சட்டப் பிரிவுகள் 370, 35ஏ- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து

சட்டப் பிரிவுகள் 370, 35ஏ- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 வை மத்திய பாஜக அரசு நீக்குவதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதற்கு குடியரசு தலைவர், ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையுடன் கூடிய தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டபேரவையற்ற தனி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 370, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற வழிவகை செய்கிறது.

1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்கு பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார்.

மன்னர் ஹரி சிங், ஜம்மு & காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் 1949-இல் இணைக்க சம்மதித்தார்.

அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்கிறது. 1949-ல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 21 பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்தலின் கீழ் 370-வது பிரிவு வரையறுக்கப்பட்டது.

அம்மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற, நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பு கோரப்பட்டது.

1951ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீருக்கு என தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.

இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவானது, மத்திய அரசுக்கும், ஜம்மு காஷ்மீருக்குமான உறவின் ஒரு எல்லைக் கோடாக பார்க்கப்படுகிறது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய முதல்வராக இருந்த ஷேக் மொஹமத் அப்துல்லாவும், இது தொடர்பாக ஐந்து மாத காலம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இச்சட்டப்பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.

சட்டப்பிரிவு 370ன் படி, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிற, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு அம்மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும்.

இந்த சிறப்பு அந்தஸ்தால், அரசமைப்பின் சட்டப்பிரிவு 356, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. இதனால், அம்மாநில அரசை கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத் தலைவருக்கு கிடையாது.

சட்டப்பிரிவு 370 இருக்கும் காரணத்தினால் –

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்து மக்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளது.
  • இந்திய தேசிய கொடி அல்லாது, அம்மாநிலத்துக்கு என்று தனி கொடி உள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

அம்மாநிலத்தின் ‘நிரந்தர குடியாளர்கள்’ யார் என்பதை வரையறுப்பது அரசமைப்பின் பிரிவு 35A. இது சட்டப்பிரிவு 370-ன் ஒரு பகுதியாகும். இதன்படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள், ஜம்மு காஷ்மீரில் நிலமோ அல்லது சொத்தோ வாங்க முடியாது.

நாட்டில் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்த வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 360-ம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.

அதாவது அம்மாநிலத்தில் பொருளாதார அவசர நிலையை அறிவிக்க குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் கிடையாது. மற்ற நாடுகளுடன் போர் ஏற்பட்டால் மட்டுமே அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழல் மற்றும் வன்முறை நிலவினால்கூட, குடியரசுத்தலைவரால் அவசர நிலை அறிவிக்க முடியாது என்று இதன்மூலம் தெளிவாகிறது. ஜம்மு காஷ்மீர் அரசு பரிந்துரை செய்தால் மட்டுமே அவசர நிலையை பிரகடனப்படுத்த முடியும்.

 

அரசியல் சட்டப்பிரிவு 370-ல் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

* வெளியுறவு, தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை தவிர பிற துறை சார்ந்த நடவடிக்கைகள் மீது மத்திய அரசு நிறைவேற்றும் சட்டங்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

* சட்டவிதி எண் 370-ன் படி மாநிலத்தின் எல்லையைக் கூட்டவோ குறைக்கவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

* அவ்வாறு செய்தால் அதனை காஷ்மீர் மாநில சட்டப்பேரவையுடன் ஒப்புதலுடன் மட்டுமே செய்ய முடியும்.

* மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது. அவ்வாறு செய்வதற்கும் காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலுடன் மட்டுமே குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்ற திருத்தம் பின்னர் சேர்க்கப்பட்டது.

* ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துகளை வாங்க முடியாது. ஆனால் இவர்கள் பிற மாநிலங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

35ஏ என்ன சொல்கிறது?

அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும்,  ஜம்மு- காஷ்மீருக்கு தலைமை வகித்த ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் 1954 ஆம் ஆண்டு சட்டபிரிவு 35 ஏ-வை உருவாக்கி ஆணை பிறப்பித்தார். இது அரசியல் சட்டப்பிரிவு 370-ன் இணைப்பாக பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சட்டப்பிரிவு 35ஏ ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது.

* இந்தச் சட்டப்பிரிவு ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பதை நிர்ணயம் செய்கிறது.

* நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு சிறப்பு உரிமைகள் உள்ளன.

* அரசுப் பணி பெறும் உரிமை, நிலம், வீடு போன்ற சொத்து வாங்கும் உரிமை, அரசு ஊக்கத்தொகை மற்றும் பிற சலுகைகளைப் பெறும் உரிமைகளை அளிக்கிறது.

* இது நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

* வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது. ஆனால் அவர்கள் வெளி மாநிலங்களில் சொத்துகளை வாங்க முடியும்.

* அதுபோல மற்றவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது.

* ஜம்மு- காஷ்மீரில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பெண் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரையோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படாது.

* இதுபோன்ற பெண்கள் சொத்திலும் உரிமை கொண்டாட முடியாது.

 

 

இனி என்ன நடக்கும் ?
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் காஷ்மீர் மாநிலத்தில் செல்வாக்கு பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கும், அந்த மாநிலத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் பிரிவினைவாதிகளுக்கும் சிக்கல் ஏற்படும். ஒரே பிரதேசம் இரண்டாக உடைந்தால், எந்தப் பகுதிக்காகப் போராட முடியும் என்கிற கேள்வி எழும்.
மேலும், அந்த மாநிலத்தில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளும் பிரியும் நிலையும் உள்ளது. காஷ்மீரில் நீடித்துவரும் பிரச்னைக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு தனி கொடி, தனி அரசியல் சாசனம் என்று எந்த விதமான அதிகாரங்களும் இருக்காது.
இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்கு பொருந்தும். மாநிலத்தின் எல்லைகளை விரிவுப்படுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியல் சாசனத்தின் 370-வது விதி.
ஆனால் இனி மத்திய அரசு நினைத்தபடி எல்லைகளை மாற்றலாம். இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது என்ற நிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 6லிருந்து 5 ஆண்டுகளாக மாறுகிறது
இனி அனைத்து துறை சார்ந்தும்  மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அங்கு அமலுக்கு கொண்டு வர முடியும். இனி வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணமுடித்தால் அந்த ஆண்களால் இங்கு சொத்துகளை வாங்க முடியும். முன்பு இந்த அதிகாரம் கிடையாது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: