உள்ளாட்சி தினம்
தமிழக உள்ளாட்சிகளின் வரலாற்றில் முத்திரை பதிக்கும் வகையில் சிறப்பான இரண்டு புதிய அத்தியாயங்கள் இன்று (2022 நவம்பர் 1) தொடங்குகின்றன. ‘உள்ளாட்சி தினம்’ கொண்டாட்டம், நகர்ப்புற உள்ளாட்சிகளில் ‘வார்டு குழு’, ‘பகுதிக் குழு’ செயலாக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் இன்று அரங்கேறுகின்றன. தமிழக மக்கள் இதற்காகப் பெருமைப்பட வேண்டும்.
உள்ளாட்சிகள் தினம்: உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய அரசமைப்பின் 73, 74ஆவது திருத்தங்கள் 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று செயல்பாட்டுக்கு வந்தன. இதனை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசால் ஆண்டுதோறும் ஏப்ரல் 22 ‘தேசிய பஞ்சாயத்து ராஜ்’ தினமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், உள்ளாட்சியில் செயல்படுத்தப்படும் திட்டச் செயலாக்கம் குறித்த ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், சாதனைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மக்கள் பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் தமிழகத்தில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் தேதி ‘உள்ளாட்சிகள் தினம்’ கொண்டாடப்படும் என முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இங்கு உள்ளாட்சி என்பது இரண்டு அமைப்புக்களுக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இன்று ‘உள்ளாட்சிகள் தினம்’ இரண்டு அமைப்புக்களிலுமே கொண்டாடப்படுகிறது. மக்களோடு நேரடித் தொடர்பில் செயல்படும் உள்ளாட்சிகளில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் இந்த முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்கது.
வார்டு குழு – பகுதிக் குழுக்கள்: இந்திய அரசமைப்பின் 73, 74 திருத்தங்களின்படி அரசமைப்புக் கூறு 243-Aஇன்படி ஒவ்வொரு ஊராட்சியிலும் ‘கிராம சபை’ அமைக்கப்படவும், கூறு 243-Sஇன்படி ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு குழுக்கள் (Ward committee) அமைக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது. 1994ஆம் ஆண்டின் ஊராட்சிகள் சட்டப்படி தமிழ்நாட்டில் ‘கிராம சபை’ 1996ஆம் ஆண்டிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனாலும் அதே காலகட்டத்தில் அரசமைப்பு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் ‘நகர்ப்புற உள்ளாட்சி வார்டு குழு’ இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
தற்போது உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சியிலும் ‘வார்டு குழுக்கள்’ – பகுதிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட அரசிதழ்களில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இக்குழுக்களின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தந்த வார்டு பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், அந்தந்த வார்டு பகுதியில் நடைபெறும் அரசின் அனைத்துத் துறைத் திட்டங்களினால் பயன்பெற்ற பயனாளிகள் பட்டியல், உள்ளாட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல் உள்ள நிலுவையாளர்களின் பட்டியல், அந்தப் பகுதியில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்துப் மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் விவரம் ஆகியவை இக்கூட்டத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இக்குழுக்களின் முதல் கூட்டம் இன்று (நவம்பர் 1)தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.
அரசமைப்புக் கூறுகளில் நிர்ணயிக்கப்பட்டவாறு வார்டு குழுக்கள் அமைக்கப்பட்டதை வரவேற்போம். இந்த நேரத்தில் அரசமைப்புக் கூறு 243-ZDஇன்படியும் 1994இல் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 241இன்படியும் வழிவகை செய்யப்பட்ட ‘மாவட்டத் திட்டக் குழுக்கள்’ இன்னும் செயல்முறைக்கு வரவில்லை என்பது கவனத்துக்கு வருகிறது.