INS Vikrant ஐஎன்எஸ் விக்ராந்த் எனும் விமானம்தாங்கிப் போர்க் கப்பலின் சாதனைப் பயணம் 2009இல் தொடங்கியது. 2009இல், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
ஏறக்குறைய 2,000-க்கும் அதிகமான பொறியாளர்களின் 13 ஆண்டு காலக் கடும் உழைப்பில் விக்ராந்த் முழு வடிவம் பெற்றுள்ளது. அந்தக் கப்பலைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விமானம்தாங்கிப் போர்க் கப்பலைத் தயாரிக்கும் திறனைக் கொண்டிருந்தன. இந்நிலையில், அதிநவீனத் தானியங்கி அம்சங்களைக் கொண்டிருக்கும் விக்ராந்த்தைத் தயாரித்ததன் மூலம், அந்த நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.
விமானம்தாங்கிக் கப்பல் என்றால் என்ன?: பொதுவாக, விமானம்தாங்கிக் கப்பல் என்பது கடலில் உள்ள ஒரு விமானதளம் என்று புரிந்துகொள்ளலாம். போர் விமானங்கள் கடலின் நடுவிலிருந்து புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் ஏதுவான நீண்ட, தட்டையான தளத்தை அந்தக் கப்பல் கொண்டிருக்கும்.
பெரும்பாலும், கடலில் போர்க் குழுவை வழிநடத்தும் முதன்மைக் கப்பலாக அது இருக்கும். எந்தத் தாக்குதலிலிருந்தும் அதைப் பாதுகாக்கும் அரணாக அதைச் சுற்றி போர்க் கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் எப்போதும் ஆயத்த நிலையில் இருக்கும்.
விக்ராந்த் – பெயர்க் காரணம்: பிரிட்டிஷ் கடற்படையிடம் இருந்து 1961இல் இந்தியக் கடற்படை சேவையில் சேர்க்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம்தாங்கிப் போர்க் கப்பலின் பெயர் இது. வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்த பாகிஸ்தானுடனான 1971 போரில் அந்தக் கப்பல் முக்கியப் பங்கு வகித்தது. பழைய விக்ராந்த் வங்காள விரிகுடாவில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதிலிருந்து சீ ஹாவ்க் போர் விமானங்கள், அலிஸ் கண்காணிப்பு விமானங்கள் ஆகிய இரண்டு விமானப் படைப் பிரிவுகள் இயக்கப்பட்டன. அவை அந்தப் போரில் துறைமுகங்கள், வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட இலக்குகளின் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டன.
கடல்வழியாகப் பாகிஸ்தான் படைகள் தப்பிச் செல்வதையும் அவை தடுத்தன. 1997இல் அந்தக் கப்பல் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டது. இந்தியக் கடற்படைக்குப் பழைய விக்ராந்த் அளித்த பங்களிப்பைச் சிறப்பிக்கும் விதமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முதல் விமானம்தாங்கிப் போர்க் கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் ‘ஐஎன்எஸ்’ என்பது இந்தியக் கடற்படையைக் குறிக்கும் சுருக்கப் பெயர். இந்தியக் கடற்படை சேவையில் இணைக்கப்படுவதற்கு முன் ஐஏசி-1 என்கிற குறியீட்டுப் பெயரில் அது அழைக்கப்பட்டது.
விக்ராந்த்தின் சிறப்புகள்: முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட முதல் விமானம்தாங்கிப் போர்க் கப்பல் இது. இந்தியாவின் கடற்படை வரலாற்றில் இதுவரை கட்டப்பட்டதில் இதுவே மிகப் பெரியது; மிகவும் சிக்கலானதும்கூட. இந்தக் கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ், அதாவது 50 கி.மீ. 7,500 கடல் மைல்களைக் கடக்கும் திறன் இதற்கு உண்டு.
23,000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள விக்ராந்த்தின் எடை 44,000 டன்; நீளம் 262 மீட்டர்; அகலம் 62 மீட்டர். இரண்டு கால்பந்து மைதானங்களைவிடப் பெரியது. இந்தக் கப்பலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இரும்பின் அளவு மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமமானது. அதில் பயன்படுத்தப்படும் மின்னாற்றலால், கொச்சி நகரத்தின் பாதியை ஒளிரச் செய்ய முடியும். 14 அடுக்கு தளங்களைக் கொண்ட இந்தக் கப்பலில் 2,300 அறைகள் உள்ளன.
