காமன்வெல்த் போட்டி 2022: வலு காட்டிய இந்தியா!

பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்றுவந்த 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. இந்த முறை இந்தியா பளுதூக்குதல், மல்யுத்தம், ஜூடோ, குத்துச்சண்டை போன்ற உடல் வலு சார்ந்த போட்டிகளில் முத்திரை பதித்திருக்கிறது.
பளுதூக்குதல்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று பதக்கக் கணக்கைத் தொடங்கிவைத்த மணிப்பூரைச் சேர்ந்த சாய்கோம் மீராபாய் சானு, காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று பதக்கக் கணக்கை தொடங்கி வைத்தார்.
அவரைத் தொடர்ந்து ஆடவர் 67 கிலோ எடைப் பிரிவில் மிசோரமைச் சேர்ந்த ஜெரிமை லால்ரின்னுங்கா தங்கப் பதக்கத்தை வென்றார். ஆடவர் 73 கிலோ எடைப் பிரிவில் மேற்கு வங்iகத்தைச் சேர்ந்த அசிந்த ஷுலி தங்கத்தை வென்று அசத்தினார்.
பளுதூக்குதலில் மேலும் சங்கெட் சர்கார், பிந்தியா ராணி, விகாஷ் தாகூர் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும் குருராஜ பூஜாரி, ஹரீந்தர் கவுர், லவ்பிரீத் சிங், குர்தீப் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
மல்யுத்தம்
மல்யுத்தத்தில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த முறையும் அதை நிரூபித்தது. ஆடவர் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் பஜ்ரங் பூனியா, மகளிர் ஃப்ரீஸ்டைல் 62 கிலோ பிரிவில் சாக்ஷி மாலிக், ஆடவர் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவில் தீபக் பூனியா, ஆடவர் 57 கிலோ பிரிவில் ரவிகுமார் தாஹியா, மகளிர் 53 கிலோ பிரிவில் வினேஷ் போகத் ஆகியோர் தங்கத்தை வென்று சாதனை படைத்தனர். மூவருமே ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள்.
இதேபோல அன்ஷு மாலிக் வெள்ளியையும் திவ்யா கக்ரான், மோஹித் கிரீவால், பூஜா கெலாட், பூஜா சிகாக் ஆகியோர் வெண்கலத்தையும் வென்றனர்.
குத்துச்சண்டை
குத்துச்சண்டை போட்டியிலும் இந்தியா முத்திரைப் பதிக்க தவறவில்லை. மகளிர் 48 கிலோ பிரிவில் நிது கங்காஸ், ஆடவர் 51 கிலோ பிரிவில் அமித் பங்கால், மகளிர் 50 கிலோ பிரிவில் நிகத் செரீன் ஆகியோர் தங்கங்களை வென்றெடுத்தனர். சாகர் அஹ்லவாட் வெள்ளியையும்; ஜாஸ்மின் லம்போரியா, முகமது ஹஷாமுதீன், ரோஹித் டோகஸ் ஆகியோர் வெண்கலத்தையும் வென்றனர்.
இதேபோல பாரா பவர்லிஃப்டிங்கில் ஹரியாணாவைச் சேர்ந்த சுதிர் தங்கப் பதக்கத்தை வென்று, இந்த விளையாட்டில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தினார். ஜூடோ விளையாட்டிலும் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களை இந்தியா வென்றது.
ஒட்டுமொத்தமாக இந்த காமன்வெல்த் போட்டியில் உடல் வலு சார்ந்த போட்டிகளில் 30 பதக்கங்களை இந்தியா வென்று புதிய பாதையை அமைத்திருக்கிறது.
ரூபா ராணி, நயமோனி சாய்கியா, பிங்கி சிங், லவ்லி சோபே ஆகியோர் அடங்கிய இந்திய மகளிரணி வரலாற்றில் முதன் முறையாக லான் பவுல்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கத்தை வென்று உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
டெல்லி காமன்வெல்த் போட்டியில் அறிமுகமான இந்த விளையாட்டில் 2010, 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்திய மகளிரணி பங்கேற்றபோதும் பதக்கம் கிடைக்கவில்லை. இப்போதுதான் மகளிரணி பதக்கம் வென்று சாதித்திருக்கிறது. |