆங்கில அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

* 1907 – இல் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என பிரிந்த போது தீவிரவாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார்.

* 1908 – இல் முசாபர்பூரில் பிரபுல்ல சாகி, குதிராம் போஸ் என்ற இரண்டு வங்க இளைஞர்கள் டக்ளஸ் கிங்ஸ்போர்ட் என்ற மாஜிஸ்ட்ரேட் மீது குண்டு வீசினர். அதில் கென்னடி என்பரவரது மனைவியும், மகளும் கொல்லப்பட்டனர். இதனால் இருவரையும் ஆங்கில அரசு தண்டித்தது. ஆனால் திலகர் இவர்களைப் பாராட்டி கேசரி இதழில் தலையங்கம் எழுதியதால் 1908 – 1914 வரை பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார்.

* 1914 – இல் விடுதலை பெற்று 1916 – இல் பூனேயில் தன்னாட்சி இயக்கம் (All India Home Rule League) தொடங்கினார்.

* கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே சுயராஜ்ஜியிம் குறித்துப் பேசினார். 1919 – இல் இங்கிலாந்து சென்றார். அங்கு லேபர் கட்சி தலைவர்களுடன் இந்திய சுதந்திரம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

* 1920 – ஜூலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி இறந்தார்.

* 1908 ஆம் ஆண்டில் பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லூரி எதிரில் திலகர் திடல் உருவானது. இப்பெயரைச் சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார். சுப்பிரமணிய பாரதி வழிமொழிந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இங்கிருந்தே உத்வேகம் பெற்றுள்ளனர்.

இந்த இடத்தில் மகாம்தா காந்தி 7 முறை பேருரையாற்றியது வரலாறு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய செய்தியை இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் காந்தி குறிப்பிட்டார்.  இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்த தீர்மானம் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

* திலகர் திடல் சரித்திரத்தையும் நினைவுகளையும் இல்லாமலாக்க அந்த இடத்திற்கு சீரணி அரங்கம் என இடையில் பெயரிட்டனர். வழக்கு போடப்பட்டு தற்போது திலகர் கட்டம் நினைவு கல்வெட்டு நிறுவ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் தற்போது மெரினா கடற்கரையில் ‘திலகர் திடல்’ கல்வெட்டு தற்போது நிறுவப்பட்டுள்ளது.

சுதந்திரம் அடைந்த இக்காலத்திலும் சுதந்திர உணர்வை மங்கச் செய்யும் சதிகளை உணர்வோம், போராடி வென்று சுதந்திரத் தீயை வளர்ப்போம்.

* கல்வி, ஆன்மிகம், சேவை, தேசத் தொண்டு, பத்திரிகை என பல துறைகளில் சாதனை படைத்த லோகமான்ய பால கங்காதர திலகரின் பெருமையைப் போற்றுவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: