குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம்
The Criminal Procedure (Identification) Act, 2022
நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரலில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
சிறை கைதிகளை அடையாளம் காணும் 1920-ம் ஆண்டு சட்டத்துக்கு மாற்றாக குற்றவியல் நடைமுறை (அடையாளம்) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் காணவும் விசாரணை நடத்தவும் ஏதுவாக சிறைக் கைதிகள் மற்றும் பிறரின் அடையாள தரவுகளை சேகரிக்கவும் பாதுகாக்கவும் இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
இதன்படி, கைது செய்யப்படுவோர் மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்படுவோர் தங்களின் விரல் ரேகை, விழித்திரை மற்றும் கருவிழி ஸ்கேன், கையெழுத்து, உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு போன்ற தரவுகளை பகிர்ந்து கொள்வது கட்டாயம் ஆகிறது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் தேசிய குற்ற ஆவண காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, 75 ஆண்டுகள் மின்னணு வடிவில் பாதுகாக்க இந்த சட்டம் வகை செய்கிறது. அளவீடுகளை எதிர்க்கும் அல்லது கொடுக்க மறுக்கும் எந்தவொரு நபரின் அளவீடுகளையும் எடுக்க காவல் துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
சிறைத்தண்டனை கைதிகள் அடையாள சட்டம் 1920-க்கு மாற்றாக இந்த சட்டமுன்மொழிவு கொண்டு வரப்பட்டுள்ளது. 1920 வருட சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் ஆயுள் சிறை தண்டனை வரை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி (அல்லது) குற்றங்கள் புரிவதை வழக்கமாக கொண்டு, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நன்னத்தைகான பிணை பெற்ற நபர், குறைந்தபட்சம் 1 ஆண்டு சிறை தண்டனை பெற்றுக் கொடுக்கும் குற்றங்களில் கைது செய்யப்பட்ட நபர் ஆகியோரிடம் இருந்து கைவிரல் ரேகைகள் மற்றும் கால்தட பதிவுகளை பதிவு செய்யப்பட்டது.
ஆனால், தற்போது சட்ட முன்மொழிவு இந்த வரையறையை விரிவுபடுத்தியுள்ளது. உதாரணமாக, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள், தடுப்பு காவல் சட்டங்களின் கீழ் சிறைவைக்கப்பட்டவர்களின் கைவிரல்கள் பதிவுகள், உள்ளங்கை அச்சுப் பதிவுகள், கால்தடப் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் ( குருதி, வெண்ணிறத் திரவம், தலை முடி மாதிரிகள்) மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட நடத்தை பண்புகளை உள்ளடக்கிய தனிப்பட்ட உயிரியல் தரவுகளை சேகரிக்கவும், சேமித்து வைப்பதற்கும், பகுப்பாய்வு செய்ய காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குவதை இந்த சட்ட முன்மொழிவு கட்ட்டாயப்படுத்துகிறது.
இவ்வாறு சேகரிப்பட்ட தரவுகளை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சேமிக்கும். சிறைக்கைதிகளின் பயோமெட்ரிக் தரவுகளை 75 ஆண்டுகள் சேமித்து வைக்கும் உரிமையை இந்த சட்ட முன்மொழிவு வழங்கியுள்ளது.இந்த சட்ட முன்மொழிவின் கீழ், தரவுகளை தர மறுப்பது, எதிர்க்கலகம் செய்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும்.
பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது ஏழாண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தவிர, வேறு எந்தக் குற்றத்திலும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இந்த சட்ட முன்மொழிவின் கீழ் அவரது உயிரியல் மாதிரிகளை எடுக்க அனுமதிக்க மறுக்கலாம் (கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள் எடுப்பதை அவரால் மறுக்க முடியாது) என இச்சட்ட முன்மொழுவு கூறுகிறது