டிஜிட்டல் ரூபாய் – (e₹ – இ ரூபாய்)

டிஜிட்டல் ரூபாய் – (e₹ – இ ரூபாய்)

 

நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பித்தார். அப்போது அவர், விரைவில் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் (e₹ – இ ரூபாய்) அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அவர் சொன்னபடியே, நவம்பர் 1-ம் தேதி மொத்த பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்தது. வங்கிகளுக்கு இடையே அரசாங்கப் பத்திரங்கள் தொடர்பாக நடைபெறக்கூடிய பரிவர்த்தனைக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகள் டிஜிட்டல் ரூபாயை விநியோகிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருக்கிறது.

அடுத்தகட்டமாக, அகமதாபாத், காங்டாக், குவாஹட்டி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, சிம்லா, லக்னோ, பாட்னா ஆகிய நகரங்களுக்கும் கோட்டக் மஹிந்திரா வங்கி, பேங்க் ஆஃப்பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய வங்கிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? – டிஜிட்டல் ரூபாய்க்கும் யுபிஐ மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்குமான வேறுபாடு என்ன? டிஜிட்டல் ரூபாயும் கிரிப்டோகரன்சியும் ஒன்றா? இதை யார் எந்த வடிவத்தில் விநியோகிப்பார்கள்? விரிவாகப் பார்க்கலாம்.

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? – இப்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள், நாணயங்களுக்கு இருப்பது போன்ற வடிவம் எதுவும் டிஜிட்டல் ரூபாய்க்கு இருக்காது. ஆனால் இப்போது இருக்கும் ரூபாய் நோட்டுகளில் இருப்பது போலவே டிஜிட்டல் ரூபாய்க்கும் சீரியல் எண்கள் இருக்கும். டிஜிட்டல் ரூபாயை மொபைல் செயலி வழியாக பயன்படுத்த முடியும்.

இந்த டிஜிட்டல் ரூபாயை எங்கு வாங்குவது? – டிஜிட்டல் ரூபாய் இன்னும் முழுமையான அளவில் பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. பரீட்சார்த்த முயற்சியாக குறிப்பிட்ட சில நகரங்களில் உள்ள சில வங்கிகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது டிஜிட்டல் ரூபாய் வாங்க வேண்டுமென்றால், மேலே குறிப்பிடப்பட்ட வங்கிகளின் அதிகாரப்பூர்வமான செயலி அல்லது இணைய தளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

டிஜிட்டல் ரூபாயை நீங்கள் வேறு யாருக்கும் அனுப்ப முடியுமா? – ஆமாம். இதை உங்களுக்குத் தெரிந்த யாருக்கு வேண்டுமென்றாலும் அனுப்ப முடியும். ஆனால் இதை இதற்கான செயலி மூலம் தான் செய்ய முடியும். நாம் இப்போது பேடிஎம் போன்ற டிஜிட்டல் வாலெட்டில் பணத்தை சேமித்து பரிவர்த்தனை செய்வதுபோல டிஜிட்டல் ரூபாயையும் டிஜிட்டல் வாலெட்டில் வைத்து அனைத்து விதமான பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும்.

டிஜிட்டல் ரூபாயை எப்படிப் பயன்படுத்துவது? – தனிநபர் – தனிநபர், தனிநபர் – வணிகர் இடையே டிஜிட்டல் ரூபாயை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என ரிசர்வ்வங்கி உறுதிப்படுத்தி இருக்கிறது. ‘க்யூஆர்’ குறியீடுகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரூபாயை செலுத்த முடியும். “டிஜிட்டல் ரூபாய் என்பது வடிவமுள்ள பணத்தின் நம்பிக்கை, பாதுகாப்பு போன்ற அம்சங்களை வழங்கினாலும் இதற்கு வட்டி எதுவும் கொடுக்கப்படமாட்டாது. ஆனால் வங்கிகளில் வைப்புத் தொகையாக இதை மாற்றிக் கொள்ளலாம்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது, டிஜிட்டல் ரூபாயை உங்கள் தனிப்பட்ட மொபைல் வாலெட்டில் வைத்திருக்கும்பட்சத்தில் அதற்குவட்டி வழங்கப்படாது. மாறாக, டிஜிட்டல் ரூபாயை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்திருக்கும்போது அதற்கு வட்டி வழங்கப்படும்.

டிஜிட்டல் ரூபாயும் கிரிப்டோகரன்சியும் ஒன்றா? – டிஜிட்டல் ரூபாயும் கிரிப்டோகரன்சியும் ஒன்று என தவறான கருத்து நிலவுகிறது. கிரிப்டோகரன்சி எந்தவொரு நாட்டின் அரசு கட்டுப்பாட்டிலும் அரசு அமைப்பின் கீழும் இயங்கவில்லை. எனவே யாரும் இதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் டிஜிட்டல் ரூபாய் அப்படியில்லை. நாம் இப்போது உபயோகப்படுத்தும் பணத்தின் டிஜிட்டல் வடிவம்தான் இந்த டிஜிட்டல் ரூபாய். இது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுவதால் பாதுகாப்பானது. கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதுபோல டிஜிட்டல் ரூபாயில் முதலீடு செய்ய முடியாது. டிஜிட்டல் ரூபாய் மதிப்பில் எந்தவொரு ஏற்ற இறக்கமும் இருக்காது.

டிஜிட்டல் ரூபாயின் நன்மை என்ன? – இப்போது புழங்கிவரும் காகிதப் பணத்தை நிர்வகிப்பதற்கும் அச்சடிப்பதற்குமான செலவு குறையும். 2021-22 நிதி ஆண்டில் மட்டும் ரிசர்வ் வங்கியானது ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க சுமார் ரூ.4,984 கோடி செலவிட்டதாகவும், 2008-09 நிதி ஆண்டு செலவிட்ட தொகையைவிட இது 1.5 மடங்கு அதிகம் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது. டிஜிட்டல் ரூபாய் பரவலாக உபயோகப்படுத்தப்படும்பட்சத்தில் ரூபாய் நோட்டு அச்சடிப்பதற்கான தேவை குறையும். கருப்புபணத்தையும் கள்ள நோட்டையும் ஒழிக்க முடியாவிட்டாலும் குறைக்க டிஜிட்டல் ரூபாய் உதவும் என நம்பப்படுகிறது.

“இனி வரும் காலத்தில் பணப்பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆபத்து இல்லாததாகவும் மாறும் என்பதோடு நிதி தொழில்நுட்ப (ஃபின்டெக்)துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் டிஜிட்டல் ரூபாய் வழி வகுக்கும்” என பிரதமர் நரேந் திர மோடி டிஜிட்டல் ரூபாய் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் என்பது இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் ஒரு மைல்கல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: