சுகாதாரத் துறை TNPSC UNIT 9
சுகாதாரத் துறை பெற்ற ஏற்றங்கள்:
l சுகாதாரக் குறியீடுகள்
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் ‘மனித வளர்ச்சி அறிக்கை’ யின்படி நமது வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு 0.429இலிருந்து 0.645 ஆக அதிகரித்துள்ளது. நம்முடைய சராசரி ஆயுள்காலம் வெகுவாக அதிகரித்துள்ளது.
குழந்தை இறப்பு விகிதம், தாய் இறப்பு விகிதம் போன்றவை குறைந்திருக்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மேம்படுத்தப்பட்ட நோய்த்தடுப்பு, வளர்ந்து வரும் கல்வியறிவு போன்ற காரணங்களால் நாம் பெற்றிருக்கும் வளர்ச்சி இது.
குழந்தைகளுக்கான சுகாதாரச் சேவைகள் போன்ற முயற்சிகளும் போலியோ, எச்.ஐ.வி., காசநோய், தொழுநோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் தேசிய சுகாதாரத் திட்டங்களும் இந்தியாவின் சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.
l மேம்படுத்தப்பட்ட நோய்த்தடுப்பு
1970களில் போலியோவால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50,000 குழந்தைகள் ஊனமுற்றனர். 1980களில் காசநோய், எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் போன்ற தொற்றுநோய்கள் பொதுச் சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் பேரழிவை ஏற்படுத்தின.
இந்தச் சூழலில், இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் 1985இல் தொடங்கப்பட்டது. காசநோய், டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ், போலியோ, தட்டம்மை, ஹெபடைடிஸ் பி ஆகிய ஏழு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி வழங்குவது அந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது.
நாடு முழுவதும் வலுவான தடுப்பூசி விநியோகக் கட்டமைப்பை அது உருவாக்கியது. கோவிட் 19 பெருந்தொற்றுக் காலத்தில், தடுப்பூசி செலுத்துதலில் நாம் படைத்திருக்கும் அபரிமிதமான சாதனைக்கு இந்தத் திட்டமே அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
l அங்கீகாரத்திற்கு முக்கியத்துவம்
இந்தியாவில் சுகாதார அமைப்பு களுக்கான அங்கீகாரம் 1930களிலேயே தொடங்கிவிட்டது. இருப்பினும், முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கான தரநிலைகள் 1952இல்தான் செம்மைப்படுத்தப்பட்டன. 1990களில் அந்த அங்கீகாரத்துக்கான தரநிலைகள் புதுப்பிக்கப்பட்டன.
சுகாதார நிறுவனங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் நிறுவப்பட்டது. சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளுக்கான அங்கீகாரம் என்பது நோயாளிகள் அரிதாகக் கேள்விப்பட்ட ஒரு வார்த்தை.
இன்று இந்தியாவின் பல மருத்துவமனைகள் NABH அங்கீகாரம் பெற்றவையாக இருக்கின்றன. நோயாளிகளுக்குக் கிடைக்கும் சிகிச்சையின் தரத்தை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துகிறது.
l சமூக சுகாதாரப் பணியாளர்கள்
தேசத்தின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சமூகச் சுகாதாரப் பணியாளர்களின் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் உடல்நலத்தையும், ஊட்டச்சத்தையும் மேம்படுத்தி சிகிச்சை கிடைப்பதைச் சமூக சுகாதாரப் பணியாளர்கள் எளிதாக்குகின்றனர்.
2005இல் தேசியக் கிராமப்புற சுகாதார இயக்கத்தால் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். பின்தங்கிய பகுதி மக்களுக்கும் சுகாதார சேவை மையங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக அவர்கள் செயல்படுகின்றனர்.
l உறுப்பு தானத்தால் காக்கப்படும் உயிர்கள்
இறப்புக்குப் பிந்தைய உடல் உறுப்பு தானம், குறிப்பாகத் தமிழகத்தில் அதிக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. 2008இல் தமிழ்நாடு அரசு இறப்புக்குப் பிந்தைய உடல் உறுப்பு தானத் திட்டத்தை அறிமுகப் படுத்துவதற்கான அமைப்பு களையும், நடைமுறைகளையும் ஒன்றிணைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம், குடல் போன்ற 1,150 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.
