காட்டையே நம்பியுள்ள எங்கள் கதி – வேட்டைத் தடுப்பு காவலர்கள்

காட்டையே நம்பியுள்ள எங்கள் கதி இதுதானா?

 கண்ணீர் வடிக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்கள்!

இந்த அறிவிப்பு எங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது; எங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது; எங்களது இத்தனை நாள் உழைப்பை பொருளற்றதாக மாற்றியிருக்கிறது. தகுதி இல்லாமல் வனப்பாதுகாவலர் பணியை நாங்கள் கேட்கவில்லை.

“ தமிழக அரசு எங்களை ஏமாற்றிவிட்டது. என்றாவது ஒரு நாள் வனக்காவலர் பணி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் உயிரைப் பணயம்வைத்து வனத்தையும் வன விலங்குகளையும் காத்து வருகிறோம். பணி மூப்பு அடிப்படையில் எங்களுக்கு வழங்க வேண்டிய வனக் காவலர் பணியை, நேரடி நியமனங்கள் மூலம் நிரப்புவதாக அறிவித்து, எங்கள் எதிர்காலத்தில் மண் அள்ளிப்போடுகிறார்கள்” என்று கண்ணீரோடு போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள்.

 

வனக் காவலர் பணியை நேரடி விண்ணப்பங்கள் மூலம் வழங்கும் நடைமுறையை கைவிடக்கோரி, தமிழகம் முழுவதும் உள்ள வேட்டைத் தடுப்பு காவலர்கள், கோயம்புத்தூர் சிவானந்தா காலனியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை 20.7.19-ம் தேதி முதல் தொடர் பணி புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து வன வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பிரவீன் குமாரிடம் பேசினோம், “தமிழக வனத்துறையில் சமூக வனப் பணியாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் என இரண்டு பிரிவுகளாகத் தற்காலிகப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதில், 20 முதல் 25 ஆண்டுகள் பணியாற்றும் சம்க வனப் பணியாளர்களுக்கு மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்துவிட்டது தமிழக அரசு. ஆனால், வேட்டைத் தடுப்பு காவலர்களில் வெறும் 144 நபர்கள் மட்டுமே இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் இருக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்களின் எண்ணிக்கை 1119. என்றாவது ஒரு நாள், நமக்கும் வனக்காவலர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அத்தனைபேரும் பணியாற்றிவருகிறோம். அடர்ந்த வனப்பகுதிகளில், மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள் மற்றும் வனக் கொள்ளையர்கள் மற்றும் சமூக விரோதிகள் வனத்துக்குள் ஊடுருவாமல் தடுக்க எங்கள் உயிரைப் பணயம் வைத்து நாங்கள் பணி செய்வதால்தான், வனமும் வன விலங்குகளும் பாதுகாப்பாக இருக்கின்றன.

வனத்துறையில் கண், காது, முதுகெலும்பு எல்லாம் வேட்டைத் தடுப்பு காவலர்கள்தான் என்பதோடு மட்டுமல்லாமல், வன விலங்கு பாதுகாப்பின் ஆணிவேர் வேட்டைத் தடுப்பு காவலர்கள்தான் என்றெல்லாம் தமிழக முதல்வரும், வனத்துறை அமைச்சரும் புகழ்ந்துள்ளார்கள். எங்களது பணியின் முக்கியத்துவமும் அதில் உள்ள சிரமமும் அரசுக்குப் புரிந்துவிட்டது என்று நம்பினோம். எங்களுக்கு நல்லது நடக்கும் என்று காத்திருந்தோம். ஆனால், இதுவரை வனத்துறையில் உள்ள வனக்காவலர் பணியிடங்கள், வனத்துறையில் தற்காலிகமாகப் பணியாற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்களையும் சமூக வனப் பணியாளர்களையும் தோட்டக் காவலர்களையும் கொண்டுதான் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அந்த முறையை மாற்றி நேரடி நியமனம் மூலமாக வனக்காவலர் பணி நிரப்பப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு எங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது; எங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது; எங்களது இத்தனை நாள் உழைப்பை பொருளற்றதாக்கியிருக்கிறது. தகுதி இல்லாமல் வனப்பாதுகாவலர் பணியை நாங்கள் கேட்கவில்லை. அதற்கான எல்லா பயிற்சிகளும் எங்களுக்கு தற்காலிகப் பணியின்போதே வழங்கப்பட்டுவிடுவதாலும், பல ஆண்டுகள் வனத்துறையில் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றிய அனுபவம் இருப்பதாலும் எங்களால் வனக்காவலர் பணியை செவ்வனே செய்ய முடியும். வெளியிலிருந்து புதிய ஆள்களை எடுத்தால் எப்படி சரியாக வரும்? அவர் எப்படி சமாளிப்பார் என்பதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும், என்றாவது ஒருநாள் இந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கும் எங்களின் நிலை என்னாவது என்று அரசுதான் சொல்ல வேண்டும். இந்த அறிவிப்பை ரத்துசெய்யும் வரை நாங்கள் பணிக்கு திரும்ப மாட்டோம்” என்றார் சீற்றத்தோடு!

நன்றி : விகடன்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: