Abdul Kalam, Kalpana Chawla awards Presented by TN CM

TN CM presents Abdul Kalam, Kalpana Chawla awards

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கிய பல்வேறு விருதுகள் விவரம்:

கல்பனா சாவ்லா விருது: ஐ.முத்துமாரிக்கு

வால்பாறை வட்டம் பெரியகல்லாறைச் சேர்ந்த ஐ.முத்துமாரிக்கு, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. இவ்விருது ரூ.5 லட்சம் காசோலை, தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம், சான்றிதழ் அடங்கியது.

முத்துமாரியின் மகள் சத்தியாவை அவரது வீட்டின் பின்புறம் சிறுத்தைப் புலி இழுத்துச் சென்றது. மகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த முத்துமாரி, விறகுக் கட்டையால் சிறுத்தைப் புலியை தனி ஆளாக அடித்து விரட்டினார். இதற்காக அவருக்கு விருதளிக்கப்பட்டது.

அப்துல் கலாம் விருது:

வான்வெளி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த தக்ஷ குழு:

எஸ்.தாமரைசெல்வி,

கே.செந்தில்குமார்,

சி.யு.ஹரி,

ஏ.முகமது ரஷீத்

இந்த ஆண்டுக்கான டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருது அண்ணா பல்கலைக்கழகத்தின் வான்வெளி ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த தக்ஷ குழுவுக்கு அளிக்கப்பட்டது. இந்த விருதை அண்ணா பல்கலைக்கழகத்தின் எஸ்.தாமரைசெல்வி, கே.செந்தில்குமார், சி.யு.ஹரி, ஏ.முகமது ரஷீத் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஆளில்லாத வான்வழி அமைப்புகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

அவற்றை, வருவாய் நிர்வாக அமைப்புகள், தமிழக வனத்துறை, சிறப்புப் பணி பிரிவு உள்பட தமிழக காவல் படைகள் ஆகியன பயன்படுத்தியுள்ளன. ஆளில்லாத வான்வெளி ஊர்தியானது 150 மீட்டர் உயரத்தில் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை தொடர்ந்து பறந்துள்ளது. இவ்விருதானது ரூ.5 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ் அடங்கியது.

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது: 

ஆன்-லைன் முறையைப் புகுத்தியதற்காக பதிவுத் துறைக்கும், மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய உணவுப் பொருள் வழங்கல் துறைக்கும், நோயாளிகள் வரும் முன்பே அவர்களின் நிலை குறித்து மருத்துவமனைக்குத் தெரிவித்து சிகிச்சைக்குத் தயார்படுத்தும் முறைக்காக மாநில சுகாதாரத் துறை என மூன்று துறைகளுக்கு நல் ஆளுமை விருதுகள் அளிக்கப்பட்டன.

பதிவுத் துறை சார்பாக அமைச்சர் கே.சி.வீரமணி,முதன்மைச் செயலாளர் கா.பாலச்சந்திரன், தலைவர் ஜெ.குமரகுருபரன்,

உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் அமைச்சர் ஆர்.காமராஜ், முதன்மைச் செயலர் குமார் ஜயந்த், ஆணையாளர் மதுமதி,

சுகாதாரத் துறை சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர், முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன்ஆகியோர் விருது பெற்றனர்.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக: 

பா.செந்தில்குமார்

லதா ராஜேந்திரனும்

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் பா.செந்தில்குமார் சிறந்த மருத்துவருக்கான விருதையும், சிறந்த சமூகப் பணியாளருக்கான விருதை சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். பேச்சு மற்றும் காது கேளாதோர் பள்ளி முதல்வர் லதா ராஜேந்திரனும் பெற்றனர்.

திருச்சி கைலாசபுரம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையமான அறிவாலயம், அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனமான டெட்டி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், அதிக கடனுதவி அளித்த சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றியதற்காக, சென்னையைச் சேர்ந்த ரிவர் என்ற அமைப்புக்கும், சமூகப் பணியாளருக்கான விருது கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.சிவக்குமாருக்கும் அளிக்கப்பட்டது. இந்த விருதுகள், 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழும் அடங்கியது.

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு:

சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஜி.ரவி ரூ.25 லட்சத்துக்கான காசோலையையும்,

சிறந்த நகராட்சிகளில் முதல் பரிசு பெற்ற கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கே.அட்சயா ரூ.15 லட்சத்துக்கான காசோலையையும்,

இரண்டாம் பரிசு பெற்ற கம்பம் நகராட்சி ஆணையாளர் என்.சங்கரன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும்,

மூன்றாம் பரிசு பெற்ற சீர்காழி ஆணையாளர் எம்.அஜிதா பர்வீன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும் பெற்றுக் கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.மாதையன் ரூ.10 லட்சம் காசோலையும்,

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் எம்.சித்திரைக்கனி ரூ.5 லட்சம் காசோலையும்,

தருமபுரி பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் பி.ஜலேந்திரன் ரூ.3 லட்சம் காசோலையும் பெற்றனர்.

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள்,

தேனி மாவட்டம் சி.பாஸ்கரன்,

கடலூர் மாவட்டம் அ.மகேஷ்,

திருநெல்வேலி மாவட்டம் அஷ்வீதா 

இந்த விருதுகள் ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்று, பதக்கம் கொண்டதாகும். அவர்கள் தங்களது கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், தனி வகுப்புகளை நடத்தியும், வீடில்லாதவர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தும், கிராமப்புறங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர்.

காவிரி தொழில்நுட்ப குழுமத்துக்கு பாராட்டு
முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள் வரிசையில், காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் ஆர்.சுப்பிரமணியனுக்கு பாராட்டுச் சான்றிதழை முதல்வர் வழங்கினார்.

உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் இருந்த சட்டப்பூர்வ வழக்குகளில் ஆலோசனை செய்தல், தொடர்புடைய ஆவணங்களைச் சேகரித்தல், வரைபடங்கள், ஆய்வறிக்கைகளைத் தயார் செய்தல், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை வரைவு செய்தல் பணிகளை காவிரி தொழில்நுட்பக் குழுமம் மேற்கொண்டது. இதற்காக நல் ஆளுமைக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

எஸ்.பி. பண்டி கங்காதருக்கு நல் ஆளுமை: தருமபுரி மாவட்டத்தில் காவல் துறை-பொது மக்கள் இடையிலான உறவில் நல்ல மாற்றத்தையும், இணைய செயலி மூலமாகப் பணியாளர்களிடையே தகவல் தொடர்பையும் உருவாக்கிய எஸ்.பி. பண்டி கங்காதருக்கு நல் ஆளுமைக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us