கோபால கிருஷ்ண கோகலே

கோபால கிருஷ்ண கோகலே

 

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும், நாட்டுக்கு உழைத்த நல்லவருமான கோபால கிருஷ்ண கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டு வருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் அரசியல் குருவாகவும் இவர் கருதப்படுகிறார்.

 

பிறப்பு: 1866.05.09 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில், ஒரு சித்பவன் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஓர் அங்கமாக இருந்தது. கோகலேவின் குடும்பம் ஏழ்மையில் இருந்த போதிலும், அவர்கள் கோகலேவுக்கு ஆங்கிலக் கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என்று நம்பினர். அப்பாவை இளம் வயதிலேயே இழந்துவிட அண்ணன் வேலை பார்த்து இவரை படிக்க வைத்தார். பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே, 1884 ம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார்.

கோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது. ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி, ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார். ஆங்கில காலனிய ஆட்சிமுறையின் பல அம்சங்களைத் தயக்கமின்றி விமர்சித்து வந்தபோதிலும், கோகலே தன்னுடைய கல்லூரி ஆண்டுகளில் பெற்ற ஆங்கிலேய அரசியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மரியாதை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் அவருடனேயே இருந்தது.

சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரானடேவின் ஆதரவாளரான கோகலேவுக்கு அரசாங்க வேலைகள் காத்துக்கொண்டிருந்த பொழுதே நாட்டுப்பணியே முக்கியம் என எண்ணிய கோகலே 1889ல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரானார். அங்கே மிதவாத போக்கை கடைபிடித்தார் .வன்முறை இல்லாத போராட்ட முறைகள், இருக்கும் அரசு நிர்வாகத்தில் மாற்றம் என குறிக்கோள் கொண்டு செயல்பட்டார். பால கங்காதர திலகர், தாதாபாய் நௌரோஜி, பிபின் சந்திர பால், லாலா லஜபத் ராய் மற்றும் அன்னிபெசன்ட் போன்ற சமகாலத்திய தலைவர்களுடன் முரண்பாடுகளுடனும், இணைந்தும் கோகலே, சாதாரண இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிகமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடினார்.

அவர் தன்னுடைய எண்ணங்களில் மிதமானவராகவே இருந்தார், இந்தியர்களின் உரிமைகளுக்கு ஆங்கிலேயர்களின் பெருமளவு மரியாதையைப் பெற்றுத் தரக்கூடிய பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல் செயல்முறையை வளர்த்தெடுப்பதன் மூலம் ஆங்கில அதிகாரிகளிடத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார்.

அயர்லாந்து சென்ற கோகலே அங்கு ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது. இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள். டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாகவும் இருவரும் இருந்து வந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இருவரது அரசியல் வழிமுறை தொடர்பான அவர்களின் செயல்பாடுகளில் வேறுபட்ட எண்ணங்கள் வெளிப்பட தொடங்கியது.

திலகருடனான கோகலேவின் முதல் முரண்பாடு அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே குழுவினர், இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமணத்தைத் தடுத்திடும் சட்டத்தை விரும்பினர். திலகர் அதை எதிர்த்தார்.

குழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை திலகர் எதிர்க்கவில்லை. ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். இத்தகைய சீர்திருத்தங்களை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்பது திலகரின் கருத்தாக இருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே குழுவினர் ஆங்கிலேய அரசின் துணையுடன் அதற்கான மசோதாவை பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக்கினர்.

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார். கோகலே தன்னுடைய புதிய பெரும்பான்மை ஆதரவைப் பயன்படுத்தி தன் நீண்டகால எதிரியான திலகரை வலுவிழக்கச் செய்தார். 1906 ஆம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசின் இரு பிரிவுகளுக்குள் பலத்த மோதல் ஏற்பட்டு, காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. கோகலே, திலகர் இருவரும் முறையே காங்கிரசின் மிதவாதி, தீவிரவாதிகளின் தலைவரானார்கள்.

திலகர், ஆங்கிலேயப் பேரரசை வீழ்த்துவதற்கு உள்நாட்டு கலவரம் மற்றும் நேரடி புரட்சியின் ஆதரவாளர், கோகலேவோ ஒரு மிதமான மறுமலர்ச்சியாளர். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக உடைந்து பத்தாண்டு காலத்துக்கு அதன் செயல்பாட்டுத்தன்மையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. 1916 ஆம் ஆண்டில் கோகலே இறந்த பின்னரே இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.

1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று எண்ணிய கோகலே ‘இந்திய சேவகர்கள்’ எனும் அமைப்பினை தொடங்கினார். அதில் சேர்ந்தவர்கள் தங்களின் சொத்துக்களை நாட்டுக்கு எழுதி வைத்து விடவேண்டும். இந்திய சேவகர்கள் அமைப்பு இந்தத் தேவையை நிறைவேற்றும் என்று கோகலே நம்பினார். அதன் பலனாக இந்த அமைப்பு கல்வியறிவை எளிய மக்களுக்கு போதித்தது, நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்தது, பல பள்ளிக்கூடங்களைத் தோற்றுவித்தது. தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகளை வழங்கியது. கோகலேவின் இறப்பினைத் தொடர்ந்து இந்த அமைப்பு தன்னுடைய வீரியத்தை இழந்தபோதிலும், அது இன்றும் நிலைத்திருக்கிறது.

கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை. ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சியை ஏற்கனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார், இந்த நிலை திலகர் போன்ற அதி தீவிர தேசியவாதிகளிடத்தில் பகைமையை ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளால் தைரியம் இழக்காமல், தன்னுடைய மறுமலர்ச்சி குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்கு கோகலே தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆங்கிலேயர்களுடன் நேரடியான நட்புறவுடன் பணி செய்தார்.

1899 ஆம் ஆண்டு கோகலே மும்பை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903, மே 22- ல் அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவி வகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் பேரரசின் சட்டப்பேரவை 1909-ல் விரிவடைந்த பின்னர் அதில் சேவை புரிந்தார். அங்கு அவர் ஆண்டு வரவு செலவு திட்ட விவாதங்களில் பெரிதும் பங்காற்றினார். இங்கிலாந்து நாட்டின் செயலாளர் லார்ட் ஜான் மார்லேவைச் சந்திக்க லண்டனுக்கு அழைக்கப்படும் அளவுக்கு அவர் ஆங்கிலேயர்களுடன் ஒரு சுமுகமான உறவை உருவாக்கிக் கொண்டார்.

1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிண்டோ-மார்லே திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ஆம் ஆண்டு, கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக ஆங்கிலேயப் பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.

மகாத்மா காந்தி வளர்ச்சி பெற்று வந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு மிகப் பிரபலமான அறிவுரையாளராக இருந்து வந்தார். 1912-ல் காந்தியின் அழைப்பின் பேரில் கோகலே தென் ஆப்பிரிக்காவுக்கு வருகை புரிந்தார். ஒரு இளம் பாரிஸ்டராக காந்தி, தம்முடைய தென் ஆப்பிரிக்க பேரரசுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து திரும்பி கோகலேவிடமிருந்து தனிப்பட்ட முறையில் அறிவுரைகளைப் பெற்றார். 1920-க்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். காந்தி தன்னுடைய சுயசரிதையில் கோகலேவை தன்னுடைய வழிகாட்டி என்றே குறிப்பிடுகிறார்.

பாகிஸ்தானின் எதிர்கால நிறுவனரான முகமது அலி ஜின்னாவின் முன்னோடியாகவும் கோகலே இருந்தார், ஜின்னாவை “இந்து- முகமதிய ஒற்றுமையின் தூதுவர்” என்று கோகலே புகழ்ந்தார். கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதி வரையிலும் தொடர்ந்து அரசியல்ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப்பேரவையிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சிப்போக்கில் கோகலேவின் பாதிப்பு பெரும் பங்கு வகிப்பதாகும். ஆங்கிலேய பேரரசின் உயர்ந்த நிலையில் இருந்தவர்களுடன் கோகலே கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் மூலம், இந்தியாவின் காலனி ஆதிக்க தலைமையாளர்களை இணக்கமான முறையில் சிந்திக்க வைத்தார். இவரது தாக்கமே அஹிம்சா மூர்த்தியாக மகாத்மா காந்தி மலர வழிவகுத்தது எனில் மிகையில்லை. 1950 ஆம் ஆண்டில் குடியரசான இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘வெஸ்மினிஸ்டர்’ மாதிரியான அரசாங்கத்தின் உருவாக்கத்தில் கோகலேவின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு பெரும் பங்குண்டு.

இறப்பு: இருபது வயதில் பொதுவாழ்வில் நுழைந்த கோகலே ஆஸ்துமா, நீரிழிவு நோயால் பாதிக்கபட்டு இருந்த போதிலும் மிதவாத நோக்கத்துடன் கல்விச் சிந்தனை மூலம் இந்தியர்களை எழுச்சியடையச் செய்து நாட்டுக்காக உழைத்த நல்வர் கோகலே 1915 ஆம் ஆண்டு பிப். 19 ஆம் தேதி கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் காலமானார். கோகலே இங்கிலாந்து பயணத்தின்போது 49 நாட்களில் 47 கூட்டங்களில் உரையாற்றினார் என்பதே அவரின் இடைவிடாத உழைப்புக்கு சான்று.

காந்தியின் அரசியல் குருவான அவரை நாமக்கல் கவிஞரின் வரிகளோடு நினைவு கூர்வோம்:

பெருநிலக் கிழவியிந்த பேதையாம் இந்து தேசம்

பலபல துன்பமுற்றுப் பஞ்சையாய் வாடிநிற்க

வெறுமனே யிருந்துநாங்கள் வீணரா யலைந்து கெட்டோம்

வேண்டினோம் தேசபக்தி விமலனார் எமக்குத் தந்த

பெருமானே கோகலே நீ பின்னையும் பிறந்து வந்து

பெற்றதாய் இந்துமாதின் பிணியெலாம் அறுத்து வைப்பாய்.

முக்கிய நகழ்வுகள்:

* மகாத்மா காந்தியால் எனது அரசியல் தலைவர் மற்றும் வழிகாட்டி குரு என்று புகழப்பட்டவர்.

* 1899-ல் பம்பாய் சட்டபேரவை கவுன்சில் சபைக்கு தேர்வானார்.

* 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

* 1907-ல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இரண்டாகப் பிரிந்தது, அதில் மிதவாதிகளின் தலைவராகத் திகழ்ந்தார்.

* 1905-ல் பூனாவில் இந்தியப் பணியாளர் சங்கத்தைத் தொடங்கினார்.

* இந்தியப் பணியாளர் சங்கம், நடேஷ் அப்பாஜி திராவிட், கோபால் கிருஷ்ண தியோதர், ஆனந்த் பட்வர்தன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதும் இந்தியர்களின் சமூக மற்றும் மனித வள ஆற்றல்களை மேம்படுத்துவதும் ஆகும்.

* கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் (GIPE), பொதுவாக கோகலே இன்ஸ்டிடியூட் என்று அறியப்படுவது, இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான பொருளாதார ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது மஹாராஷ்டிராவின் பூனேவிலுள்ள டெக்கன் ஜிம்கானா பகுதியில் இருக்கும் பிஎம்சிசி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனம் திரு. ஆர்.ஆர். காலே அவர்களால் இந்திய சேவகர்கள் அமைப்புக்கு வழங்கப்பட்ட நிலையான நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்திய சேவகர்கள் அமைப்பினர் தான் இந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் ஆவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us