உறுப்பு தானத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக ‘கிரீன் காரிடார்’ எனப்படும் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதி உள்ளது. செப்டம்பர் 2014இல், இரண்டு மணி நேரத்தில் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு ஒரு இதயம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர், பல நகரங்கள் பசுமை வழித்தடத்தின் மதிப்பைப் புரிந்துகொண்டன. பல நகரங்களில் தானமாகப் பெறப்படும் உறுப்புகள் அதிவிரைவாக நோயாளிகளை வந்தடைகின்றன.
l நெறிப்படுத்தப்பட்ட ஆயுஷ்
மார்ச் 1995இல் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இந்திய மருத்துவ முறைகள், ஹோமியோபதி தனித் துறையாக உருவாக்கப்பட்டது. மார்ச் 2003இல் அதன் பெயர் ஆயுஷ் என மாற்றப்பட்டது. 2005இல், இந்திய அரசு கிராமப்புறங்களில் சுகாதாரப் பரவலை மேம்படுத்தத் தேசியக் கிராமப்புற சுகாதார இயக்கத்தை அறிமுகப்படுத்தியது. இந்த இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், ஆயுஷ் அமைப்பு அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
மக்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கவும், அரசு சுகாதார வசதிகளில் பணிபுரியும் மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் ஆயுஷின் இணைப்பு உதவியது. நவம்பர் 2014இல் இது முழு அளவிலான அமைச்சகமாக மாறியது. இருப்பினும், ஆயுஷ் பயிற்சியாளர்களின் தரத்தை உறுதிசெய்யத் தெளிவான கொள்கைகளும் சட்டங்களும் இன்னும் தேவைப்படுகின்றன.
l அதிகரித்த காப்பீட்டு வசதி
ஹெல்த்கேர் ஃபைனான்சிங் வடிவிலான மருத்துவக் காப்பீடு இந்தியாவில் 1980களில் அறிமுகப் படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக, தனியார், பொது நிறுவனங்கள் பல்வேறு காப்பீடு பேக்கேஜ்களை வழங்கியதன் காரணமாக, இன்று இந்தியாவில் சுகாதாரக் காப்பீடு அதிகரித்துள்ளது. 55 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் ஏதோ ஒரு உடல்நலக் காப்பீட்டைப் பெற்றுள்ளனர். இது பத்தாண்டுக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையைவிடப் பத்து மடங்கு அதிகம்.
2007இல் தொடங்கப்பட்ட மத்திய அரசு வழங்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்குச் சுகாதாரப் பாதுகாப்பை வழங்குகிறது. தமிழகத்தில் ஏழைகளுக்கு வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் பெரும் வெற்றியைப் பெற்ற திட்டமாக உள்ளது.
l பல்ஸ் போலியோ திட்டம்
இந்தத் திட்டம் 1995இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ், 0-5 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்குப் போலியோ சொட்டு மருந்து தற்போதும் வழங்கப்படுகிறது. விரிவான பிரச்சாரம், விழிப்புணர்வு விளம்பரங்கள் மூலம், போலியோ பாதிப்பு இந்தியாவில் வெகுவாகக் குறைந்தது.
கடைசியாக 2011 ஜனவரி 13 அன்று மேற்கு வங்கத்தில் போலியோ பாதிப்பு பதிவானது. இந்தியாவைப் போலியோ இல்லாத நாடாக 2015இல் உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது.
l தேசியக் காசநோய் கட்டுப்பாடு திட்டம்
அனைத்து காசநோயாளிகளுக்கும் தரமான நோயறிதலையும் நோயைக் கட்டுப்பாட்டில் வைப்பதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக்கொண்டு இது தொடங்கப்பட்டது. 2012 இல் இத்திட்டத்தின் செயல்திறன் வெகுவாக மேம்படுத்தப்பட்டது.
இன்று காசநோய்களின் பாதிப்புகள் NIKSHAY இணையதளத்தில் உடனடியாக பதிவுசெய்யப்படுகின்றன. இதன் மூலம் சிகிச்சையின் தரமும் செயல்திறனும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
l தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம்
1999இல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தரவுகளின்படி, 2000இல் 2.74 லட்சமாக இருந்த புதிய எச்.ஐ.வி தொற்றுகளின் எண்ணிக்கை 2011இல் 1.16 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது, இந்தியாவில் வருடாந்திர புதிய எச்.ஐ.வி தொற்றுகளில் (வயது வந்தோர் மத்தியில்) 57 சதவீதம் எனக் குறைந்துள்ளது.
l மிஷன் இந்திர தனுஷ்
2014இல் இது தொடங்கப் பட்டது. இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கீழே உள்ள பட்டியலில் இருக்கும் ஏழு நோய்களுக்கு எதிராக முழுத் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்துவதே மிஷன் இந்திர தனுஷின் நோக்கம்:
# டிஃப்தீரியா
# கக்குவான் இருமல்
# டெட்டனஸ்
# காசநோய்
# போலியோ
# ஹெபடைடிஸ் பி
# தட்டம்மை
சமீபத்தில், இந்தத் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல், ஹீமோபிலஸ் இன்ஃபுளூயன்ஸா வகை பி ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படுகின்றன.
l பொதுச் சுகாதாரம்
1986இல் தொடங்கப்பட்ட மத்தியக் கிராமப்புறச் சுகாதாரத் திட்டம், கிராமப்புறங்களில் பாதுகாப்பான சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான சுதந்திர இந்தியாவின் ஆரம்ப முயற்சிகளில் ஒன்று. சுகாதார வசதிகளை உருவாக்க மானியம் வழங்குவதில் அது கவனம் செலுத்தியது.
பின்னர், அது மறுசீரமைக்கப்பட்டு ‘நிர்மல் பாரத் அபியான்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்தத் திட்டத்தின் திருத்தப்பட்ட இலக்கானது, 2022க்குள் அனைவருக்கும் கழிப்பறை, சுகாதாரத்தை மேம்படுத்துதல், பெண்களுக்குத் தனியுரிமையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்துதல், கிராமப்புற மக்களிடையே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2014 இல் ‘ஸ்வச் பாரத்’ இயக்கம் தொடங்கப்பட்டபோது, சுகாதாரம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தது. ‘ஸ்வச் பாரத்’ இயக்கத்தின் முதல் ஆண்டில் கிராமப்புறங்களில் 95 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
l மருத்துவச் சுற்றுலா
இன்று இந்தியா உலக மருத்துவ சுற்றுலா மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் குறைந்த செலவில் வழங்கப்படும் உலகத் தரத்திலான சிகிச்சையைப் பெறுவதற்கு, உலகெங்கும் இருந்தும் மக்கள் வந்துக்கொண்டிருகின்றனர்.
மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த `இந்தியாவில் குணமடையுங்கள்’ என்கிற இணைய தளத்தைச் சுதந்திர தினத்தன்று தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து ஆண்டு தோறும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தமிழகத்திற்கு வருகின்றனர்.
l கரோனா பெருந்தொற்று
அபரிமித மக்கள்தொகை, மக்கள் நெருக்கடி, சமூக வாழ்க்கை முறை, மத நிகழ்வுகள், தேர்தல்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருந்து தட்டுப்பாடு, மருத்துவமனை படுக்கைகள் போதாமை உள்ளிட்ட பல்வேறு பாதகங்களை மீறி இந்தியா, (குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்கள்) கரோனாவைச் சிறப்பாகவே எதிர்கொண்டது.