அவற்றில் பெண் அதிகாரிகளுக்கு எனச் சிறப்பு அறைகளும் உண்டு. இந்தக் கப்பலில் சுமார் 1,700 வீரர், வீராங்கனைகள் தங்க முடியும். இரண்டு அறுவைசிகிச்சை அறைகளுடன், ஒரு முழுமையான மருத்துவ வளாகம் இந்தக் கப்பலின் உள்ளே இருக்கிறது. கப்பலில் இருக்கும் சமையலறை மூலம் குறைந்தபட்சம் 2,000 பேரின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும்.
இந்தியத் தயாரிப்பு: விக்ராந்த்தில் இருக்கும் 76%-க்கும் அதிகமான பொருட்களும் கருவிகளும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை. இந்தக் கப்பலில் 21,500 டன் அளவுக்குச் சிறப்புத் தரம் கொண்ட எஃகு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்தச் சிறப்புத் தரம் கொண்ட எஃகும் இந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டது. விக்ராந்த்தின் வடிவமைப்புக்கும் விரிவான பொறியியலுக்கும் மேம்பட்ட மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. இந்த மென்பொருள், வடிவமைப்பாளருக்குக் கப்பலின் முழுமையான முப்பரிமாணக் காட்சியைப் பெற உதவியது.
இயக்கப்படும் விமானங்கள்: விமானங்கள் நிறுத்தும் இடத்தில் சுமார் 20 போர் விமானங்களை நிறுத்த முடியும். இந்தக் கப்பலிலிருந்து ரஷ்யத் தயாரிப்பான மிக்-29கே போா் விமானங்கள், கமோவ்-31 எனும் முன்னெச்சரிக்கை ஹெலிகாப்டா்கள், அமெரிக்கப் பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினின் எம்ஹெச்-60ஆா் மல்டிரோல் ஹெலிகாப்டா்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும்.
பிற விமானம்தாங்கிக் கப்பல்கள்: செப்டம்பர் 1 அன்று விக்ராந்த் சேவையில் இணைக்கப்பட்டபோது, இந்தியக் கடற்படையிடம் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா எனும் ஒரே ஒரு விமானம்தாங்கிப் போர்க் கப்பல் மட்டுமே இருந்தது. 2013இல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்படுவதற்கு முன், சோவியத் ஒன்றியத்தின் கடற்படையில் அட்மிரல் கோர்ஷ்கோவ் என்கிற பெயரில் அது சேவையாற்றிவந்தது.
விக்ரமாதித்யாவுக்கு முன்னர் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் விராத் என இரண்டு விமானம்தாங்கிப் போர்க் கப்பல்கள் சேவையாற்றிவந்தன. ஐஎன்எஸ் விக்ராந்த் 1961-லும், ஐஎன்எஸ் விராத் 1987-லும் இங்கிலாந்திடம் இருந்து பெறப்பட்டன.
விக்ராந்த்தின் முக்கியத்துவம்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை உணர்த்தும் விதமாக இரண்டு போர்க் கப்பல்களை நிலைநிறுத்தி உள்ளது. இந்தச் சூழலில், சீனாவை வலுவுடன் எதிர்கொள்வதற்குப் பல முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொண்டுவருகிறது.
அவற்றில் ஐஎன்எஸ் விக்ராந்த் முக்கியமானது. இந்தியக் கடற்படை சேவையில் விக்ராந்த் சேர்க்கப்பட்டுள்ளது, தொலைதூரக் கடல்களிலும் தனது ஆற்றலை நிலைநிறுத்தும் திறனை இந்தியக் கடற்படைக்கு வழங்கியிருக்கிறது. ஐஎன்எஸ் விக்ராந்த், தேசப் பாதுகாப்பில் சுயசார்பை நோக்கி நகரும் இந்தியாவின் பயணத்தில் முக்கியமான மைல்கல்