TNPSC UNIT 9 சுதந்திரத்துக்குப் பிறகான கல்வித் திட்டங்கள்

கல்வி ஆணையங்கள்
இந்தியாவில் பல்கலைக்கழகக் கல்வி குறித்துப் பரிந்துரைப்பதற்காக டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலை மையில் 1948இல் பல்கலைக்கழக கல்வி ஆணையம் அமைக்கப்பட்டது. 1952இல் இடைநிலைக் கல்விக்காக டாக்டர் லட்சுமணசுவாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் ‘முதலியார் ஆணையம்’ என்றழைக்கப்பட்டது.
கல்வியின் அனைத்து அம்சங்களையும் ஆராய்வதற்காக 1964இல் அன்றைய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த டி.எஸ்.கோத்தாரி தலைமையில் கோத்தாரி கல்வி ஆணையம் அமைக்கப்பட்டது.
கல்விக் கொள்கைகள்
கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைப்படி 1968இல் இந்தியாவின் முதல் தேசியக் கல்விக்கொள்கை அறிவிக்கப்பட்டது. கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைகள் பலவும் இந்தக் கல்விக்கொள்கையில் இடம்பெற்றன. அனைவருக்கும் 14 வயதுவரை கல்வி அளிக்கப்பட வேண்டும், ஜிடிபியின் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பவை இக்கொள்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்.
1986இல் மீண்டும் ஒரு தேசியக் கல்விக் கொள்கை அறிவிக்கப் பட்டது. பெண்கள், பின்தங்கிய வகுப்பினருக்குக் கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பது, ஏழை மாணவர்களுக்குக் கல்விக்கான உதவித் தொகை, முதியோர் கல்வி, ஒடுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து ஆசிரியர்களை நியமிப்பது ஆகியவை கல்விக் கொள்கை 1986இன் முக்கிய அம்சங்கள்.
2020ஆம் ஆண்டில் புதிய தேசியக் கல்விக்கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் தாய்மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 2040க்குள் இந்தியக் கல்வியை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கும் நோக்கத்துடன் கல்விக்கொள்கை 2020 வடிவமைக்கப்பட்டுள்ளது.
கல்வியைப் பரவலாக்கும் திட்டங்கள்
1986 கல்விக்கொள்கையின்படி இந்தியாவில் தொடக்கப் பள்ளிகளை அதிகரிப்பதற்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்குமான ‘ஆபரேஷன் பிளாக்போர்டு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தொடக்கப் பள்ளியிலும் குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள், இரண்டு வகுப்பறைகள், கல்விக்கான கருவிகள், கழிப்பறைகளை ஏற்படுத்துவது போன்றவை இத்திட்டத்தின் நோக்கம்.
பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கும் கல்வி கற்பிக்கத் தகுதிபடைத்தவர்களாக ஆக்குவதற்கும் மத்திய அரசால் நிதியளிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சித் திட்டம் 1987இல் தொடங்கப்பட்டது. இதன்படி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
அனைவருக்கும் தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்வதற்காக 1994இல் மாவட்டம்தோறும் தொடக்கப்பள்ளித் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான செலவை மத்திய அரசும் மாநில அரசுகளும் 85%, 15% என்னும் விகிதத்தில் பகிர்ந்துகொள்கின்றன. 1995இல் தொடக்கப் பள்ளிகளில் 300 கலோரியையும் 12 கிராம் புரதத்தையும் உள்ளடக்கிய மதிய உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மாவட்டந்தோறும் தொடக்கக் கல்வித் திட்டத்தின் மேம்பட்ட வடிவமாக 2001இல் அனைவருக்கும் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயனுள்ள, பொருத்தப்பாடுமிக்க தரமான கல்வியை அனைவருக்கும் வழங்கித் தொடக்கக் கல்வி அமைப்பை மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கம்.
தொடக்கக் கல்வியில் பாலினஇடைவெளியை நீக்கி அனைத்துப்பெண்களுக்கும் கல்வி வழங்கு வதற்கான திட்டம் 2003இல் அறிமுகப் படுத்தப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் அனைத்துப் பெண்களுக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதற்கான கூறு இணைக்கப்பட்டது. பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடுகளும் உதவிகளும் அதிகரிக்கப்பட்டன.
இடைநிலைக் கல்வி, உயர் கல்வியைப் பரவலாக்குவதற்கும் தரத்தை அதிகரிப்பதற்கும் தனித்தனி திட்டங்களும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. 2009இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சாக்ஷார் பாரத்’ திட்டம் முறையான பள்ளிக் கல்வியைப் பெற முடியாமல் 15 வயதைக் கடந்து விட்டோருக்கு எழுத்தறிவு வழங்கு வதற்கான அமைப்புகளை உருவாக்கு வதற்கானது.
அடிப்படை உரிமையான கல்வி
கல்வியை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கும் வகையில் அரசமைப்பில் 86ஆம் சட்டத் திருத்தம் 2002இல் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 6 முதல் 14 வயதுவரையில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி அளிப்பது அரசுகளின் கடமையானது.
இந்த வயதுக் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வாய்ப்பை வழங்குவது பெற்றோர்/பாதுகாவலரின் கடமையாக்கப்பட்டது. 86ஆம் அரசமைப்புத் திருத்தத்துக்கு உயிர்கொடுக்கும் வகையில் 2009இல் கல்வி உரிமைச் சட்டம் என்றழைக்கப்படும் இலவச, கட்டாயக் கல்வியைப் பெறுவதற்கான குழந்தைகளின் உரிமைச் சட்டத்தைஇந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
இச்சட்டத்தின்படி அனைத்துத் தனியார் பள்ளிகளும் 25 சதவீத இடங்களை ஏழை, பினதங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இச்சட்ட நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வியில் இடஒதுக்கீடு
1950இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்பு சாதி ஏற்றத்தாழ்வுகளின் காரணமாகக் கல்வியில் பின்தங்கிய பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அதன்படி மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவருக்கு 22.5 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
1979இல் நியமிக்கப்பட்ட மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2006இலிருந்து 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. பொருளாதாரரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு 2019இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
தர மேம்பாட்டுக்கான அமைப்புகள்
1948 பல்கலைக்கழக கல்வி ஆணையத்தின் பரிந்துரைப்படி பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கவும் தர நிர்ணயம் செய்யவும் மேற்பார்வையிடவும் பல்கலைக்கழக கல்வி மானியக் குழு உருவாக்கப்பட்டது. இதேபோல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை மேற்பார்வையிடுவதற்கான அனைத் திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு 1987இல் தொடங்கப்பட்டது.
1961இல் பள்ளிக் கல்வி தொடர்பாக அப்போது இயங்கிவந்த ஏழு அமைப்புகளை ஒன்றிணைத்துத் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) உருவாக்கப்பட்டது. பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் பரிந்துரைப்பதே தன்னாட்சி பெற்ற இந்த அமைப்பின் முதன்மையான பணி.
இதுபோன்ற எண்ணற்ற பல திட்டங்களால் இந்தியாவில் கல்வி பெற்றோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 1951இல் 18.3 சதவீதமாக இருந்த எழுத்தறிவு விகிதம் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 74 சதவீதமாக உயர்ந்தது. சில மாநிலங்கள் கிட்டத்தட்ட நூறு சதவீத எழுத்தறிவை எட்டிவிட்டன. கல்வியில் இன்னும் பல மாற்றங்கள், சீர்திருத்தங்கள் தேவைப்பட்டாலும் அடிப்படைக் கல்வி அறிவை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி
2035க்குள் பள்ளிக் கல்வியை முடிப்போரில் 50 சதவீதத்தினர் உயர் கல்வியைப் பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது தேசிய கல்விக்கொள்கை 2020. தமிழ்நாட்டில் அந்த இலக்கு ஏற்கெனவே அடையப்பட்டுவிட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் பல வகைகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இலவச சைக்கிள், பேருந்துப் பயணம், சீருடை, புத்தகங்கள், கட்டணமில்லா கல்வி எனப் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு அளிக்கும் திட்டமும் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களால் பள்ளிக் கல்வியையும் கல்லூரிக் கல்வியையும் முடித்தவர்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு.