குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு: தேர்வாணைய அதிகாரிகளை நெருங்கும் சிபிசிஐடி!
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில், சென்னையில் மேலும் இரு தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முறைகேட்டுக்கு துணைப்போன கூறப்படும் தேர்வாணைய அதிகாரிகளை சிபிசிஐடி நெருங்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வின் தரவரிசை பட்டியல் நவம்பர் மாதம் வெளியானது. இதில் தரவரிசை பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தேர்வெழுதிய 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். இது தொடர்பாக தேர்வாணைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இரு தேர்வு மையங்களிலும் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன்,பாலசுந்தர்ராஜ் ஆகிய இருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், முறைகேடு செய்து தேர்வு எழுதிய ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ம.கார்த்தி, ஆவடி ஏகாம்பர சத்திரத்தைச் சேர்ந்த ம.வினோத்குமார், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியைச் சேர்ந்த க.சீனுவாசன் ஆகிய 3 பேரை திங்கள்கிழமை கைது செய்தனர். இதில் தேர்வராகவும் மட்டுமன்றி சீனுவாசன், இடைத்தரகராகவும் செயல்பட்டு தனக்கு தெரிந்த 4 பேர்களிடம் தலா ரூ.5 லட்சம் பெற்று ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெருங்கும் சிபிசிஐடி:
ஓம்காந்தன்,பாலசுந்தர்ராஜ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள் இரு நாள்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் இந்த முறைகேடு ஒட்டு மொத்தமாக தலைமறைவாக இருக்கும் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சியில் ஓம்காந்தனுக்கு மேலே உள்ள சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.
TNPSC Group 2 / 2A Video Course
இதனால் அவர்கள் குறித்த விவரங்களை சிபிசிஐடி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதனால் ஓரிரு நாள்களில் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சில அதிகாரிகளை விசாரணைக்கு அழைப்பதற்கு சிபிசிஐடி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர்கள் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறைகேட்டில் ரூ.10 கோடிக்கு மேல் கைமாறியிருக்கலாம் என சிபிசிஐடி அதிகாரிகள் கருதுகின்றனர். இதில் ஜெயக்குமாரின் கூட்டாளிகள் சிலர் தனியார் தேர்வு பயிற்சி மையங்களை தொடர்பு கொண்டிருப்பதும், தேர்வர்களிடம் பணத்தை பெற்று வழங்கியிருப்பதையும், இதற்கு ஒரு மாவட்டத்துக்கு ஒருவர் என பண வசூல் நடைபெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் தேர்வர்கள், பேரம் பேசி லஞ்ச பணத்தைக் குறைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் முறைகேட்டுக்குத் துணைப்போன தனியார் தேர்வு பயிற்சி மையங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை சிபிசிஐடி அதிகாரிகள், அடுத்தக் கட்ட விசாரணைக்கு அழைக்க உள்ளனராம்.
மேலும் இரு தேர்வர்கள் கைது:
இந்நிலையில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த த.விக்கி என்ற விக்னேஷ் (25), கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தனலட்சுமிநகரைச் சேர்ந்த இரா.சிவராஜ் (31) ஆகிய இருவரையும் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனர்.
விசாரணைக்கு பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் தேர்ச்சி பெறுவற்கு தலா ரூ.7.50 லட்சம் லஞ்சமாக வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சிவராஜ், மாற்றுத் திறனாளி ஆவார். ஏற்கெனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜசேகர்,சீனுவாசன் ஆகியோருக்கு சிவராஜ் உறவினர் ஆவார். இவர்கள் 3 பேரும் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்த வழக்கில் இது வரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.